
அதிரடி, 'ஆக்ஷன்' கதையில், கமல்!
இந்தியன் - 2 படுதோல்வி அடைந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருக்கும், தக்லைப் படத்தை எதிர்பார்க்கிறார், கமலஹாசன். இதையடுத்து இரட்டை ஸ்டன்ட் இயக்குனர்களான, அன்பறிவ் இயக்கும் அதிரடி, 'ஆக்ஷன்' படத்தில் நடிக்கப் போகிறார், கமலஹாசன். இந்த படத்தில், ஏ.ஐ., தொழில்நுட்பத்திலும் சில சண்டை காட்சிகள் உருவாக இருக்கிறது.
சினிமா பொன்னையா
நயன்தாரா, த்ரிஷாவுக்கு, 'ஷாக்' கொடுக்கும், மஞ்சுவாரியர்!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், மஞ்சுவாரியர் தமிழில், தனுஷ், அஜித் மற்றும் ரஜினி என, முன்னணி, 'ஹீரோ'களின் படங்களில் அடுத்தடுத்து நடித்தார்; தற்போது, விஜய் சேதுபதியுடன், விடுதலை - 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து, மஞ்சுவாரியரை கதையின் நாயகியாக வைத்து, படம் இயக்கினால் அந்த படத்தை மலையாள சினிமாவிலும் பெரிய அளவில் வியாபாரம் செய்யலாம் என்பதால், ஏற்கனவே, நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகளிடம் கதை சொல்லி இருக்கும் சில இயக்குனர்கள் தற்போது, மஞ்சுவாரியர் பக்கம் திரும்பி இருக்கின்றனர்.
இதனால், மேற்படி, இரு நடிகையரும், இந்த நடிகை தங்களது மார்க்கெட்டை ஆட்டம் காண வைத்து விடுவார் போலிருக்கே என, பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
— சினிமா பொன்னையா
'ஹீரோயின்' ஆகும், சாரா!
தமிழில், விக்ரம் நடித்த, தெய்வத்திருமகள் படத்தில், அவரது மகளாக நடித்தவர், சாரா அர்ஜுன். அதன் பிறகு, சைவம், விழித்திரு மற்றும் பொன்னியின் செல்வன் என, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த, சாராவுக்கு, தற்போது, 19 வயது ஆகிறது.
இந்நிலையில், ஹிந்தியில், தீபிகா படுகோனேவின் கணவரான, ரன்வீர் சிங்குடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார். இதையடுத்து தமிழில், 'ஹீரோயின்' ஆக நடிப்பதற்கு தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.
எலீசா
கறுப்புப் பூனை!
கவர்ச்சி விவகாரத்தில் தொடர்ந்து செக்போஸ்ட் வைத்து நடித்து வரும் அந்த, டான் பட நடிகை, சமீபத்தில், ஜெயமான நடிகருடன் ஒரு படத்தில் நடித்தபோது, அவரது கை தன் உடம்பில் படக்கூடாத ஏரியாவில் பட்டதை அடுத்து, அவரது கன்னத்தில், 'பளார்' விட்டுள்ளார்.
அதையடுத்து நடிகர், 'இதை நான் திட்டமிட்டு செய்யவில்லை. தவறுதலாக என் கை பட்டு விட்டது...' என்று அம்மணிக்கு தெளிவுபடுத்தியதை அடுத்து, சமாதானமான அம்மணி, நடிகரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பாலிவுட், 'காஸ்டியூமர்'களை தனக்கு நியமித்து, அதற்கான பட கூலியை தயாரிப்பாளர்களை கொடுக்க வைத்து வந்தார், தாரா நடிகை. ஆனால், திருமணத்திற்கு பிறகு, தன், இரண்டு மகன்களையும் படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்து செல்பவர், அன்றைய தினம் அவர்களுக்கான மொத்த செலவையும் தயாரிப்பாளர் தலையிலே கட்டுகிறார். மேலும், இரண்டு மகன்களையும் பராமரிக்க வரும் ஆயாக்களுக்கும் தயாரிப்பாளர்களையே சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கெடுபிடி செய்கிறார்.
இதனால், 'இவருக்கே பல கோடிகள் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் நிலையில், 'எக்ஸ்ட்ரா' இன்னும் சில கோடிகளை கொடுக்க வேண்டியதிருக்கே...' என, தாரா நடிகையை வைத்து படம் தயாரிப்பவர்கள் புலம்பி தள்ளுகின்றனர்.
சினி துளிகள்!
* தனுஷ் இயக்கி இருக்கும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார், பிரியங்கா மோகன்.
* மணிரத்னம் இயக்கிய பென்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், அடுத்தபடியாக தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்.
* விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பீனிக்ஸ் வீழான் என்ற படத்தில், 'ஹீரோ'வாக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தை, ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கி வருகிறார்.
* ப்ளூ ஸ்டார் படத்தை அடுத்து, எமக்கு தொழில் ரொமான்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் அசோக் செல்வன்.
* ஹிந்தியில், ஷாருக்கானுடன், ஜவான் படத்தில் நடித்த, நயன்தாரா மீண்டும் பாலிவுட், ‛மெகா' நடிகர்களின் பட வாய்ப்புகளுக்கு கல்லெறிந்து வருகிறார்.
அவ்ளோதான்!