sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது என் வேலை; அது உன் வேலை!

/

இது என் வேலை; அது உன் வேலை!

இது என் வேலை; அது உன் வேலை!

இது என் வேலை; அது உன் வேலை!


PUBLISHED ON : டிச 22, 2024

Google News

PUBLISHED ON : டிச 22, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்த ஜனங்கள் ஏன் இப்படி இருக்கின்றனர் என்று, தேவகிக்கு கடுப்பாக இருந்தது.

'மற்றவர்கள் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். சுதாகர் கூடவா இப்படி இருக்க வேண்டும்...' என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

''குட் மார்னிங் தேவகி... என்ன ஸ்பெஷல் டே இன்று... ஏலக்காய் வாசனை துாக்குது,'' என்றபடி எழுந்து வந்தான், சுதாகர்.

''நம்ம வினிக்குட்டி முதல் முறையா, கணக்கில் சென்டம் வாங்கியிருக்கா. அதை, 'செலிப்ரேட்' பண்ணத்தான், அவளுக்கு பிடிச்ச காரமல் சேமியா பாயசம் செய்துகிட்டு இருக்கேன்.''

''வாவ்! சூப்பர் தேவகி... உன்கிட்ட தான் கத்துக்கணும், எப்படி எல்லாம் சந்தோஷமா இருக்கணுங்கிறத!''

''இந்த ஐஸ் எல்லாம் இருக்கட்டும்; நேத்து ஏன் நீங்க துணி மடிக்கலே?''

''வந்ததே ரொம்ப லேட்டுமா... அதோட, நேத்து சைட்ல சூப்பர்வைஸ் பண்ணுகிற வேலை; பெண்டு கழண்டு போச்சு. இதோ செஞ்சுடறேன்,'' என்றான்.

''ஞாயிற்று கிழமை செடிகளுக்கு தண்ணீர் ஊத்தலை; உரம் வைக்கலை. பழுத்த இலை எல்லாம் விழுந்து தோட்டம் ஒரே குப்பையா இருக்கு பாத்தீங்களா?''

''பார்த்தேன்; இந்த வாரம் பண்ணிடறேன். போன ஞாயிற்றுகிழமை நானும், வினிக்குட்டியும் மாரத்தான் போனோம் இல்லையா, அதான் செய்ய முடியல.

''சரி தெரியாமல் தான் கேட்கிறேன்... உனக்கும் ஞாயிறு விடுமுறை தானே? நானும், குழந்தையும் கூட வீட்டில் இல்ல. உனக்கு நேரம் இருந்திருக்குமே... கொஞ்சம் தோட்ட வேலைய செஞ்சிருக்கக் கூடாதா?'' என்று கேட்டான், சுதாகர்.

கோபத்துடன், அவனை நிமிர்ந்து பார்த்தாள், தேவகி.

''என்ன பேசறீங்க? இந்த வேலை உங்களுக்கு, அந்த வேலை எனக்குன்னு தெளிவா பேசி தானே, வேலையை பிரிச்சுகிட்டோம்? அப்படித் தானே இப்ப வரைக்கும் நம்ம வாழ்க்கை சுமூகமா போகுது...

''நீங்க தோட்டம், 'பில்டிங் கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனி'ன்னும், நான், சமையல், ஸ்கூல், ஸ்டூடண்ட்ஸ், வகுப்பறை, பாடம்னு உழைச்சுட்டு வர்றோம். இதில், நான் எப்பவாவது என் வேலைய நீங்க செய்யணும்ன்னு எதிர்பார்க்கிறேனா? உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி கேக்க தோணுது?'' என்று பொரிந்தாள்.

''ஓகே... ஓகே,'' என்று குரலை தாழ்த்தியவன், ''உண்மை தான், தேவகி. நாம வேலைகளை பிரிச்சு செய்றோம், புரிதலோட இருக்கிறோம், பக்குவமா நடந்துக்குறோம், எல்லாமே சரிதான். அதுக்காக, தராசு மாதிரி அளவுகோல் வெச்சுக்கணுமா என்ன... கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகலாமே,'' என்றான்.

