
ரஜினி படத்தில், ஷாருக்கான்!
ர ஜினி நடித்த, ஜெயிலர் படத்தில், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராப் போன்ற மாற்று மொழி பிரபலங்கள் நடித்த நிலையில், வேட்டையன் படத்தில், அமிதாப்பச்சன் நடித்தார்.
தற்போது, ரஜினியின், கூலி படத்தில், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா ஆகியோர் நடித்துள்ள நிலையில், ஜெயிலர் - 2 படத்தில், பாலகிருஷ்ணா மற்றும் சிவராஜ்குமார் நடித்து வருகின்றனர். அடுத்தபடியாக தான் நடிக்கும் ஒரு புதிய படத்தில், ஹிந்தி நடிகர், ஷாருக்கானை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து, பரபரப்பு கூட்ட திட்டமிட்டுள்ளார், ரஜினி.
சினிமா பொன்னையா
நயன்தாராவுக்கு ஏற்பட்ட சிக்கல்!
'சீ னியர் ஹீரோ'களுக்கு ஜோடியாக நடித்தால், தன்னையும், 'சீனியர்' நடிகையாக்கி விடுவர் என, நரைமுடி, 'ஹீரோ'களின் படங்களை தவிர்த்து வந்தார், நயன்தாரா. தற்போது, சிரஞ்சீவியின், 157வது படத்தில் அவரே நேரடியாக அழைப்பு விடுத்ததால் நடித்து வருகிறார்.
மேலும், இளவட்ட, 'ஹீரோ'களுடன் நடித்ததை விடவும் அவருடன் மிக நெருக்கமாக, 'ரொமான்ஸ்' காட்சிகளில் நடித்து வருகிறார், நயன்தாரா. அதனால், இந்த படத்தில் தான் காட்டும் தாராளத்தை பார்த்து, அடுத்தடுத்து மேலும் சில நரைமுடி, 'ஹீரோ'களும் தனக்கு அழைப்பு விடுத்து, இதே பாணியில் நடிக்குமாறு தொல்லை கொடுப்பரோ என்ற கலவரத்தில் இருக்கிறார், நயன்தாரா.
— எலீசா
இளவட்டங்களை, தெறிக்க விடும், ராசி கண்ணா!
த மிழில், ராசி கண்ணா நடித்த எந்த படமும் வெற்றி பெறாததால், ராசி இல்லாத நடிகை பட்டியலில் சேர்ந்து விட்ட நிலையில், அவரை, 'ஹீரோ'கள் புறக்கணித்து வருகின்றனர்.
அதனால், தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கவனத்தை திருப்பி இருக்கும், ராசி கண்ணா, இதுவரை செக்போஸ்ட் வைத்து நடித்து வந்தார். இனிமேல், 'பிகினி' நடிகையாகவும் உருவெடுத்து இளவட்ட ரசிகர்களை, தெறிக்க விடப் போவதாக கூறுகிறார், ராசி கண்ணா.
எலீசா
அம்மா வேடத்தில் நடிக்க விரும்பும், மீனா!
ம லையாளத்தில், மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த, திரிஷ்யம் படத்தில், இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்த, மீனாவுக்கு, சமீபகாலமாக எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இல்லை.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் யாரும் தன்னை கண்டு கொள்ளாத நிலையில், தற்போது புதுவரவு, 'ஹீரோ'களுக்கு அம்மாவாக நடிக்க தயாராக இருப்பதாக கூறி வருகிறார், மீனா. 'முதிர்ச்சியான வேடங்களில் நடிக்க வேண்டும் என்றாலும், என்னை தாராளமாக அணுகலாம்...' என்கிறார்.
— எலீசா
வில்லன் வேடங்களுக்கு முதலிடம் கொடுக்கும், பகத் பாசில்!
பு ஷ்பா மற்றும் மாமன்னன் என, பகத் பாசில் வில்லனாக நடித்த படங்கள், அவரை உச்சாணிக்கு கொண்டு சென்றன. ஆனால், 'பாசிட்டிவ்' ஆன வேடங்களில் நடித்தபோது பெரிதாக, 'ஒர்க் அவுட்' ஆகவில்லை. அதனால், தற்போது மாறுபட்ட வில்லன் வேடங்கள் பக்கம் திரும்பி இருக்கிறார், பகத் பாசில்.
மேலும், வெறும், 'ஆக்ஷன்' காட்சிகள் மட்டுமே வந்து செல்லும் வில்லனாக இல்லாமல், 'பர்பாமன்சுடன்' கூடிய வில்லன் வேடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதாக, இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், பகத் பாசில்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
தன்னுடன் நடித்த கேரளத்து அம்மணியை காதலித்து, வீட்டுக்கார அம்மணி ஆக்கி கெண்டார், கடல் நடிகர். இருப்பினும், ஏற்கனவே தான் பழகிய சில ரகசிய சிநேகிதிகளுடன், 'வீக்எண்ட் பார்ட்டி'களில் தொடர்ந்து அவர் பங்கேற்று வந்திருக்கிறார்.
இந்த விவகாரம் நடிகரின் வீட்டுக்கார அம்மணிக்கு தெரியவந்ததை அடுத்து, அதற்கு தடைக்கல் போட்டு விட்டார். 'கண்டிப்பாக, 'வீக் எண்ட்'டில் சரக்கு அடித்தே ஆக வேண்டுமென்றால், அதற்கு நானே கம்பெனி கொடுக்கிறேன். 'பார்ட்டி'யை வீட்டுக்குள்ளே வைத்துக் கொள்ளலாம்...' என, கடல் நடிகருக்கு கடிவாளம் போட்டுள்ளார், ஆத்துக்கார அம்மணி.
சினி துளிகள்!
திருமணத்திற்கு பின், திரைப்படங்களில் நடிக்காத தன் மனைவி, மஞ்சிமா மோகனை, 'வெப் சீரியலில்' நடிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார், கவுதம் கார்த்திக்.
அவ்ளோதான்!