
அடையாளத்தை மாற்ற விரும்பாத, தனுஷ்!
ராயன் படத்தை அடுத்து, இட்லி கடை படத்தையும் இயக்கி, நடித்து வரும் தனுஷ், அடுத்து இன்னொரு படத்தையும் இயக்கி, நடிக்க போகிறார். இந்நேரத்தில், தங்களை வைத்தும் படம் இயக்குமாறு நட்பு அடிப்படையில் சில கோலிவுட், 'ஹீரோ'கள், தனுஷை அணுகிய போது, அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று மறுத்து விட்டார்.
'என்னை வைத்து படம் இயக்கி நடிப்பதற்கே எனக்கு நேரம் போதவில்லை. அதோடு, மற்ற நடிகர்களை வைத்து படம் இயக்கினால், நான் நடிகர் என்ற அடையாளத்தை விட்டு விலகி, முழு நேர இயக்குனராக வேண்டிய சூழல் ஏற்படும். அதனால், ஒருபோதும் அப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டேன்...' என்கிறார், தனுஷ்.
— சினிமா பொன்னையா
தன்னை சந்திப்பவர்களுக்கு ரஜினி கொடுக்கும் பரிசு!
தன்னை யார் சந்தித்தாலும் அவர்களிடம் ஆன்மிகம் குறித்து அதிக நேரம் உரையாடுவார், நடிகர் ரஜினிகாந்த். அவர்கள் தன்னிடம் இருந்து விடைபெறும்போது, பரமஹம்ச யோகானந்தா எழுதிய, 'ஆட்டோ பயோகிராபி ஆப் எ யோகி' என்ற புத்தகத்தை பரிசாக கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
மேலும், 'இந்த புத்தகத்தை படித்து பயன்பெறுங்கள்...' என்றும் சொல்லி அனுப்புகிறார், ரஜினி.
— சி.பொ.,
ராஷ்மிகா நடிக்க பயப்படும், அந்த ஒரு, 'சீன்!'
'சினிமாவில் எப்படிப்பட்ட அதிரடியான காட்சிகள் என்றாலும் தயங்காமல் துணிச்சலாக நடிப்பேன். ஆனால், என்னை யாராவது துாக்குவது போன்ற காட்சிகள் என்றால் மட்டும் ரொம்ப சங்கடப்படுவேன்...' என்கிறார், ராஷ்மிகா மந்தனா.
காரணம், 'நடிகர்கள் என்னை துாக்கினாலே, நான் பதட்டமடைந்து விடுவேன். அதுபோன்ற காட்சிகளுக்கு தேவையான, 'பீலிங்ஸ்' வெளிப்படுத்த முடியாமல் ரொம்பவே கஷ்டப்படுகிறேன்...' என்கிறார், ராஷ்மிகா மந்தனா.
— எலீசா
அடுத்த ரவுண்டை துவங்கிய, சுவாசிகா!
தமிழில், வைகை என்ற படத்தில் அறிமுகமானவர், மலையாள நடிகை, சுவாசிகா. அதன்பின், கோரிப்பாளையம், சாட்டை மற்றும் சோக்காலி என, பல படங்களில் நடித்தார்.
பல ஆண்டு இடைவெளிக்கு பின், கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த, லப்பர் பந்து என்ற படத்தில் நடித்தார். அந்த படம், 'சூப்பர் ஹிட்' அடித்த ராசி, தற்போது தமிழில், சுவாசிகாவுக்கு, இரண்டு மெகா படங்கள் கிடைத்துள்ளன.
இதன் காரணமாக, மலையாள தேசத்திலிருந்து மீண்டும் கோலிவுட்டில் வந்து குடியேறி இருக்கிறார், சுவாசிகா.
— எலீசா
மலையாள சினிமாவில், என்ட்ரி கொடுக்கும் பிரியங்கா மோகன்!
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும், பிரியங்கா மோகன், இப்போது வரை தன் நடிப்புக்காக, ரசிகர்களிடம் பெரிதாக கைதட்டல் பெறவில்லை. தற்போது, மலையாளத்தில், துல்கர் சல்மான் நடிக்கும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார், பிரியங்கா மோகன்.
'மலையாளத்தில் நான், 'என்ட்ரி' கொடுக்கும் முதல் படத்திலேயே அழுத்தமான வேடம் கிடைத்துள்ளது. அதனால், இந்த படம் மூலம் எனக்குள் இருக்கும் சிறந்த நடிகையை வெளிக்கொண்டு வந்து, முன்னணி இயக்குனர்களின் கவனத்தை என் பக்கம் திருப்புவேன்...' என்கிறார்.
— எலீசா
வில்லனாக நடிக்க ரூ. 200 கோடி வாங்கும், கே.ஜி.எப்., நாயகன்!
கே.ஜி.எப்., படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து பிரபலமான, கன்னட நடிகர் யஷ், தற்போது ஹிந்தியில் உருவாகி வரும், ராமாயணா படத்தில், ராவணனாக வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.
இது, வில்லன் வேடம் என்பதால், அவரது படக்கூலியை பாதியாக குறைத்திருக்கின்றனர். ஆனால், அவரோ, 'ஹீரோவாக நடிக்க நான் வாங்கும் அதே, 200 கோடி ரூபாய் சம்பளத்தை கொடுத்தால் மட்டுமே, வில்லனாகவும் நடிப்பேன்...' என்று சொல்லி, அதற்கு படக்குழு ஒப்புக்கொண்ட பிறகே அப்படத்தில் நடிக்கிறார்.
சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
தளபதி நடிகரின் இடத்தை பிடித்து விட வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டு வந்தார், அமரன் நடிகர். தற்போது தான் நடிக்கும் புதிய படங்களில், தளபதி நடிகரைப் போலவே தனக்கும், 'ஓப்பனிங் சீன்' மற்றும் 'பஞ்ச் டயலாக்'குகள் வைக்குமாறு உத்தரவு போட்டுள்ளார்.
மேலும், 'நான், தேர்வு செய்யும், 'பஞ்ச் டயலாக்'குகளைதான் படத்தில் வைக்க வேண்டும்...' என, நிபந்தனை போட்டு வருகிறார்.
இதை பார்த்து, 'ஒரு படம் ஓடினதுமே நடிகர் ஓவராக ஆட்டம் போடுகிறார்...' என்று, கோலிவுட்டில் அவரது முதுகுக்கு பின்னால் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
சினிதுளிகள்!
* தமிழில் விஜய் நடித்த, தெறி படம், சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில், ஹிந்தியில், பேபி ஜான் என்ற பெயரில், ரீ-மேக் செய்யப்பட்ட அப்படம், தோல்வி அடைந்து விட்டது.
* சுதா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும், 25வது படம், 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது.
அவ்ளோதான்!