
ஷாருக்கானை அதிரவைத்த அல்லு அர்ஜூன்!
பாலிவுட் சினிமாவில், ஷாருக்கானின் படங்கள் தான் அதிகமாக வசூலித்து வருகிறது. குறிப்பாக, அவர் நடித்து திரைக்கு வந்திருந்த, ஜவான் படம் முதல் நாளில், 65.50 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால், தெலுங்கில், அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியான, புஷ்பா -2 படம் ஹிந்தியில் முதல் நாளில், 72 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.
தெலுங்கில் உருவாகி, ஹிந்தியில், 'டப்' செய்து வெளியிடப்பட்ட ஒரு படம் பாலிவுட்டில் அதிகப்படியான வசூலை வாரி குவித்திருப்பது, ஷாருக்கான் உள்ளிட்ட ஹிந்தி சினிமாவின் முன்னணி, 'ஹீரோ'களுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
— சினிமா பொன்னையா
விஜயசாந்தி பாணிக்கு மாறும் நயன்தாரா!
ஒரு காலத்தில், 'லேடி சூப்பர் ஸ்டார்' ஆக இருந்தார், விஜயசாந்தி. அவருக்கு பிறகு, அந்த பட்டத்தை இப்போது, நயன்தாரா கைப்பற்றி இருக்கிறார். இதற்கு முன், 'ஆக்ஷன்' கதைகளில் நடிக்காமல் இருந்து வந்தார், நயன்தாரா.
இப்போது தானும், 'ஆக்ஷன்' பக்கம் திரும்பி இருப்பதோடு, இனிமேல், ஆண்டுக்கு ஒரு படத்திலாவது அதிரடியான, 'ஆக்ஷன்' கதையில் நடிக்க வேண்டும் என்று, 'ஆக்ஷன்' பட இயக்குனர்களிடம் தனக்கேற்ற கதையை தயார் பண்ணுமாறு கூறி வருகிறார். அதோடு, ஒரு பிரபல ஸ்டன்ட் மாஸ்டரை நியமித்து, கடந்த சில மாதங்களாக தீவிர சண்டை பயிற்சியும் கற்று வருகிறார், நயன்தாரா.
— எலீசா
காதலர் குடும்பத்துடன் ராஷ்மிகா மந்தனா!
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை தான் காதலிப்பதாக வெளியான செய்தியை இதுவரை மறுத்து வந்த, ராஷ்மிகா மந்தனா தற்போது, அதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த தீபாவளியை விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தாருடன் கொண்டாடியதுடன், தன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த, புஷ்பா- 2 படத்தையும் அவர்களுடன் தியேட்டரில் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.
மேலும், தெலுங்கில், கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில், விஜய் தேவரகொண்டாவுடன்- இணைந்து நடித்த, ராஷ்மிகா மந்தனா மீண்டும் தெலுங்கில், ராகுல் சங்கிரியன் என்பவர் இயக்கும் படத்தில் இணைந்து நடிக்க போகின்றனர்.
— எலீசா
கெட் அப்பை மாற்றிய எஸ்.ஜே. சூர்யா!
பெரும்பாலும், 'ஹீரோ'கள் தான் படத்துக்கு படம் தங்களது, 'கெட்-அப்'பை மாற்றுவதில் அதிகப்படியான கவனம் செலுத்துவர். தற்போது முன்னணி வில்லனாக இருக்கும், எஸ்.ஜே.சூர்யா படத்துக்கு படம் தன், 'கெட்-அப்'பை மாற்றுவதில் தீவிரம் காட்டுகிறார்.
அந்த வகையில், சர்தார்- 2 படத்தில், சீன உளவாளியாக தான் நடிக்கும் வில்லன் வேடத்துக்காக, சீனாவை சேர்ந்த வில்லன் நடிகர்களை போன்று, 'ஹேர் ஸ்டைல்' மற்றும் மீசை உள்ளிட்ட, தன், 'கெட்-அப்'பை முழுமையாக மாற்றிக் கொண்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
மீண்டும் புதிய படங்களில், 'கமிட்' ஆகி, 'பிசி' ஆக இருக்கும், மூனுஷா நடிகை, தன்னை மேலும், 'ஸ்டெடி' செய்யும் முயற்சியாக, மார்க்கெட்டில் இருக்கும் தன், 'மாஜி ஹீரோ'கள் சிலரை மீண்டும் துரத்தி வருகிறார்.
குறிப்பாக, இதுவரை, 'பார்ட்டி' மற்றும் கொண்டாட்டம் என்றால், தன், 'பாய் பிரண்டு'களுடன் மட்டுமே என இருந்த நடிகை, தற்போது, 'மாஜி ஹீரோ'களுடனும் கொண்டாட்டத்தை துவங்கி இருக்கிறார்.
அம்மணியின் இந்த திடீர் கரிசனம் காரணமாக அவரது அரவணைப்பில் ஐக்கியமாகி இருக்கும் மேல்தட்டு நடிகர்கள், தாங்கள் நடிக்கும் படங்களில் அவருக்கான சிபாரிசுகளை முடுக்கி விட்டுள்ளனர். இதனால், கோலிவுட் மார்க்கெட்டில் மேலும் எகிறி அடிக்கப் போகிறார், மூனுஷா.
சினி துளிகள்!
* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும், கூலி படத்தில் அவருடன் இணைந்து, பாலிவுட் நடிகர் அமீர்கான், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் கன்னட நடிகர் உபேந்திரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
* விடாமுயற்சி படத்தை அடுத்து, குட் பேட் அக்லி படத்திலும், அஜித்தின் மனைவியாக நடிக்கிறார், த்ரிஷா.
* விஷாலின் மார்க்கெட், 'டல்' அடித்து வருவதை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தில் அவரை வில்லனாக நடிக்க அழைப்பு விடுத்தனர். அப்போது, 'என் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்தாலும் வில்லனாக மட்டும் ஒரு போதும் நடிக்க மாட்டேன்...' என்று, அந்த அழைப்பை நிராகரித்து விட்டார்.
அவ்ளோதான்!