''இல்ல, சுதாகர்... நான் அப்படி எல்லாம் விட்டுக் கொடுக்க தயாரா இல்ல. ஏன்னா, இது சுயநலமான உலகம். அடுத்தவங் களுக்காக, சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத மனிதர்கள் இருக்கும் உலகம். கொஞ்சம் ஏமாந்தால், தலையில் கல்லைத் துாக்கிப் போட்டுடுவாங்க. துணி மடிக்கிற வேலை உங்களுடையது; எப்ப செய்றீங்களோ செய்யுங்க,'' என்று கூறி விட்டு, சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

அன்றைய மெனு, வத்தல் குழம்பு, பூண்டு ரசம், உருளை வதக்கல், அரிசி அப்பளம் என்று சீராக செய்து முடித்தாள். மூவருக்கும் டிபன் பாக்சில் கட்டி வைத்து விட்டு, டிபனுக்காக இட்லிப் பானையை அடுப்பில் ஏற்றியபோது, வேலைக்கார பெண் புஷ்பா குரல் கொடுத்தாள்.

''அக்கா... மிஷின்ல துணி இருக்குதா? காயப் போடவா?'' என்று கேட்டாள்.

''ஓடிகிட்டிருக்கு, புஷ்பா... இன்னும் பத்து நிமிஷம் ஆகும். ஏன், 8:00 மணி கூட ஆகலையே!'' என்றாள்.

''இன்னைக்கு ரேஷன் கடைக்கு போகணும்கா... அதான், சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு கிளம்பலாம்ன்னு பாத்தேன்,'' என்றவள், 'சிங்கில்' கிடந்த பாத்திரங்களைப் பார்த்து, ''என்னக்கா... பாத்திரம் எல்லாம் இப்படி காய்ஞ்சு போய் கெடக்குது? கொஞ்சம் தண்ணி ஊத்தி வைக்கலாமில்ல,'' என்றாள்.

''ஓ... உன் வேலையில பாதியை, நான் செய்யணும்ன்னு சொல்றியா?''

''அய்யோ அப்படி இல்லக்கா... தினம் நான் தானே செய்யுறேன். இன்னைக்கு ரேஷனுக்குப் போகணுமேன்னு தான்,'' என்று இழுத்தாள்.

''இதோ பார், புஷ்பா... உனக்கு, எனக்குன்னு எல்லாருக்குமே ஆயிரம் வேலைகள் இருக்கும். எல்லாருக்கும் இருக்கிறது அதே 24 மணி நேரம் தான். நாம தான் நேரத்த, 'மேனேஜ்' பண்ணிக்கணும். இன்னொருத்தரை அதிகாரம் பண்ணி, நம்ம வேலைய முடிக்கலாம்னு நினைக்கக் கூடாது. உன் வேலை உனக்கு, என் வேலை எனக்கு; புரியுதா?'' என்றாள்.

''அய்யோ சரிக்கா... விடுக்கா,'' என்று சொல்லி, முணுமுணுத்தபடி பாத்திரம் அருகே போனாள், புஷ்பா.

'அப்படி என்ன சொல்லிட்டேன்... நேத்து சமையல் செஞ்ச பாத்திரம் எல்லாம் காய்ஞ்சு போயி கெடக்குது; கொஞ்சம் தண்ணி தெளிச்சு வெச்சா என்னவாம்... சரியான பொம்பள... சே...' என்று அவள் சொன்னது, நல்லவேளையாக தேவகியின் காதில் விழவில்லை.

வகுப்பில் அதிக வேலை இருந்தது, தேவகிக்கு!

ஏழாம் வகுப்புக்கு திருக்குறள் புது அதிகாரம், ஆறாம் வகுப்புக்கு துணைப்பாடத்தில் வினாத்தாள் தயாரித்தல், ஐந்தாம் வகுப்புக்கு கண்ணதாசன் பாடல்கள் என்று, சிறிதும் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருந்தாள், தேவகி.

