
ஆக., 30 - என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்
ஒருநாள் கிண்டி குதிரை பந்தயத்திற்கு போயிருந்தார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவராக ஆசைப்பட்டு போகவில்லை; சினிமா பிரமுகர்கள் இருவர், அவரை அழைத்து சென்றிருந்தனர்.
போன இடத்தில் பந்தயத்தில் பங்கேற்கும் நிலை என்.எஸ்.கே.,வுக்கு ஏற்பட்டது. பந்தயத்தில் ஓடும் குதிரைகளை பற்றிய ஜாதகங்கள் அவ்வளவாக, அவருக்கு தெரியாது. இருந்தாலும், ஒவ்வொரு பந்தயத்திலும் அவர் பணம் கட்டிய குதிரையே வெற்றி பெற்றது.
அதைக்கண்டு, கூட வந்திருந்தவர்கள், 'பார்த்தாயா, அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்லை என, சொல்லிக் கொண்டிருந்தாயே...' என்றனர்.
உடனே, 'இது அதிர்ஷ்டமா?' எனக் கேட்டு, தாம் வெற்றி பெறக் கையாண்ட முறை பற்றி கூறினார், என்.எஸ்.கே.,
ஒவ்வொரு பந்தயத்திலும் ஓடிய எல்லா குதிரைகள் மீதும், அவர் டிக்கெட் எடுத்திருந்தார். அவைகளில் ஏதாவது ஒன்று வெற்றி பெறத்தானே வேண்டும் எனச் சொல்லி, அவர்களை சிரிக்க வைத்தார், என்.எஸ்.கே.,
அன்று, என்.எஸ்.கே.,வின் சட்டைப்பை நிறைய வெற்றி அடையாத குதிரைகளின் மீது கட்டிய ரேஸ் டிக்கெட்டுகள் இருந்தன. வீடு திரும்பியதும் அவைகளை எடுத்து, சிறுவர்களுக்கு விளையாடக் கொடுத்தார், என்.எஸ்.கே.,
அதற்கு பின் அவர், கிண்டி பக்கம் எட்டிப் பார்த்ததே இல்லை.
*******
கடந்த, 1957ல் நடந்த பொதுத்தேர்தலின் போது, தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, ஒரு சில இடங்களில் நகைச்சுவையோடு பிரசாரம் செய்தார், என்.எஸ்.கே.,
அவரது வேடிக்கையான தேர்தல் பிரசார பேச்சை கேட்க, பெருங்கூட்டம் கூடியது. காஞ்சிபுரம் தொகுதியில், சட்டசபை வேட்பாளராக அப்போது போட்டியிட்டார், அண்ணாதுரை.
அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார், சீனிவாசன். அவர் மருத்துவ துறையில் கைராசிக்காரர் என, மிகவும் புகழ் பெற்றவர்.
காஞ்சிபுரம் பிரசாரத்தில், 'இந்த கைராசிக்காரருக்கு உங்க ஓட்டுகளை அளித்து சட்டசபைக்கு அனுப்பி வச்சுட்டா, உங்க குழந்தை குட்டிகளுக்கு உடம்புக்கு ஏதாவது வந்தா, என்ன செய்வீங்க? நல்லா யோசித்து உங்க ஓட்டுகளை யாருக்குப் போடணுமோ அவங்களுக்கு போடுங்க....' எனப் பேசினார், என்.எஸ்.கே.,
காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சீனிவாசன் உள்பட பலர், இவ்வளவு யுக்தியாக, என்.எஸ்.கே., தேர்தல் பிரசாரம் செய்ததை கேள்விப்பட்டு, வியந்தனர்.
அந்த தேர்தலில், என்.எஸ்.கே., கொடுத்த சிரிப்பு டானிக் நன்றாக வேலை செய்தது. அண்ணாதுரை அமோக வெற்றி பெற்றார்.
*******
மூக்குப்பொடி போடும் பழக்கம் உள்ளவர், என்.எஸ்.கே.,
பொடி போட வேண்டும் என, தோன்றினால், 'பொடியா...' என, தன் உதவியாளரை அழைப்பார். அதை புரிந்து கொண்டு, பொடி டப்பாவை எடுத்து வந்து நீட்டுவார், உதவியாளர்.
என்.எஸ்.கே.,வால், பொடியா என, அழைக்கப்பட்டவர் வேறு யாருமல்ல, நகைச்சுவை நடிகர், 'டணால்' தங்கவேலு தான்.
*******
ஒருமுறை வெளியூர் சென்று, சில மாதங்கள் கழித்து திரும்பினார், என்.எஸ்.கே., அதற்குள், வீட்டு வாசலில் காவலுக்காக கூர்க்காவை நியமித்திருந்தார், அவரது அலுவலக நிர்வாகி.
இதை கவனித்த, என்.எஸ்.கே., அந்த கூர்க்காவுக்கு ஒரு மாத ஊதியத்தை கூடுதலாக அளித்து, அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.
பின்னர், அலுவலக நிர்வாகியை அழைத்து, 'ஒரு கலைஞனின் வீட்டு வாசலில் காவல்காரன் இருக்கலாமா... பொது மக்கள் விரும்பினால் எந்நேரமும் என்னைப் பார்க்க எந்தத் தடையும் இருக்க கூடாது...' என்றார், என்.எஸ்.கே.,
நடுத்தெரு நாராயணன்

