PUBLISHED ON : மே 11, 2025

காசி விஸ்வநாதர் கோவில் இருக்கும் பகுதியில் ஒரு குறுகலான சந்து. அங்கே மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும். கங்கையில் நீராடி, தங்கள் பாவங்களை கரைத்து விட்டு மக்கள், ஊருக்கு திரும்பும் வழி அது.
மழை பெய்து வீதியெங்கும் ஈரமாக இருக்க, அதில் தடுமாறி வழுக்கி விழுந்து விட்டார், முதியவர் ஒருவர். வலியில் அவர் துடிக்க, தன் மடியில் அவரை போட்டு புலம்ப ஆரம்பித்தார், அவரது மனைவி.
'காசிக்குப் புண்ணியம் தேடி வந்த இடத்தில், இவருக்கு அடிபட்டு உயிருக்கே ஆபத்தாகி விட்டது. யாராவது காப்பாற்றுங்களேன்...' என, அனைவரிடமும் கெஞ்சினார். சாதாரண உடையில் பரம ஏழைகள் போல இருந்த அவர்களை, யாரும் திரும்பிப் பார்க்கவில்லை.
பெரியவரின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியபடி இருக்க, அந்த மூதாட்டியின் புலம்பல் இன்னும் அதிகமானது.
'என் கணவருக்கு உயிர் பிரியும் நிலை வந்துவிட்டது. காசியில் உயிர் விட்டால் புண்ணியம் என்பர். அதற்கும், அவர் வாயில் கொஞ்சம் கங்கை நீரை விட வேண்டும். யாராவது புனித நீர் கொடுங்களேன். என்னால் எழுந்து போக முடியவில்லையே...' என, கெஞ்ச ஆரம்பித்தார்.
வந்த பலர் கையிலும் கங்கை நீர் இருந்தது. அந்த புனித நீரை ஊருக்கு எடுத்துப் போக வேண்டும் என நினைத்ததால், முதியவரின் வாயில் விட, அவர்களுக்கு மனம் வரவில்லை.
நேரம் கடந்து, இருட்ட ஆரம்பித்தது. கூட்டமும் குறைந்தது. அப்போது அந்த வழியாக வந்தான், ஒரு திருடன். அவன் கையில் ஒரு சிறு சொம்பில் கங்கை நீர் இருந்தது. புலம்பிக் கொண்டிருந்த மூதாட்டியைப் பார்த்ததும், அவனுடைய மனம் இரங்கியது. முதியவர் அருகே மண்டியிட்டு அமர்ந்து, கங்கை நீரை அவர் வாயில் ஊற்றப் போனான்.
அவனைத் தடுத்து, 'ஐயா! இதை ஊற்றுவதற்கு ஒரு மரபு உள்ளது. நீங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்திருந்தால், அதை மனதில் நினைத்து, இவர் வாயில் கங்கை நீரை விடுங்கள். உங்களுக்கு புண்ணியமாக போகட்டும்...' என்றார், மூதாட்டி.
திகைத்தான், திருடன். இந்த சூழலில் பொய் சொல்லவும் தயங்கினான்.
'அம்மா, நான் ஒரு திருடன். எந்த நல்ல காரியத்தையும் செய்ததில்லை. என்னுடைய தீய செயல்கள் நிறைந்த வாழ்க்கையில், முதல் தடவையாக இப்போது தான் இந்த நல்ல காரியத்தை செய்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்...' என்றபடி முதியவர் வாயில் கங்கை நீரை ஊற்றினான்.
முதியவரும் - மூதாட்டியும் மறைந்து, அங்கே உமையவள் சகிதம், காசி விஸ்வநாதர் தரிசனம் தந்தார். நெக்குருகிப் போனான், திருடன்.
'இந்த பாவிக்கு இப்படி ஒரு புண்ணிய தரிசனமா?' என, பணிந்து வணங்கினான், திருடன்.
'உன் மனதில் கருணை சுரந்து பெருகிற்று. உன் கையில் கங்கை நீர் இருந்தது. உன் பேச்சிலும் சத்தியம் இருந்தது. உன்னைவிட என் தரிசனம் பெற, வேறு யாருக்குத் தகுதி இருக்க முடியும்?' எனச் சொல்லி ஆசீர்வதித்தார், இறைவன்.
அருண் ராமதாசன்

