
தனுஷின், ஹாலிவுட் ஆசை!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கும், தனுஷ், பா.பாண்டியை அடுத்து, ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். அடுத்தபடியாக, 'பான்- இந்தியா' படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார், தனுஷ்.
ஹாலிவுட் தொழில் நுட்பத்தில் அந்த படத்தை இயக்கி, முன்னோட்டம் பார்த்துவிட்டு, அதையடுத்து ஹாலிவுட் சினிமாவில் இயக்குனராக கால் பதிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
கமர்ஷியல் நடிகையாகும், கீர்த்தி சுரேஷ்!
'மாறுபட்ட கதாபாத்திரங்களில் என்னை வெளிப்படுத்தப் போகிறேன்...' என்று சொல்லி, சாணிக்காயிதம் படத்தில் நடித்தார், கீர்த்தி சுரேஷ். அந்த படம், மோசமான விமர்சனங்களை கொடுத்தது.
இதையடுத்து, இனிமேல், 'ரிஸ்க்' எடுக்கப் போவதில்லை என்று, தற்போது, 100 சதவீதம், 'கமர்ஷியல்' கதைகளுக்கு முதலிடம் கொடுத்து வருகிறார். மேல்தட்டு, 'ஹீரோ'கள் தன்னை ஓரங்கட்டுவதால், 'மினிமம் கேரண்டி ஹீரோ'களின் படங்களுக்கு, துாது விட்டுள்ளார், கீர்த்தி சுரேஷ்.
— எலீசா
படுக்கையறை காட்சிகளுக்கு, 'கிரீன் சிக்னல்!'
ஹிந்தியில், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய, அனிமல் படத்தில், சில ஆபாச காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார், ராஷ்மிகா மந்தனா.
அது, அப்போது விமர்சனத்துக்கு உள்ளானதை அடுத்து, 'இனிமேல், அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்...' என்று, கூறி வந்தார்.
இருப்பினும், தற்போது மீண்டும் அதே இயக்குனர் இயக்கும் தெலுங்கு படத்தில், ஒப்பந்தமாகி இருக்கிறார், ராஷ்மிகா மந்தனா. அனிமல் படத்தை விட, கூடுதலாக ஐந்து கோடி ரூபாய் சம்பளம் தருவதாக கூறியதும், படுக்கையறை மற்றும் குளியல் காட்சிகளில் நடிப்பதற்கும், ஓ.கே., சொல்லி இருக்கிறார்.
— எலீசா
வெளிநாட்டு தியேட்டர்களில், விஜயின், கோட்!
விஜய் நடித்து வெளியான, மெர்சல், சர்க்கார், மாஸ்டர், பீஸ்ட் மற்றும் லியோ போன்ற படங்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் உள்ள தியேட்டர்களில் வெளியிடப்பட்டன; அப்போது, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனால், செப்டம்பர், 5ம் தேதி வெளியாகவுள்ள, விஜயின், கோட் படத்தையும் வெளிநாடுகளில் முன்பை விட, அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவில், இப்போதே அப்படத்தின் விளம்பரங்களையும் துவங்கி, பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
உலக நாயகர் தயாரிக்க இருந்த படத்தில் ஒப்பந்தமாகி இருந்த, வம்பு நடிகர், அந்த படத்தை ஓராண்டுக்கு மேலாக தயாரிப்பதாக சொல்லி, கடைசி நேரத்தில், அவர் கிடப்பில் போட்டு விட்டதால், செம கடுப்பாகி விட்டார்.
காரணம், இந்த ஒரு படத்தை நம்பி, தேடி வந்த இரண்டு மெகா நிறுவனங்களின் படங்களை தட்டிக் கழித்தார், வம்புக்காரர். ஆனால், இப்போது ஒப்பந்தமாகியிருந்த, உலக நாயகரின் படமும், 'டிராப்' ஆகியதால், கடும், 'அப்செட்'டில் இருக்கிறார்.
'ஆண்டிற்கு ஒரு படம் என்று, நான் எடுத்திருந்த பாலிசியை கிடப்பில் போட்டு, ஒரே நேரத்தில், பல படங்களில் நடிக்கும் பாலிசியை மீண்டும் பின்பற்ற போகிறேன்...' என்று கூறுகிறார், வம்பு நடிகர்.
சினி துளிகள்!
* சந்தானம், சூரி போன்ற காமெடி நடிகர்கள், 'ஹீரோ' ஆகிவிட்ட நிலையில், யோகி பாபுவை தொடர்ந்து, தற்போது பல படங்களை கைப்பற்றி, வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார், காமெடியன் ரெடின் கிங்ஸ்லி.
* மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும், தக்லைப் படத்தை அடுத்து, சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார், சிம்பு.
* தற்போது, 57 வயதாகும் நடிகர், விக்ரம், தான் நடிக்கும் படங்களில் ஏதேனும் அளவுக்கு மீறிய, 'ரொமான்டிக் சீன்'கள் வைத்தால், 'இந்த வயதில், இதை நான் செய்தால், ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள், கிண்டல் செய்வர்...' என்று, அந்த, 'சீன்'களை மாற்றச் சொல்கிறார்.
அவ்ளோதான்!