உணவு இடைவேளை மணி அடிக்க, டிபன் டப்பாவுடன், ஆசிரியர் ஓய்வறை நோக்கி நடந்த போது, எதிரில், ரம்யா டீச்சர் வந்தாள். அவள் முகம், புதுப் பொலிவுடன் இருப்பதாக தேவகிக்கு தோன்றியது.

''என்ன ரம்யா டீச்சர்... முகம் டாலடிக்குது; ஏதாவது விசேஷமா?'' என்று கேட்டாள்.

''ஆமாம் டீச்சர்... மூணு மாசம்.''

வெட்கத்துடன் சிரித்தாள், ரம்யா.

''வாழ்த்துகள்!''

''டாக்டரும், 'டிவின்ஸா' இருக்கலாம்ன்னு சொல்றாரு,'' என்றாள்.

''ஓ... அப்படியா? டபுள் கங்கிராட்ஸ்!''

''ஒரு உதவி பண்ண முடியுமா டீச்சர்?'' என்று கேட்டாள், ரம்யா.

''உதவியா?''

''ஆமாம் டீச்சர்... உங்க பக்கத்து வகுப்பு தானே என் அஞ்சாம் வகுப்பு. நான், 'டயர்டா' இருக்கும் போது, என் வகுப்பை கொஞ்சம் பாத்துக்கிட்டா, நான், 'ரிலாக்ஸ்' பண்ணிட்டு வந்துடுவேன்,'' என்றாள்.

நிர்தாட்சண்யமாக மறுத்த தேவகி, ''எனக்கும் ஆயிரம் வேலை இருக்கு; நிற்க நேரமில்லாம ஓடிகிட்டிருக்கேன். நீங்க வேணும்னா அஞ்சாம் மாசமே விடுமுறையில போயிடுங்களேன். ஏ.எம்., என்ற முறையில், நான் வேணும்ன்னா, 'ரெகமெண்ட்' பண்றேன். 'டிவின்ஸ்'ன்னு வேற சொல்றீங்க...'' என்றாள்.

சட்டென முகம் மாறினாள், ரம்யா.

''பரவாயில்ல டீச்சர்... நான் பாத்துக்கிறேன்!'' மவுனமாக நகர்ந்து போனாள்.

எரிச்சலுடன் அறைக்குப் போனாள், தேவகி.

'ஏன் இப்படி மக்கள் சுயநலமாக இருக்கின்றனர்... அடுத்தவளும் பெண் தானே, அவளும் வீடு, வேலை, குடித்தனம் என்று பம்பரமாய் சுழல்பவள் தானே என்று நினைப்பதே இல்லை. தான், தனது என்பது மட்டும் தான் எல்லார் தலையிலும் இருக்கிறது...' என்று பொருமிக் கொண்டே, வேகமாக உணவை உண்டு முடித்து, வகுப்பறைக்கு வந்தாள்.

'தோண்டுகின்ற போதெல்லாம் சுரக்கின்ற செந்தமிழே' என்ற தமிழ்க் கவிதைப் பாடத்தை நடத்தி முடித்தபோது, பள்ளி முடிந்து, கடைசி மணி அடித்தது.

மாணவர்களும், மாணவியரும் புத்தகப் பைகளை எடுத்து ஓடினர்.

தேவகியும் எழுந்தாள்; வகுப்பறையைச் சுற்றிப் பார்த்து, கரும்பலகையை சுத்தம் செய்து, தெருவுக்கு வந்த போது, அந்தக் காட்சியைப் பார்த்தாள்.

பள்ளிக் கூட வாசல், போக்குவரத்து நிறைந்த வீதி என்பதால், அரசுப் பேருந்துகள், தனியார் ஆட்டோக்கள், ஜீப்புகள், கார்கள் மற்றும் பைக்குகள் என்று, பரபரவென இருந்தது.

விர் விர்ரென பேருந்துகள் வந்து நின்றன. மாணவர்கள், 'ஹே' என்ற கூக்குரலுடன், பேருந்தில் ஏறினர்.

