/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - கடமையும், கண்ணியமும்!
/
கவிதைச்சோலை - கடமையும், கண்ணியமும்!
PUBLISHED ON : டிச 22, 2024

சேமிப்பும், சிக்கனமும்
இல்லை என்றால்...
சம்பாதிக்கும் வருமானம்
ஓட்டைப் பாத்திரத்து நீராக
துளியும் மிச்சமின்றி விரயமாகிடும்!
துணிவும், நம்பிக்கையும்
இல்லை என்றால்...
வாழ்ந்திடும் வாழ்க்கை
உடைந்து மூளியான சிற்பமாக
முற்றிலும் அர்த்தமற்றது ஆகிவிடும்!
அன்பும், அரவணைப்பும்
இல்லை என்றால்...
நிர்வகிக்கப்படும் குடும்பம்
புயல் நேரத்து நெடுமரமாக
கண்ணெதிரே வேரோடு சிதைந்திடும்!
உழைப்பும், உறுதியும்
இல்லை என்றால்...
இயங்கிடும் தொழிலகம்
சூதாட்டத்தில் இழந்த பணமாக
மீளமுடியாத நட்டத்தில் வீழ்ந்திடும்!
பொதுநலமும், மனிதமும்
இல்லை என்றால்...
நடத்தப்படும் நிறுவனம்
நேசமான விசுவாசிகள் யாருமின்றி
நிலைக்காமல் மூடுவிழா கண்டுவிடும்!
கருணையும், நல்லுள்ளமும்
இல்லை என்றால்...
வழங்கப்படும் உதவி
கோமாளியின் மேடைக் கூத்தாக
நகைப்புக்கு உரியதாக மாறிவிடும்!
கடமையும், கண்ணியமும்
இல்லை என்றால்...
செய்யப்படும் ஆட்சி
விரிசல் விழுந்த படகாக
காப்பாற்ற இயலாமல் கவிழ்ந்திடும்!
— விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.