
பனி சூழ்ந்த மலைப் பிரதேசத்தில் காவல் புரியும் பணியில் இருந்தனர், ராணுவ வீரர்கள்.
நாட்டின் எல்லையில் ஆங்காங்கே இருக்கும் தடுப்புக் கூண்டுகளில் இருந்தபடி, இரவும், பகலும் காவல் புரிய வேண்டும். அங்கிருந்து சற்று துாரத்தில் ஒரு நெடுஞ்சாலை இருக்கிறது. அந்த நெடுஞ்சாலையை ஒட்டி ஒரு டீக்கடை இருக்கும். டீ குடித்து உடலைச் சூடேற்றிக் கொள்ள அங்கு தான் வர வேண்டும்.
குளிர்காலத்தில் பனி கொட்டி, அந்த நெடுஞ்சாலை, மூன்று மாதங்கள் அடைபட்டு விடும். அப்போது, வீரர்களுக்கு எதுவுமே கிடைக்காது.
குளிர்காலத்துக்கு முன்னதாக ராணுவ வீரர் குழு, எல்லைக்குக் கிளம்பியது. வழியில் டீ குடித்து விட்டு உற்சாகமாக மலையேறலாம் என நினைத்தனர். ஆனால், டீக்கடை பூட்டியிருந்தது.
'என்ன செய்வது?' என, திகைத்தனர், அனைவரும்.
வீரர்கள் ஏமாற்றம் அடைந்தால் நன்றாக இருக்காது என நினைத்த தளபதி, 'கடையின் பூட்டை யாராவது திறக்க முடிந்தால், நாமே டீ போட்டுக் கொள்ளலாம்...' என்றார்.
கிட்டத்தட்ட திருட்டு போன்றது தான். ஆனால், வேறு வழியில்லை!
சாமர்த்தியமாகப் பூட்டைத் திறந்தார், ஒரு வீரர். அனைவரும் பிஸ்கெட் எடுத்துக் கொண்டனர். கடையில், 'பிரஷ்' ஆகப் பால் இருந்தது. சூடாக டீ போட்டுக் குடித்தனர். எல்லாம் முடிந்து கிளம்பும் நேரத்தில், தளபதிக்கு மனசாட்சி உறுத்த, கடையின் கல்லாப் பெட்டியில், 2,000 ரூபாய் வைத்தார்.
குளிர்காலம் முடிந்து அவர்கள், முகாமுக்குத் திரும்பும் நேரத்தில், அதே சாலை வழியாக வந்தனர். அப்போது டீக்கடை திறந்திருந்தது.
அவர்கள் டீ குடிக்க அங்கு நின்றனர். அனைவரையும் வரவேற்று, பிஸ்கெட், டீ கொடுத்தார், கடைக்காரர். எல்லாரும் குடித்து முடித்து கிளம்பும் போது, பணம் கொடுத்தார், தளபதி.
'கடவுளுக்கு நன்றி...' என்றபடி, பணத்தை வாங்கினார், கடைக்காரர்.
'கடவுளா பணம் கொடுத்தார்? எங்கள் கேப்டன் தானே கொடுத்தார்...' எனக் கிண்டலாகக் கேட்டான், வீரர்களில் ஒருவன்.
அவனைக் கனிவுடன் பார்த்து, 'அப்படி சொல்லாதீர்கள். கடவுள் தான் எனக்குக் கொடுக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு, என் மகனை, தீவிரவாதிகள் தாக்கி விட்டனர். அவனை மருத்துவமனைக்கு அழைத்துப் போயிருந்த போது, என் கடையைத் திறந்து யாரோ பொருட்களைத் திருடி இருந்தனர்.
'ஆனால், என் நிலையை உணர்ந்து, கல்லாப் பெட்டியில் 2,000 ரூபாயை வைத்திருந்தார், கடவுள். என் மகனின் சிகிச்சை செலவுக்கு அதுதான் உதவியது...' என்றார், கடைக்காரர்.
'கடவுளா கல்லா பெட்டியில் பணம் வைத்தார்?' என, ஒரு வீரன் கேட்க, அனைவரையும் கண்களால் அமைதியாக்கினார், தளபதி.
கடையிலிருந்து வெளியில் வந்து வாகனத்தில் அமர்ந்த பின், தளபதி சொன்னார்...
'நாம் செய்தது, சட்டத்தின் பார்வையில் திருட்டு; உலகத்துக்கு அது தவறாகத் தெரியலாம். ஆனால், அதைக் கடவுள் செயலாக நம்புகிறார், டீக்கடைக்காரர். அந்த நம்பிக்கையைத் தகர்க்க வேண்டாம்.
'நம் எல்லா செயல்களின் மூலமாகவும், மற்றவர்களுக்கு கடவுளை உணர்த்துங்கள். அதுதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும்...' என்றார், தளபதி.
அருண் ராமதாசன்