
'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...' என்ற, புதையல் திரைப்படத்தின், பாடல் வீதியெங்கும் உற்சாகத்தை வாரி இறைத்து கொண்டிருந்தது. நெஞ்சுருகி வாசித்துக் கொண்டிருந்தார், நாதஸ்வரக்காரர்.
வீட்டு வாசலில் கை ரிக்ஷா காத்திருந்தது. பார்த்தாலே இனிக்கும் கமர்கட் நிறத்தில் அந்த சிறுவன் கலகலப்பாக தோன்றினான். கழுத்தில், பன்னீர் ரோஜாக்கள் வாசம் வீசும் மாலை. புத்தம் புது டவுசர், சட்டை அணிந்து கைகளில், சிலேட்டு, பல்பம்.
அழகாக வகிடெடுத்து சீவிய கரிய தலை முடி. முகத்தில் அளவுக்கதிகமாக பவுடர் பூச்சு. கரிய நெற்றியில் பனிமலராகத் திருநீற்றின் கீற்று! கல்யாண மாப்பிள்ளை போல ஜோராக இருந்தான், அவன். வெண்முல்லை கோர்த்தார் போல் அழகிய பல்வரிசை. அவன் சிரிப்பு காண்பவரை கொள்ளை அடித்தது.
'கண்ணுப்படப் போகுது... ஆரத்தி கரைச்சு கொட்டிட்டு, தேங்காயோ, பூசணியோ சுத்திப் போட்டுட்டு பையனைக் கூட்டிட்டு போங்க...' என்றனர், அங்கிருந்தோர்.
ஏற்கனவே, எலுமிச்சம் பழங்கள் மிதிபட்டிருந்தன.
நாயனக்காரர் அடுத்து, 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...' என, ஆரம்பித்து நகரத் துவங்கினார்.
நாதஸ்வரக் கச்சேரியோடு உறவினரின் குறுநகையோடும், பெற்றவரின் பூரிப்போடும் ஊர்வலம், ரோஸரி பள்ளியை சென்று சேர்ந்தது.
'ரைஸ் மில்காரர், தன் சின்ன மகனை இன்னிக்கு இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல சேர்க்கிறார். அதுக்கு தான் இத்தனை கூட்டம்...' என, வீதியில் போகிறவர்களிடம் விபரமாக எடுத்து கூறினர், அண்டை அயல் வீட்டுக்காரர்கள்.
ரை ஸ் மில்காரர் என, தனித்துவத்தோடு அழைக்கப்பட்டவர், அழகர்சாமி. அரும்பாடுபட்டு, படிப்படியாக முன்னேறியவர். ஆரம்பத்தில், கூலிக்காரராக மதுரையில் அடைக்கலம் புகுந்தவர் என்றால், நம்புவது சற்றே சிரமம்.
அருப்புக்கோட்டைக்கு அருகில் ஒரு சிற்றுார், ராமானுஜபுரம். அங்கே விடுதலை வேட்கையோடு இருந்த இளைஞர், அழகர்சாமி. முயன்றால், மூன்றடியால் விண்ணையும் அளக்கலாம் என, விஸ்வரூபம் எடுத்த, வாமனன் வழி வந்த வைணவக் குலத் தோன்றல். தந்தை நாராயணசாமி நாயுடு.
நாட்டுப் புறத்திலிருந்து வெளியேறி மதுரைக்கு சென்றால் மாத்திரமே, மறு வாழ்வு என, நன்றாகப் புரிந்தது. உழைத்து வாழ வேண்டும் என்ற உன்னத எண்ணம் நிறைவேற, மதுரை அரிசி ஆலைகள் அடைக்கலம் கொடுத்தன.
மதுரை திருமங்கலம் அருகே உள்ளது, காங்கேயநத்தம். அங்கு கோவில் கொண்டுள்ள, வீரம்மாள், அழகர்சாமியின் குலதெய்வம். அந்த இறைவியின் மேல் பாரத்தை போட்டு, தன் வாழ்க்கையை ஆரம்பித்தார், அழகர்சாமி.
கடவுள் நம்பிக்கையை மிஞ்சிய கடின உழைப்பும், அதிர்ஷ்டமும் அழகர்சாமிக்கு துணை நின்றன. வெகு சீக்கிரத்தில் நினைத்த இலக்கை எட்டி விட்டார், அழகர்சாமி.
தன் மூத்த மகனுக்கு, விஜயலட்சுமி என, பெயர் சூட்டி சீரும், சிறப்புமாக வளர்த்தார். அடுத்தது, ஆண் வாரிசுகள். நாகராஜ், நாராயணன். அவர்களுக்கு பின் கடைசியாக பிறந்த குழந்தை, திருமலா தேவி.
