
கமலஹாசனின் புதிய தேடல்!
கமலஹாசனை பொறுத்தவரை, தன் திறமைக்கு தீனி போடக் கூடிய கதாபாத்திரங்களை தேடிப் பிடித்து நடிக்கக் கூடியவர். தற்போது புதுவரவு இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கி இருப்பவர், 'இதுவரை என்னை, ரசிகர்கள் பார்க்காத புதுமையான கதாபாத்திரம், புதுமையான தோற்றங்களில் வெளிப்படுத்தும் கதைகளை தயார் செய்யுங்கள். எத்தனை கடினமான காட்சிகளாக இருந்தாலும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்...' எனக் கூறி வருகிறார்.
குறிப்பாக, ஆங்கிலம் மற்றும் கொரியன் படங்களில் உள்ள கதாபாத்திரங்களை சுட்டிக்காட்டி, 'இந்த பாணியில் தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் கதை பண்ணுங்கள்...' என்றும் ஆலோசனை கொடுக்கிறார், கமலஹாசன்.
சினிமா பொன்னையா
'ரூட்'டை மாற்றும், ஜோதிகா!
திருமணத்துக்கு பின், தமிழில் கதையின் நாயகியாக நடித்து வந்தார், ஜோதிகா. அதையடுத்து பாலிவுட்டிலும் கதையின் நாயகியாக கொடி நாட்டப் போவதாக, மும்பையில் குடியேறினார். ஆனால், எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் இல்லாததால், 'வெப் சீரியல்'கள் பக்கம் திரும்பி விட்டார்.
தற்போது ஹிந்தியில், டப்பா கார்ட்டெல் என்ற, 'வெப்சீரியலில்' நடித்துள்ளார், ஜோதிகா. இனிமேல் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இல்லை என்றால், 'வெப் சீரியல்'களில் தொடர்ந்து நடிப்பதற்கும் திட்டமிட்டுள்ளார்.
— எலீசா
கஞ்சா வியாபாரியாக உருவெடுத்த, அனுஷ்கா!
கதையின் நாயகியாக அடுத்த சுற்றை துவங்கியிருக்கும் அனுஷ்கா, தற்போது, காதி என்ற படத்தில் கஞ்சா வியாபாரி வேடத்தில் நடித்துள்ளார்.
'கிரைம்' கதையில் உருவாகி உள்ள இந்த படத்தில், சிலரை ஓட ஓட, விரட்டி விரட்டி வெட்டும் அதிரடியான காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில், இந்த படத்தில் முதல் முறையாக, 'ரொமான்டிக், சென்டிமென்ட்' காட்சிகள் எதுவும் இல்லாத, கரடு முரடான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அனுஷ்கா.
— எலீசா
'பிகினி' உடைக்கு, 'டிமாண்ட்' வைக்கும், பிரியாமணி!
திருமணத்துக்கு முன், பல படங்களில், 'பிகினி' உடை அணிந்து நடித்திருந்த, பிரியாமணி, திருமணத்துக்கு பின், மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இருப்பினும், 'கிளாமர்' கலந்த கதாபாத்திரங்கள் கிடைத்தால், ஆரம்பகாலத்தை போன்று மீண்டும் தான், 'பிகினி' உடை அணிந்து நடிக்க தயாராக இருப்பதாக கூறி வருகிறார். மேலும், 'பிகினி' உடை அணிந்து நடிக்க வேண்டுமென்றால், கூடுதலாக படக்கூலியை வெட்ட வேண்டும் என்றும், 'டிமாண்ட்' வைத்து வருகிறார், பிரியாமணி.
— எலீசா
சுயசரிதை எழுதும், ரஜினிகாந்த்!
தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கும், கூலி படத்தில் நடித்து வருகிறார், ரஜினி. இந்த படத்தில், 'ஹீரோ' மட்டுமின்றி வில்லத்தனமான காட்சிகளிலும் நடிக்கிறார். இந்நிலையில், கூலி படப்பிடிப்பு முடிந்ததும், மூன்று மாதங்கள் தனிமையில் அமர்ந்து, தன்னுடைய சுயசரிதையை எழுதப் போவதாக கூறுகிறார், ரஜினிகாந்த்.
குறிப்பாக, தன்னை பற்றி கடந்த காலங்களில் சர்ச்சையாக பேசப்பட்ட சில விஷயங்களை சுயசரிதையில் தெளிவுபடுத்தும், ரஜினி, எதிர்காலத்தில் இந்த கதையில் நடிப்பதற்கும் திட்டமிட்டு இருக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
படங்கள் இயக்கத் துவங்கிவிட்ட, சுள்ளான் நடிகரின் இயக்கத்தில் வெளியாகும் படங்களை பார்த்துவிட்டு, சில இயக்குனர்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். காரணம், தாங்கள் அவரிடம் சொன்ன கதைகளில் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை, தான் இயக்கும் படங்களில் வைத்து விடுகிறார்.
சுள்ளான் நடிகரின் இந்த செயல்பாடு, கோலிவுட் வட்டாரங்களில் கசிய துவங்கியதை அடுத்து, சிலர் அவருக்காக உருவாக்கிய கதைகளை கூட, அவரிடம் சொல்லாமல் வேறு நடிகரிடம் சொல்லி வருகின்றனர். இதன் காரணமாகவே, சுள்ளான் நடிகர் மீதான அதிருப்தி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
******
தன்னுடன் நடித்த, திவ்யமான அந்த நடிகையுடன் திரைமறைவில், 'டேட்டிங்' செய்து வந்த அந்த பிரகாசமான நடிகர், ஒரு கட்டத்தில் அம்மணியை, தன் அந்தரங்க நாயகி ஆக்கிவிட்டார். இந்த விவகாரம் அவரது வூட்டுக்கார அம்மணிக்கு தெரிந்ததை அடுத்து, கணவருடன் குடுமி பிடி சண்டையில் ஈடுபட்டவர், ஒரு கட்டத்தில் அவரை பிரிந்து விட்டார்.
இதையடுத்து, இதுவரை இலைமறை காய்மறையாக நெருக்கம் காட்டி வந்த அவர்கள், சமீப காலமாக வெளிநாடுகளுக்கு வெளிப்படையாகவே, 'ஜாலி டூர்' அடிக்க துவங்கி இருக்கின்றனர்.
சினி துளிகள்!
* 'நான் இயக்கி நடித்து வரும், இட்லி கடை படம், இதுவரை நான் இயக்கிய, மூன்று படங்களில் இருந்து மாறுபட்ட படமாக இருக்கும்...' என்கிறார், தனுஷ்.
* பேச்சிலர் என்ற படத்தில் இணைந்து நடித்த,ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதி இருவரும் தற்போது, கிங்ஸ்டன் என்ற படத்தில் நடித்துள்ளனர்.
* ஏற்கெனவே, தன் மகள் கீர்த்தி பாண்டினுடன், அன்பிற்கினியாள் என்ற படத்தில் அவருக்கு தந்தையாகவே நடித்திருந்தார், அருண்பாண்டியன். தற்போது இன்னொரு படத்திலும், மகளுடன் இணைந்து நடிக்கப் போகிறார்.
அவ்ளோதான்!