
புதிய புயிற்சியாளரை ஒப்பந்தம் செய்த, அல்லு அர்ஜுன்!
புஷ்பா- 2 படத்தை அடுத்து, அட்லி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார், அல்லு அர்ஜுன். இந்த படத்தில் அவர், மூன்று வேடங்களில் நடிப்பதால், அவரது உருவம் மட்டுமின்றி, மேனரிசத்தையும் மாற்றி காட்ட வேண்டும் என்பதற்காக, ஹாலிவுட்டை சேர்ந்த, லாய்டு ஸ்டீபன் என்ற பயிற்சியாளரை நியமித்து, அவரிடம் தற்போது தீவிர பயிற்சி எடுத்து வருகிறார், அல்லு அர்ஜுன்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்., உள்ளிட்ட பல நடிகர்களுக்கு, பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார், லாய்டு ஸ்டீபன்.
— சினிமா பொன்னையா
பூஜா ஹெக்டே - கயாடு லோஹர் மோதல்!
விஜயுடன், பீஸ்ட் படத்தில் நடித்த, பூஜா ஹெக்டே, மீண்டும் அவருடன், ஜனநாயகன் படத்தில் நடிப்பவர், மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி, மார்க்கெட்டை பிடித்துள்ளார்.
இந்த நேரத்தில், டிராகன் படத்தின், 'ஹிட்' காரணமாக, புதிய படங்களை வேகமாக கைப்பற்றி வரும் நடிகை, கயாடு லோஹர், பூஜா ஹெக்டேவுக்கு செல்ல இருந்த ஒரு படத்தை, தன் பக்கம் தட்டி துாக்கி இருக்கிறார். இதனால், அவருக்கு சரியான பதிலடி கொடுக்க தயாராகி வருகிறார், பூஜா. இதையடுத்து, மேற்படி இரண்டு நடிகைகளுக்கும் இடையே திரைமறைவில் மோதல் வெடித்துள்ளது.
எலீசா
சொகுசு கார்களில் வலம் வரும், த்ரிஷா!
பல படங்களில், கதாநாயகியாக நடித்து வரும், த்ரிஷா, சென்னை, ஹைதராபாத்தில் தனக்கு சொந்தமாக பங்களா வைத்திருப்பவர், அடுத்தபடியாக, கேரளாவிலும் ஒரு பங்களா வாங்க போகிறார். அதேபோன்று, 'பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ரேஞ்ச் ரோவர்' என, பல சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார், த்ரிஷா. புதிதாக ஏதேனும் பிராண்ட் மாடல் கார்கள் இறக்குமதியானால், முதல் ஆளாக அதை வாங்குவதிலும் தனி ஆர்வம் காட்டி வருகிறார்.
— எலீசா
வில்லன் வேடத்துக்காக மெனக்கெட்ட, ரவி மோகன்!
சிவகார்த்திகேயன் நடித்து வரும், பராசக்தி படத்தில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார், நடிகர் ரவி மோகன். இந்த படம், 1960 காலகட்ட கதையில் உருவாகி வருவதால், அந்த கால நடிகர்களின், 'கெட்-அப்'புக்கு மாறியுள்ளதோடு, அப்போதைய வில்லன்கள் எந்த மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தினர் என்பதை உள்வாங்கி, நடித்து வருகிறார்.
எனவே, 'பராசக்தி படம், என்னுடைய, 22 ஆண்டு, சினிமா பயணத்தில் புதிய அனுபவமாக அமைந்திருப்பதோடு, ரசிகர்களுக்கும் புதுமையான, ரவியை பார்த்த திருப்தி கிடைக்கப் போகிறது...' என்கிறார், ரவி மோகன்.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
சுள்ளான் நடிகருக்கு, 'டப்' கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும், 'என்ட்ரி' கொடுத்தார், அமரன் நடிகர். ஆனால், அங்கு நடித்த முதல் படமே காலை வாரி விட்டதால், தெலுங்கில் இருந்து வந்த இன்னொரு பட வாய்ப்பை திருப்பி அனுப்பி விட்டார்.
மேலும், 'முதலில் தமிழில் தளபதி நடிகரின், 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்து, சுள்ளான் நடிகரை பின்னுக்கு தள்ளுகிறேன். அதன் பிறகு மற்ற மொழிகளிலும் ஒரு கை பார்க்கிறேன்...' என, தன் முடிவை மாற்றி இருக்கிறார், அமரன் நடிகர்.
சினி துளிகள்!
* ஹிந்தியில், சல்மான்கான் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய, சிக்கந்தர் படம் தோல்வி அடைந்து விட்டது. எனவே, தமிழில் அவர் இயக்கத்தில் தான் நடித்து வரும், மதராஸி படத்தின், 'ரிசல்ட்' எப்படி இருக்கப் போகிறதோ என்று பதட்டத்தில் உள்ளார், சிவகார்த்திகேயன்.
* பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்து வரும் புதிய படத்திற்கு தலைவன் - தலைவி என்று, 'டைட்டில்' வைக்கப்பட்டுள்ளது.
அவ்ளோதான்!