
'ஹிட்' படங்களின் 2ம் பாகத்தில் நடிக்கும், விஷ்ணு விஷால்!
சமீபகாலமாக நடித்த சில படங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டதால், ஏற்கனவே தான் நடித்த, 'சூப்பர் ஹிட்' படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார், விஷ்ணு விஷால்.
அந்த வகையில், கடந்த 2022ல், தான் நடித்து, 'ஹிட்' அடித்த, கட்டாகுஸ்தி என்ற படத்தின், இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார், விஷ்ணு விஷால். இதையடுத்து கடந்த, 2018ல் தான் நடித்து வெற்றி பெற்ற, ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கப் போகிறார்.
— சினிமா பொன்னையா
ஜோதிகாவை ஏமாற்றிய ஹிந்தி சினிமா!
மும்பை நடிகையான ஜோதிகா, ஹிந்தி சினிமா தனக்கு கை கொடுக்காததால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். திருமணத்துக்கு பின், கதையின் நாயகியாக உருவெடுத்தவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மீண்டும் மும்பையில் குடியேறி, தன் தாய் மொழியான ஹிந்தியில் முன்னணி இடத்தை பிடிக்கப் போவதாக கூறி வந்தார்.
இருப்பினும், சைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் என்ற இரண்டு படங்கள் மட்டுமே கிடைத்த நிலையில், புதிதாக ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. அதனால், மறுபடியும் தமிழில் கதையின் நாயகியாக நடிக்க, சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார், ஜோதிகா.
— எலீசா
மலையாளத்துக்கு போன கயாடு லோஹர் !
டிராகன் படத்தில் நடித்து பிரபலமான, நடிகை கயாடு லோஹர், அதையடுத்து சிம்பு, தனுஷ் நடிக்கும் இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், அந்த இரண்டு படங்களுமே தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டன.
இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, இனிமேலும் தமிழ் சினிமாவை நம்பி காலத்தை வீணடிக்கக் கூடாது என, மலையாள சினிமாவுக்குள், 'என்ட்ரி' கொடுத்தார். அங்கு போன வேகத்திலேயே, டொவினோ தாமஸ் உடன் நடிக்க, ஒரு படத்தை கைப்பற்றி, கேரளாவுக்கு முகாமை மாற்றிவிட்டார், கயாடு லோஹர்.
— எலீசா
மகனுக்காக கதை தேடும், விஜய் சேதுபதி!
தன் மகன், சூர்யா சேதுபதியை, பீனிக்ஸ் வீழான் என்ற படத்தில், 'ஹீரோ' ஆக அறிமுகப்படுத்தினார், விஜய் சேதுபதி. ஆனால், அந்த படம் படுதோல்வியை சந்தித்து விட்டது.
இருப்பினும், சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம் என, மகனுக்காக மாறுபட்ட கதைகளை கேட்டு வருகிறார், விஜய்சேதுபதி. முதல் படம் மாதிரியே அடுத்தடுத்து மாறுபட்ட, 'ஆக்ஷன்' கதைகளில் மகனை நடிக்க வைத்து, அதிரடி, 'ஆக்ஷன் ஹீரோ' ஆக, சினிமாவில் கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
கருப்பு பூனை...
விவாகரத்து பெற்று சிங்கிளாக வாழ்ந்து வரும், பாணா காத்தாடி நடிகை தற்போது, தெலுங்கு சினிமாவில் திருமணமான ஒரு இயக்குனருடன் காதலில் விழுந்திருக்கிறார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இயக்குனரின் வூட்டுக்கார அம்மணி, மேற்படி நடிகையை தொடர்பு கொண்டு, 'தயவுசெய்து என் வாழ்க்கையில் விளையாடாதே. வேறு இடம் பார்த்துக் கொள்...' என்ற போதும், கவலைப்படவில்லை, நடிகை.
தர்மம், நியாயம் பார்த்துக் கொண்டிருந்தால், பிடித்த வாழ்க்கையை வாழ முடியாது எனச் சொல்லி, தற்போது, மேற்படி இயக்குனருடன் வெளிநாடுகளுக்கு சென்று, 'ஜாலி டூர்' அடிக்க துவங்கி விட்டார்.
சினி துளிகள்!
* சமீபகாலமாக புதிய படங்களில் நடிக்காததால், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் மாதக்கணக்கில், 'டேரா' போட்டு வருகிறார், சமந்தா.
* காமெடி நடிகராக இருந்து, 'ஹீரோ' ஆகி இருக்கும் புரோட்டா சூரி, மீண்டும் காமெடி, 'இமேஜ்' தன்னை ஒட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, தன் கதாபாத்திரத்தில், காமெடி காட்சிகள் இருக்கக் கூடாது என, தடை போடுகிறார்.
* அமீர்கானின் மகன் ஜுனைத்கானுக்கு ஜோடியாக ஹிந்தியில், ஏக் தின் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார், நடிகை சாய் பல்லவி. இந்த படம் நவம்பர் 7ம் தேதி, திரைக்கு வருகிறது.
அவ்ளோதான்!