திருமலா பிறந்த சில வாரங்களுக்குள், ஆண்டாள் அம்மாளை அகாலமாகப் பறிகொடுத்தார், அழகர்சாமி. நாராயணனுக்கு நடை பழகும் பருவம். பச்சரிசிப் பற்களோடு சிரிக்கும் பால் மணம் மாறா பிள்ளைகள்.
காசு பணத்துக்கு பஞ்சமில்லை என்றாலும், அருகிலிருந்து அன்னம் படைத்து, அல்லும் பகலும் உழைக்கும் ஆண் முகத்தில் வழியும் வியர்வையைத் துடைக்கும் சம்சாரம் இல்லாமல், வாழ்க்கை முழுமையாகுமா? அழகர்சாமிக்கு வயதும் அதிகமில்லை.
ஆண்டாளை தொடர்ந்து, அழகர்சாமியின் இரண்டாம் தாரமாக வந்தவர், ருக்மணி அம்மையார். அவருக்கும், கள்ளழகர் திருவருளால் குறைவே இன்றி, நாலு ஆண், மூன்று பெண் என, ஏழு பேர் குலம் விளங்கப் பிறந்தனர்.
விஜயலட்சுமி, நாகராஜ், நாராயணன் மற்றும் திருமலா தேவி ஆகியோர், ஆண்டாள் அம்மாள் ஈன்றெடுத்த செல்வங்கள். செல்வராஜ், பால்ராஜ், ராமராஜ் மற்றும் பிரித்திவிராஜ், சித்ரா, மீனாகுமாரி மற்றும் சாந்தி முதலானோர், இரண்டாவது மனைவி ருக்மணி அம்மையாரின் குழந்தைகள். ஆக மொத்தம், 11 பேர் அழகர்சாமியின் குலக் கொழுந்துகள்.
மதுரை மேலமாசி வீதி, சவுராஷ்டிரா லைன் பகுதியில், ஆண்டாள் பவனத்தில் ஒரு குட்டிக் கோகுலம், கோலாகலமாக வாழ்ந்தது. ஆண்டாள் பவனத்தையும் சேர்த்து, அழகர்சாமிக்கு, 12 வீடுகள் இருந்தன. ருக்மணி அம்மாள் சிற்றன்னையாக வாழ்ந்தாரே தவிர, சித்தியாகவில்லை. நாராயணனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக, அவர் தான் அம்மா.
'செல்லம் கொடுத்து, கொடுத்து அவனை சீரழிக்கிறியே...' என, அழகர்சாமி கோபிக்கும் அளவு தாய்ப்பாசம் உடையவர்.
அப்பாவின் பெயரை பிள்ளைக்கு சூட்டினாலும், தலையிலடித்தாற் போல் கூப்பிட அஞ்சுவர். அழகர்சாமியும், தன் தந்தை நாராயணனின் திருநாமத்தையே இரண்டாவது மகனுக்கு வைத்திருந்தார்.
நாராயணனை, விஜயராஜ் என, புது பெயரிட்டு அழைக்க துவங்கினார், அழகர்சாமி. ஆனால், அக்காள் விஜயலட்சுமிக்கு தன் தம்பியை, நாராயணா என, கூப்பிடுவது தான் பிடித்திருந்தது.
செல்வாக்கும், செழுமையும் அழகர்சாமியின் கம்பீரத்தை கூட்டியிருந்தன. அவர், மதுரை வட்டார காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர். கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜர் ஆட்சிக் காலம். அழகர்சாமிக்கு, முதல்வரோடு நல்ல அறிமுகம் உண்டு.
காமராஜர் மதுரைக்கு வந்தால், அழகர்சாமியின் இல்லத்து விசேஷ உணவை சாப்பிடாமல் சென்றது கிடையாது.
காமராஜரை போலவே, அழகர்சாமியும் வறுமையால் கல்வி கற்க முடியவில்லை. நாட்டில் கல்விப் புரட்சி செய்து கொண்டிருந்தார், காமராஜர். தன் வீட்டில் அதைச் செய்ய விரும்பினார், அழகர்சாமி. ஒவ்வொரு வாரிசும் டாக்டராக, இன்ஜினியராக, வக்கீலாக உருவாக வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டார், அழகர்சாமி.
ரோஸரி கான்வென்ட்டில், விஜயராஜ் நன்கு படிப்பான். கண்டிப்பாக ஒரு வித்தகனாக வருவான் என்ற இமாலய நம்பிக்கையுடன், வியாபாரத்தில் கவனம் செலுத்தினார், அழகர்சாமி.
- தொடரும்
பா. தீனதயாளன்நன்றி: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்மொபைல் எண்: 7200050073

