
550 முறை, 'ரீ -ரிலீஸ்!'
கன்னட சூப்பர் ஸ்டாரான, சிவராஜ்குமார் தமிழில், ரஜினியுடன், ஜெயிலர், தனுசுடன், கேப்டன் மில்லர் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், சில படங்களில் நடித்து வருகிறார். அதோடு கன்னடத்தில், சிவராஜ் குமார் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன.
குறிப்பாக, 1995ல், உபேந்திரா இயக்கத்தில், சிவராஜ்குமார் நடித்து வெளியான படம், ஓம். பெங்களூரில் உள்ள கேங்ஸ்டர் கதையில் உருவான இந்த படம் இதுவரை கர்நாடகாவில், 550 முறை, 'ரீ - ரிலீஸ்' செய்யப்பட்டு, ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருக்கிறது.
சினிமா பொன்னையா
தமிழில், 'பிசி'யாகும், பூஜா ஹெக்டே!
விஜயுடன், பீஸ்ட் படத்தில் நடித்த மும்பை நடிகை, பூஜா ஹெக்டேவுக்கு அதன் பிறகு தமிழில் உடனடியாக புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது மீண்டும், விஜயின், 69வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை அடுத்து, சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார். அந்த வகையில் தமிழில், ஒரே நேரத்தில், மூன்று முன்னணி நடிகர்களின் படங்களில், 'கமிட்' ஆகியுள்ளார், பூஜா ஹெக்டே.
— எலீசா
பக்தி படங்களில் நடிக்கும், த்ரிஷா - நயன்தாரா!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த, நயன்தாரா, தற்போது, அதே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். ஆனால், இந்த இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.
அதேபோல், மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய, ஆர்.ஜே.பாலாஜி, தற்போது, மாசாணி அம்மன் என்ற படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தில், த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். இந்த இரண்டு பக்தி படங்களின் படப்பிடிப்புகளும் விரைவில் துவங்க உள்ளது.
எலீசா
அம்மா இடத்தை பிடிக்க ஆசைப்படும், ஜான்வி கபூர்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்விகபூர், ஜூனியர் என்.டி.ஆர்., நடித்துள்ள, தேவரா என்ற படத்தின் மூலம் தென் மாநில சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்திருக்கிறார். இதன் பிறகு தமிழில் நடிப்பதற்கு சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
'தமிழ் சினிமாவில் என் அம்மா விட்டு சென்ற இடத்தை, நான் தொடர போகிறேன். அதனால், அழுத்தமான, உருக்கமான கதைகளில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள்...' என, கோரிக்கை வைத்து வருகிறார். மேலும், 'என் அம்மாவுக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் கொடுத்த அதே அன்பு எனக்கும் கிடைக்கும் என, உறுதியாக நம்புகிறேன்...' என்கிறார், ஜான்வி கபூர்.
— எலீசா
சொந்த கதையை படமாக்கும், மாரி செல்வராஜ்!
மாமன்னன் படத்தையடுத்து, தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சோக கதைகளை மையமாக வைத்து, வாழை என்ற படத்தை இயக்கி வெளியிட்டார், மாரி செல்வராஜ். 5 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட அந்த படம், 40 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை செய்துள்ளது.
இதன் காரணமாக, மீண்டும், வாழை படத்தின் பல பாகங்களை இயக்கி, வெளியிடப் போவதாக கூறும் மாரி செல்வராஜ், 'என்னுடைய சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற இன்னும் பல சோகமான சம்பவங்களை தொகுத்து, இந்த படங்களில் சொல்லப் போகிறேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
உலக நடிகரை வைத்து, லஞ்சத்துக்கு எதிரான அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிட்டார், பிரம்மாண்ட இயக்குனர். ஆனால், அப்படம் படுதோல்வி அடைந்து விட்டது. இருப்பினும், அதே படத்தின், மூன்றாம் பாகத்திற்கான அதிகப்படியான காட்சிகளை ஏற்கனவே படமாக்கி விட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளை படமாக்க வேண்டும் என, தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.
ஆனால், இரண்டாம் பாகத்தை, 300 கோடி ரூபாய் வாரி இறைத்து தயாரித்து, 150 கோடி கூட கைசேரவில்லை. அதனால், மூன்றாம் பாகத்தின் மீது நம்பிக்கை வைத்து, மேலும், 300 கோடி ரூபாயை வாரி இறைக்க நாங்கள் தயாராக இல்லை என, கிடப்பில் போட்டு விட்டது, தயாரிப்பு நிறுவனம். இதையடுத்து, உலக நடிகரும், பிரமாண்ட இயக்குனரும் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சினி துளிகள்!
* ராம்சரண் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில், ஷங்கர் இயக்கி உள்ள கேம் சேஞ்சர் படம், டிச., 20ம் தேதி வெளியாகிறது.
* தமிழில், அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் என, பல படங்களில் நடித்த, நந்திதா தாஸ், நீண்ட காலமாக தமிழில் நடிக்காமல் இருந்தார். தற்போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் புதிய படத்தில் மீண்டும்'ரீ என்ட்ரி' கொடுத்துள்ளார்.
* தனுசுக்கு ஜோடியாக வாத்தி என்ற படத்தில் நடித்த, சம்யுக்தா தற்போது சுயம்பு என்ற படத்தில் போர் வீராங்கனையாக நடிக்கிறார்.
அவ்ளோதான்!