முதிய பெண்மணி ஒருத்தி, அவர்களுக்கிடையே நின்று கொண்டிருந்தாள். அவள், தன் கம்பீரக் குரலில், ''ஏ கண்ணுகளா... பஸ்சுல ஏறிட்டீங்களா? உள்ளே போங்க... யாரும் படியாண்ட நிக்கக் கூடாது. ஏ பாப்பா... இன்னும் உள்ள போ. இடம் இருக்குது பாரு... நீ உள்ள போனாத் தானே, உன் பின்னால வர்ற, பத்து பேருக்கு இடம் கிடைக்கும். போ கண்ணு...

''ஏ தம்பி... ஏன் படிக்கட்டுல நிக்குற? தொங்கிட்டு வரணுமா? பஸ்சு வளைஞ்சு போகும் போது, வெளக்குக் கம்பம் கண்ணுக்குத் தெரியாது, அடிபட்டிரும். உள்ளாற போடா தங்கம்.

''ரோட்டை அடைச்சுகிட்டு நிக்காதீங்க, பாப்பாக்களா... அடுத்த பஸ்சு வந்து நிக்க இடம் வேணுமில்ல? தள்ளுங்க... தள்ளுங்க,'' என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

மாணவர் கூட்டம், அந்த முதியவளின் குரலுக்கு கட்டுப்பட்டு நிற்பதும், பேருந்துகளில் பொறுமையாக ஏறுவதும், உள்ளே போவதுமாக இருந்தனர்.

திகைப்புடன், அம்முதிய பெண்ணையே பார்த்தாள், தேவகி.

'இந்த அம்மாள் எசக்கி அல்லவா? பள்ளிக் கூடத்து சத்துணவு ஆயாவாச்சே... மாலை, 3:00 மணியுடன், இவருக்கு வேலை முடிந்து விடுமே... 4:00 மணிக்கு, இங்கு என்ன இவருக்கு வேலை...' என நினைத்தவள், அருகில் சென்று, ''எசக்கியம்மா... இது என்ன டிராபிக் போலீஸ் வேலை?'' என்று கேட்டாள்.

''ஆமாம் டீச்சரம்மா!'' என்று புன்னகைத்தாள், எசக்கியம்மாள். சுருக்கம் விழுந்த முகத்தில், அந்த முறுவல் அழகாக இருந்தது.

''உங்க வேலை சமைப்பது, தானே?''

''ஆமா டீச்சரம்மா... ஆனா, அப்படி கோடு போட்டு வேலை பார்க்க மனசு ஒப்பலம்மா. பாவம் சிறிசுங்க... ஆபத்து தெரியாத வயசு. எத்தன ஆம்புள புள்ளைங்க பஸ் படிக்கட்டுல நின்னு, மண்ட மோதி விபத்துல சிக்குதுங்க. பெத்தவங்க எப்படி துடிச்சி கதறுறாங்க...

''அதனால தான், நானா இப்படி வந்து நிப்பேன். வூட்டுல வேலை கெடக்குது தான். ஆனா, இப்படி புள்ளைங்களுக்காக செத்த நேரம் நின்னு, உதவி பண்ணிட்டுப் போனா, மனசுக்கு நிறைவா இருக்குதும்மா,'' என்றாள்.

திகைப்புடன் அவள் பேசுவதை கவனித்தாள், தேவகி.

''மத்தவங்களுக்காக செய்யுற சின்னச் சின்ன உதவி தானே நம்ம மனசையும், உடம்பையும் தெம்பா வெக்குது, இல்லையா டீச்சரம்மா... நான் ஒருத்தி பாரேன்... டீச்சரம்மா உங்களுக்கு தெரியாததையா சொல்லிடப் போறேன்,'' என, சிரித்தபடி கூறினாள், எசக்கியம்மாள்.

'ஆமாம் எசக்கியம்மா... இந்த டீச்சரம்மாவுக்கு தெரியாததைத் தான், நீங்க சொல்லிக் கொடுத்திருக்கீங்க...' என்று மனதிற்குள் கூறிக் கொண்டாள், தேவகி!

வி. சம்யுக்தா






      Dinamalar
      Follow us