PUBLISHED ON : ஆக 04, 2024

ஆக., 7 - ஆடிப்பூரம்
ஆண்டுதோறும், தங்கள் திருமண நாளை எளிமையாகவாவது கொண்டாடி விடுகின்றனர், தம்பதியர்.
திருமண நாளை கொண்டாடும் பழக்கத்தை முதன் முதலாக துவக்கி வைத்தவர்கள் யார் என்றால், கிருஷ்ணரும், அவரது துணைவியும், பூமித்தாயின் அம்சமுமான சத்தியபாமாவும் தான்.
கிருஷ்ண பரமாத்மாவை இக்கட்டான நிலைக்கு ஆளாக்கி, அதில் சிக்கித் தவிக்கும் காட்சியைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம், நாரதருக்கு ஏற்பட்டது. தன் கலாட்டாவை, கிருஷ்ணரின் முதல் மனைவியான ருக்மணியிடம் இருந்து துவங்கினார்.
'ருக்மணி, நாளை உனக்கு பிறந்தநாள். உன் புருஷனுக்கு அதைக் கொண்டாட வேண்டும் என்ற அக்கறை கொஞ்சமாவது இருக்கிறதா! அவர், சத்தியபாமா வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். நீ போய் அவரை அழைத்து வந்து, நாளை முழுவதும் உன்னுடன் தங்கச் சொல்...' என்றார்.
கிளம்பி விட்டாள், ருக்மணி.
அவள், சத்தியபாமா வீட்டுக்கு செல்வதற்குள், அங்கு போய் விட்டார், நாரதர்.
'பாமா, நாளை உன் கணவனை எங்கும் விடாதே. நாளை உனக்கு முக்கியமான நாள்...' என்றார்.
'அப்படி என்ன விசேஷம்?' என்றாள், பாமா.
'அட, இதைக் கூட மறந்து விட்டாயா! நாளை உன் திருமண நாள். அதை, உன் கணவருடன் இணைந்து கொண்டாட வேண்டாமா?' என்றார், நாரதர்.
'அப்படி உலகத்தார் கொண்டாடுகின்றனரா என்ன? இங்கு, அப்படி ஒரு வழக்கம் இல்லையே...' என்றாள்.
'அப்படி இல்லாவிட்டால் தான் என்ன, நீ முதன்முதலாக ஆரம்பித்து வை. கிருஷ்ணரை இங்கேயே இருக்கச் சொல்...' என, கொளுத்திப் போட்டு விட்டு, துாரத்தில் மறைவாக நின்று கொண்டார், நாரதர்.
இதற்குள் ருக்மணி வருவதை, பார்த்து விட்டாள், பாமா.
கிருஷ்ணரிடம், 'அவள் வருகிறாள். நாளை நம் திருமண நாள். நீங்கள் இங்கு தான் இருக்க வேண்டும். அவள் கூப்பிட்டால் வருவதாக வாக்களிக்கக் கூடாது. புரிகிறதா?' என்று கண்டிப்பாக சொல்லி, உள்ளே போய் விட்டாள்.
ருக்மணி அவரை வணங்கி, தன் பிறந்தநாளுக்கு தன்னோடு வர அழைப்பு விடுத்தாள். கீதையைச் சொல்லி, உலகத்துக்கே வழி காட்டிய அந்த மாயக்கண்ணன், இந்த இருவரிடமும் சிக்கி, அவஸ்தைப்படுவதை துாரத்தில் நின்று ரசித்தார், நாரதர்.
இந்த சிக்கலில் இருந்து தப்ப, மாயவனான கிருஷ்ணர், தன் மாய சக்தியால், இரு பக்கமும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
ஆக, முதல் திருமண நாளைக் கொண்டாடியவர்கள் கிருஷ்ணரும், சத்தியபாமாவும் தான். பூமித்தாயின் அம்சமான இவள் தான், ஆண்டாளாக பூமியில் அவதாரம் எடுத்தாள். அவள் அவதாரம் எடுத்த நன்னாளே, ஆடிப்பூரம்.
இந்நாளில் தான், அம்பாள் பார்வதி ருதுவானாள் என்றும் கூறுவர். அம்பாளையும், ஆண்டாளையும் இந்த நன்னாளில் வணங்கி அருள் பெறுவோம்.
தி. செல்லப்பா