PUBLISHED ON : ஜன 12, 2025

மகாபாரதப் போரில் பாண்டவர்கள், ஐந்து பேர் மட்டும் உயிருடன் இருக்க, அவர்கள் பெற்ற பிள்ளைகள் அபிமன்யு உட்பட பலர் இறந்து விட்டனர்.
அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க, அம்பு எய்தான், அஸ்வத்தாமன். அம்பிகையை வணங்கி, தினமும் மந்திரத்தை சொல்லி வந்தாள், உத்தரை. அதனால், அஸ்வத்தாமனின் அம்பிலிருந்துத் தப்பிக்க வழிசெய்தார், அம்பிகை.
பாண்டவர்களின் வாரிசுகள் போர் முடிந்து, ஒரு கூடாரத்தில் படுத்திருந்தனர். அப்போது, பாண்டவர்கள் இல்லை. அந்த நேரத்தில், அஸ்வத்தாமன் கூடாரத்துக்குள் புகுந்து, பாண்டவர்களின் குழந்தைகளை வெட்டிக் கொன்றான்.
இப்படிப் பாண்டவர்கள் ஐவர் மட்டும் உயிருடன் இருக்க, அவர்களின் வாரிசுகள் மட்டும் அழிந்து போவதற்கு காரணம், சகாதேவன் பெற்ற வரம் தான்.
ஒருமுறை கண்ணனைத் தன் அன்பினாலும், மந்திரத்தாலும் கட்டிப் போட்டான், சகாதேவன். அவனது மனதிலிருந்து விடுபடுவதற்காக, 'உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்...' என்றார், கண்ணன்.
'போரில், நீ எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். அத்துடன், குந்தி புத்திரர்கள் ஐவரும் இறக்கக் கூடாது...' என்ற வரம் கேட்டான், சகாதேவன்.
எல்லாம் அறிந்த கண்ணன், 'நன்றாக யோசித்துக் கேள், சகாதேவா...' என்றார்.
'இல்லை நான் யோசித்து தான் கேட்கிறேன். போரில் குந்தி புத்திரர்கள் ஐவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது. போரில் நாங்கள் வெல்ல வேண்டும்...' என்றான்.
'அப்படியே ஆகட்டும்...' என்று வரம் அளித்தார், கண்ணன்.
கர்ணனும் தங்களுடைய அண்ணன் தான் என்ற உண்மை, அவன் இறந்த பின், தாய் குந்தி மூலமாக அறிகின்றனர், பாண்டவர்கள்.
ஜோதிடத்தைக் கணிப்பதிலும், ஆராய்வதிலும் வல்லவன், சகாதேவன். அவனாலேயே தனக்கு ஒரு அண்ணன் இருப்பதும், பாண்டவர்கள் ஐவர் அல்ல, ஆறு பேர் என்பதையும் அறிய முடியவில்லை என்ற கோபம் எழுகிறது.எனவே, தான் எழுதிய ஜாதகக் குறிப்புகள் அனைத்தையும் கிழித்து விடுகிறான். அவன் கிழித்த குறிப்புகளைத் தேடி எடுத்தனர், அவனது சீடர்கள். அதனால் தான், ஜோதிடம் பாதி மெய், மீதி நம்பிக்கையின் அடிப்படையில் எழுதியது என்று கூறுகின்றனர்.
சகாதேவன் வாங்கிய வரம், பாண்டவர்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால், தங்கள் பிள்ளைகளின் உயிர் போகும் என்று அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தங்களுக்கே ஆபத்து வராத போது, தங்கள் பிள்ளைகளுக்கு எப்படி வரும் என்று, சகாதேவன் நினைத்தானோ என்னவோ!
வாக்குறுதியோ, வரமோ எதுவாக இருந்தாலும் யோசித்துத் தரவேண்டும்; யோசித்துப் பெற வேண்டும்.
அருண் ராமதாசன்