
பொங்கல் பண்டிகையானது, நம் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும், பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.
தமிழகம்:
தமிழகத்தைப் பொறுத்தவரை, பொங்கல் பண்டிகை என்றால், போகியில் துவங்கி காணும் பொங்கலில் முடிகிறது.போகிப் பண்டிகை அன்று, வீட்டில் உள்ள பழைய பொருட்களை, தீயிலிட்டு எரிப்பது வழக்கம்.இரண்டாவது நாள், தைப்பொங்கல். இந்நாளில், அதிகாலை எழுந்து புத்தாடை அணிந்து, புதிய பானையில், சர்க்கரை பொங்கலை சமைத்து, சூரிய பகவானுக்கு படைப்பர்.
மூன்றாவது நாள், மாட்டுப் பொங்கல். இந்த நாள், விவசாயத்துக்கு உதவிய கால்நடைகளைக் கொண்டாடும் விழா. மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி அலங்கரித்து, பொங்கல் செய்து படைப்பது வழக்கம். இந்த நாளில் தான் ஜல்லிக்கட்டு போட்டிகளும் வெகு விமரிசையாக நடைபெறும்.நான்காவது நாள், காணும் பொங்கல். இந்நாளில், குடும்ப உறவினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவர்.
ஆந்திரா:
ஆந்திராவில் பொங்கல் பண்டிகை, தமிழகத்தைப் போலவே கொண்டாடப்படுகிறது.முதல் நாள், நம்மைப் போலவே போகி கொண்டாடி, பழைய பொருட்களை எரிக்கின்றனர். இரண்டாவது நாள், மகர சங்கராந்தி என்ற பெயரில், பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். மூன்றாவது நாள், கனுமா என்ற பெயரில், கால்நடைகளுக்கு உணவளித்து கொண்டாடுவர். நான்காவது நாள், வீர விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இந்நாளின் பெயர், முக்கனுமா.
குஜராத்:
குஜராத்தில், ஜனவரி 14ம் தேதி, மகர சங்கராந்தி அல்லது உத்ராயன் என்ற பெயரில், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையில், முதல் நாளான உத்ராயன் அன்று, பட்டங்களை விட்டு மகிழ்கின்றனர்.
இரண்டாவது நாள், வாசி உத்ராயன் அன்று, குளிர்கால காய்கறிகள், எள் விதைகள், கடலை, வெல்லம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உந்திலு என்ற உணவு தயாரித்து, பகிர்ந்துண்டு கொண்டாடுகின்றனர்.
பீகார் மற்றும் ஜார்க்கண்ட்:
இப்பகுதிகளில் பொங்கல் பண்டிகை, சக்ராத் அல்லது கிச்சடி என்று அழைக்கப்படுகிறது. இதில் முதல் நாளான, மகர சங்கராந்தியன்று, மக்கள் நதிகளில் குளித்து, எள்ளுருண்டைகளை செய்து, மற்றவர்களுக்கும் வழங்கி கொண்டாடுவர்.
இரண்டாம் நாள், மக்ராத் அன்று, பருப்பு, அரிசி, பட்டாணி போன்றவற்றால் கிச்சடி சமைத்து, கொண்டாடுவர்.
மஹாராஷ்டிரா:
மஹாராஷ்டிராவில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால், அது மகர சங்கராந்தி தான். மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், எள் உருண்டை, அல்வா, போளி போன்றவற்றைச் செய்து சாப்பிடுகின்றனர்.
இங்கு, முதல் நாள், போகி என்றும், இரண்டாம் நாள், சங்க்ராந்த் என்றும், மூன்றாம் நாள், கிங்க்ராண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.
பஞ்சாப்:
பஞ்சாபில், லோஹ்ரி என்ற பெயரில், ஆண்டுதோறும், ஜனவரி 13ம் தேதி கொண்டாடப்படுகிறது.லோஹ்ரிக்கு அடுத்த நாள், மகி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மேலும், பஞ்சாபின் சில பகுதிகளில், லோஹ்ரி அன்று, பட்டம் விட்டுக் கொண்டாடுவர்.
அன்று இரவு, நெருப்பைக் கொளுத்தி கடவுளை வணங்குகின்றனர்.
- எம். ஆஷிகா