PUBLISHED ON : ஜூன் 29, 2025

வேலன், வள்ளி தம்பதிக்கு, மூன்று வயதில் ஒரு குழந்தை இருந்தது. அந்த குழந்தை படு சுட்டியாக இருந்தது.
ஒருநாள், வேலனும், வள்ளியும் வீட்டில், கிருஷ்ணர் விக்கிரகத்தை அலங்கரித்து, அவருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை வைத்து பூஜை செய்தனர்.
பூஜை முடிந்ததும், நைவேத்தியங்களுள் ஒன்றான சீடையை எடுத்து சாப்பிட முற்பட்டது, அந்த குழந்தை.
உடனே, குழந்தையை தடுத்து, 'அதெல்லாம் இப்போ சாப்பிடக் கூடாது. கிருஷ்ணர் சாப்பிட்ட பிறகே சாப்பிட வேண்டும்...' எனக் கூறி, பூஜை அறையை விட்டு வெளியே அழைத்து வந்தாள், வள்ளி.
'அப்பா! உண்மையிலே கிருஷ்ணர் நாம் செய்த நைவேத்தியங்களை சாப்பிடுவாரா?' எனக் கேட்டது, குழந்தை.
'ஆமாம்! நீ வேண்டுமானால் மெதுவாக சென்று பூஜை அறையை எட்டிப்பார். கிருஷ்ணர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்...' என, விளையாட்டாக கூறினார், வேலன்.
அதை நம்பிய குழந்தை, வேகமாக ஓடிச்சென்று பூஜையறையை மெதுவாக எட்டிப் பார்த்தது. அங்கே, நைவேத்தியங்களை சுவைத்துக் கொண்டிருந்தார், கிருஷ்ண பரமாத்மா.
கிருஷ்ணரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் ஓடிச்சென்று, 'அப்பா! அப்பா! உண்மையிலேயே கிருஷ்ணர் நாம் படைத்த உணவுகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்...' என, மகிழ்ச்சியுடன் கூறியது, குழந்தை.
குழந்தை கூறியதைக் கேட்ட வேலனும், வள்ளியும் வியப்படைந்தனர். அவர்களால் அதை நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
'குழந்தை கூறியது உண்மையா, பொய்யா என தெரியவில்லையே...' என நினைத்து, வேகமாக ஓடிச்சென்று பூஜையறையை மெதுவாக எட்டிப் பார்த்தனர்.
ஆனால், அங்கே கிருஷ்ணர் இல்லை. குழந்தை விளையாட்டாக பொய் சொல்லிவிட்டதாக இருவரும் நினைத்தனர்.
கிருஷ்ணர் பூஜையறையில் இருப்பதாக, பெற்றோர் சொன்னதை முழுமையாக நம்பிய குழந்தைக்கு கிருஷ்ணரின் தரிசனம் கிடைத்தது. ஆனால், குழந்தை கூறியதை வேலனும், வள்ளியும் முழுமையாக நம்பாததால் அவர்களுக்கு கிருஷ்ணரின் தரிசனம் கிடைக்கவில்லை.
கடவுள் இருக்கிறார். அவர் நம்மை காப்பார் என, முழுமையாக நம்பினால் மட்டுமே, அவருடைய அருள் கிடைக்கும். அவரை நம்பாதவர்களுக்கும், அரைகுறையாக நம்புபவர்களுக்கும் அவருடைய அருள் கிடைக்கவே கிடைக்காது.
கடவுளை சந்தேகப்படாமல் முழுமையாக நம்புவோம்.
அருண் ராமதாசன்
அறிவோம் ஆன்மிகம்!
மாதந்தோறும், சஷ்டி விரதம் இருக்க விரும்புபவர்கள், ஒரு வேளை மட்டும், இரவில், சிற்றுண்டி சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.