PUBLISHED ON : ஆக 24, 2025

கடந்து போனவை
ஒருநாளும் திரும்பாது
அவற்றை எதிர்பார்த்து
இடிந்து போகாமல்
நிகழ்கால நிதர்சனத்திற்கு
நகர்ந்து வந்துவிடுங்கள்!
திறனை மதித்திடாமல்
பிறரோடு ஒப்பிடுகிறார்களென
அதையே நினைத்து
துவண்டு போகாமல்
முயற்சியை பட்டை தீட்டி
முன்னேற்றம் காணுங்கள்!
எல்லாரும் புகழ்ந்து பாராட்ட வேண்டுமென்று
ஏதேதோ காரியங்கள் செய்து
ஏமாந்து போகாமல்
மனதிற்கு நிம்மதி தரும்
செயல்களில் இறங்குங்கள்!
உறவுகள் அருகிலிருந்து ஆதரவு தந்தாலும்
தனிமையில் உங்களை
நீங்கள் உணர்ந்திடுங்கள்
உள்ளத்தின் வலிமையே
நிரந்தர உயர்வு தரும்!
பெரும் பொருள் குவிந்தாலும்
போதுமெனும் எண்ணமின்றி
ஆசைகள் துரத்தினால்
உள்ளத்தின் அமைதி கெடும்
எளிமையில் வாழ்ந்தபடி
ஏற்றத்தை அடைந்திடுங்கள்!
எதிர்காலம் மங்கலாக
கண்முன்னே தோன்றினாலும்
நம்பிக்கை வெளிச்சத்தில்
பயணத்தை தொடர்ந்திடுங்கள்
நாளைய இமாலய சாதனைக்கு
இன்றே வழி பிறக்கும்!
- வ.முருகன், விழுப்புரம்.
தொடர்புக்கு: 97156-40263

