
அம்பானி குடும்பத்துடன், 'டீல்' போட்ட, நயன்தாரா!
சினிமாவில் நடிப்பதுடன், நாப்கின் விற்பனை மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை என, பல தொழில்களை நடத்தி வருகிறார், நடிகை நயன்தாரா. தற்போது, தன்னுடைய நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதற்காக, தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள், இஷா அம்பானி உடன் கைகோர்த்துள்ளார், நயன்தாரா.
இனி, நயன்தாராவின் நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதன பொருட்கள், 'ரிலையன்ஸ்' நிறுவனம் நடத்தும் கடைகளிலும் விற்பனைக்கு வரப்போகிறது. அம்பானி குடும்பத்துடனான இந்த, 'டீல்' மூலம், தொழில் அதிபராகவும் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறார், நயன்தாரா.
— சினிமா பொன்னையா
மிரட்டல் பேயாக, ராஷ்மிகா மந்தனா!
இதுவரை, 'ரொமான்டிக்' நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும், ராஷ்மிகா மந்தனா, முதல் முறையாக, ஹிந்தியில் தயாராகும், தமா என்ற, 'ஹாரர்' படத்தில், மிரட்டல் பேயாக நடிக்கப் போகிறார்.
'நீண்ட காலமாகவே இது போன்ற, 'திரில்லர்' படத்தில் நடிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த எனக்கு, இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு, பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது...' என்று கூறுகிறார், ராஷ்மிகா மந்தனா.
மேலும், 'இதுவரை எத்தனையோ பேர், பேய் வேடத்தில் நடித்திருந்த போதும், அதை எல்லாம் மிஞ்சும் வகையில், இந்த படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி, தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை அலறவிடப் போகிறேன்...' என்கிறார்.
எலீசா
அண்ணாவை விட்டு, சாரை கையில் எடுத்த, சாய் பல்லவி!
தன்னுடன் நடிக்கும், 'ஹீரோ'களை கூட, அண்ணா என்று தான் அழைப்பார், சாய் பல்லவி. ஆனால், இதை பெரும்பாலான, 'ஹீரோ'கள் ரசிக்கவில்லை.
'என்னுடன், 'டூயட்' பாடிக் கொண்டு, என்னையே அண்ணா என்று அழைப்பதா?' என, அவரிடம் கேள்வி கேட்க துவங்கினர். அதனால், எதற்கு வம்பு என, இப்போது தன்னுடன், 'டூயட்' பாடும் அத்தனை, 'ஹீரோ'களையும், சார் என்று அழைக்க துவங்கிவிட்டார், சாய்பல்லவி.
— எலீசா
ஷாருக்கானின் கடைசி ஆசை!
பாலிவுட் சினிமாவில், ஒரு படத்தில் நடிக்க, 250 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார், ஷாருக்கான். சமீபத்தில், தன் கடைசி ஆசை குறித்து, ஒரு பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், 'நான் இறக்கும் வரை, சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். படப்பிடிப்பு தளத்திலேயே, என் உயிர் பிரிய வேண்டும். அதிலும், ஒரு இயக்குனர், 'ஆக்ஷன்' சொல்ல, அதற்கு நான் நடித்துக் கொண்டிருக்கும் போதே, இறக்க வேண்டும். இதுதான் என்னுடைய கடைசி ஆசையாக இருக்கிறது...' என்று தெரிவித்திருக்கிறார், ஷாருக்கான்.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
தன் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு, 50 முதல் 60 கோடி ரூபாயை கரைத்து விட்டுள்ளார், தளபதி நடிகர். இதை பார்த்த அவரது அபிமானிகள், 'அரசியல் ரொம்ப ஆபத்தானது. ஆட்சியை பிடிக்க போகிறேன். முதல்வராக போகிறேன் என்று சொல்லி, இதுவரை சம்பாதித்த காசை எல்லாம் கரைத்து விடாதீர்கள்...' என்று, அவரை உஷார்படுத்தி வருகின்றனர்.
இதனால், அடுத்தடுத்து தன் கட்சி சார்பில் நடைபெறும் மாநாடுகளுக்கு கோடிகளை கொட்டுவதற்கு, சில பண முதலைகளை அழைத்து, கட்சியில் முக்கிய பொறுப்புகள் கொடுப்பதற்கும் திட்டமிட்டு வருகிறார், தளபதி நடிகர்.
டியர் காம்ரேட் நடிகரை, தான் காதலிக்கவில்லை என்று, புஷ்பா நடிகை சொன்னபோதும், இப்போதும் அவர்கள், ரகசியமாக காதலித்து வருவதாக, டோலிவுட்டில் தகவல் கசிந்து இருக்கிறது. குறிப்பாக, சமீபத்தில் தீபாவளி பண்டிகையின் போது, மேற்படி நடிகரின், 'கெஸ்ட் ஹவுஸு'க்கு சென்று, அவருடன் தான் தீபாவளியை கொண்டாடி இருக்கிறார், புஷ்பா நடிகை.
அந்த வகையில், தங்களது காதல் விவகாரத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டால், நடிகையின் சினிமா மார்க்கெட் பாதிக்கும் என்பதற்காக, இருவரும் ரகசியமாக குடித்தனம் நடத்திக் கொண்டு, அதை வெளியில் தெரியாமல் மறைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
சினி துளிகள்!
* தற்போது விஜய் நடித்து வரும், 69வது படத்தை, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
* கடந்த, 2012 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த, வயலின் கலைஞர் பெனடிக்ட் டைலர் என்பவரை திருமணம் செய்து கொண்ட, நடிகை ராதிகா ஆப்தே, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கர்ப்பமாகி இருக்கிறார்.
* தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில், ஷங்கர் இயக்கி உள்ள, கேம் சேஞ்சர் படம், வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது.
* தற்போது தெலுங்கில், சிரஞ்சீவி உடன் நடித்துள்ள, விஸ்வாம்பரா படம் வெற்றி பெற்றால் அடுத்து, தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார், த்ரிஷா.
அவ்ளோதான்!