/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பாம்பன் துாக்கு பாலத்தின் பிதாமகன்!
/
பாம்பன் துாக்கு பாலத்தின் பிதாமகன்!
PUBLISHED ON : டிச 22, 2024

இந்திய தொழில்நுட்ப பிரமாண்டத்தின் ஓர் அடையாளமாக விளங்குகிறது, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள துாக்கு பாலம்!
பாம்பன் கடலின் நடுவே, 545 கோடி ரூபாய் செலவில், 2 கி.மீ., நீளத்திற்கு புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது, ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது.
இதன் மையப்பகுதியில், கப்பல்கள் கடந்து செல்வதற்கு வசதியாக, 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவில், மேல் நோக்கி திறந்து மூடும் வகையில், இந்த துாக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த, 1911ல், பாம்பனில், முதல் கடல் பாலம் கட்டத் துவங்கியது, பிரிட்டிஷ் அரசு. 2 கி.மீ., நீளத்திற்கு, 145 துாண்களுடன், 1913ல், கட்டி முடிக்கப்பட்டு, 1914ல், கடல் வழி மற்றும் இரும்பு பாதை போக்குவரத்து துவங்கியது.
துாக்கு பாலம் நேராக, 89 அடி உயரத்தில் நின்றது. அதன் பயனாக, 200 அடி அகலத்தில் கப்பல்கள் போக வழி கிடைத்தது. இதன் மூலம், இந்திய பகுதிகளில் இருந்து இலங்கை செல்ல, 150 கி.மீ., சுற்றி செல்வது குறைந்து, 22 கி.மீ., பயணமாக மாறியது. அப்போது இப்பாலம் கட்ட, 20 லட்சம் ரூபாய் செலவானது.
இந்தியாவின், மண்டபம் நகரத்தை, பாம்பன் தீவு மற்றும் ராமேஸ்வரத்துடன் இணைத்தது, இப்பாலம். அந்தப் புறம் இருவர், இந்தப் புறம் இருவர் என, கைகளால் இயக்கி, துாக்கு பாலத்தை துாக்கினர்.
இதே போன்ற துாக்கு பாலம், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா மற்றும் ஜெர்மன் நாட்டின் ஹம்பார்க் துறைமுக பகுதியிலும் உள்ளது. ஜெர்மன் துாக்கு பாலமும், பாம்பன் துாக்கு பாலமும் ஒரே மாதிரியானது.
கடலில் கப்பல்கள் வந்தால், திறந்து வழி விடும் வகையிலான நேர் துாக்கி பாலமாக, இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்பட்டது. இந்த நேர் துாக்கி பாலம், 'ஷெர்சர் ரோலிங் லிப்ட்' தொழில் நுட்பத்தில் இயங்குகிறது.
இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்தவர், வில்லியம் டொனால்ட் ஷெர்சர் என்ற அமெரிக்க இன்ஜினியர். இவர் பிறப்பால், ஒரு ஜெர்மன் நாட்டவர். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் பொறியியல் கல்லுாரியில், 1880ல், சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார்.
கடந்த, 1880ல், அமெரிக்க நாட்டின் இல்லுனியாஸ் ஜிங்க் தயாரிப்பு நிறுவனத்தில், வேலை பார்த்தார். பின், பிட்ஸ்பர்க் போர்ட் வெய்ன் மற்றும் சிகாகோ ரயில்வே சிவில் இன்ஜினியரிங் பிரிவு பணியில் சேர்ந்து, பாலங்கள் அமைப்பதில் நிபுணர் ஆனார்.
அங்கு பணி புரிந்த, எட்டு ஆண்டுகளில், அவர் உருவாக்கியது தான், ஆறுகளை கடக்க உதவும் ரயில்வே பாலங்கள் மற்றும் பாலங்களின் அடியில் கப்பல்கள் வரும் படியான, 'ரோலிங் லிப்ட் பிரிட்ஜ்!'
முதன் முறையாக, சிகாகோ நகரில் உள்ள ஒரு நதியின் மீது, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாலம் அமைக்கப்பட்டது. அந்த தொழில்நுட்பத்திற்கு அவரது பெயரே, 'ஷெர்சர் ரோலிங் லிப்ட்' பாலம் என்று வைக்கப்பட்டது. அதன் பின் சொந்தமாக, இந்த வகை பாலங்கள் கட்டும் நிறுவனத்தை உருவாக்கினார்.
உலகின் பல்வேறு நாடுகளில், அவரது, 'ரோலிங் லிப்ட்' தொழில்நுட்பத்தில் பாலங்கள் உருவாயின. 1893ல், 34 வயதில் டைபாய்டு காய்ச்சல் காரணமாக, திடீரென காலமானார்.
பிரம்மச்சாரியான ஷெர்சர், குறுகிய கால வாழ்க்கையில், 175 'ஷெர்சர் ரோலிங் லிப்ட்' பாலங்களை கட்டியுள்ளார். ஆனால், அந்த தொழில்நுட்பத்திற்கு அவர் காப்புரிமை பெறவே இல்லை. அவரது மரணத்திற்கு பின், அவரது தம்பி, 1908ல், காப்புரிமை பெற்றார். ஷெர்சர் கட்டுமான கம்பெனிகளும் அவர் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
இங்கிலாந்து நாட்டின் தேம்ஸ் நதிக்கரையில் இருப்பது, 'ஷெர்சர் ரோலிங் லிப்ட்' பாலம் தான். இதன் வெற்றிகரமான இயக்கமே, இதே மாதிரி பாலம் ஒன்றை இந்தியாவில் கட்ட முடிவு செய்து, பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்ட பாம்பன் துாக்கு பாலம்!
கோவீ. ராஜேந்திரன்