PUBLISHED ON : டிச 22, 2024

மிதமான உணவு வகையாகவும், ஆரோக்கியமானதுமான சிற்றுண்டி, அவல். அரிசியிலிருந்து உருவாகும் அவல், தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது.
நெல் மணியை ஊற வைத்து, பின் இடித்து தட்டையாக்கி, அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுகிறது.
முன்பு, கைக்குத்தல் முறையில் தான் தயாரிக்கப்பட்டது. தற்போது, இயந்திரங்கள் வாயிலாக சுலபமாக, மென்மையான, தட்டையான அவல் கிடைக்கிறது.
அரிசியிலிருந்து, வெள்ளை அவல், சிவப்பு அவல் போன்றவைகளுடன், தற்போது தினை அவல், கம்பு அவல், சோள அவல் மற்றும் கேழ்வரகு அவல் என, விதவிதமாக, இயற்கை அங்காடிகள் மற்றும் விற்பனை கூடங்களில் கிடைக்கின்றன.
அவசரமான சூழலில் பசியை போக்கக் கூடியது; சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம். இறைவனுக்கு படைக்கப்படும் சமைக்கப்படாத உணவு பொருளாக உள்ளது. அனைத்து பண்டிகைகளிலும் அவல், கடலை மற்றும் வெல்லம் பிரதான இடம் பிடிக்கும். கிருஷ்ணருக்கு, குசேலன் கொடுத்ததும், அவல் தான்.
உடல் சூட்டை தணித்து, புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் சாப்பிடுவதால், அன்று முழுதும் சுறுசுறுப்புடன் இருக்க செய்கிறது. வெல்லம் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். இது, அவர்களின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். நீரிழிவு நோயாளிகள், பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம்.
சத்துக்கள் நிறைந்த, சிவப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது, சிவப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தருகிறது. சிவப்பு அவலில் கஞ்சி, பாயசம், புட்டு போன்றவை செய்யலாம்.
கம்பு அவலை சமைக்காமல், இனிப்பு மற்றும் காரம், காய்கறி துருவல் சேர்த்து, தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
சிறுதானிய அவல் வகைகளை உணவில் சேர்ப்பதால், உடல் ஆரோக்கியம் காப்பதுடன், எடை மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு குறையவும் உதவுகிறது.
தொகுப்பு : மு.நாகூர்