
ஒரு சமயம் காந்திஜி, சொற்பொழிவு ஆற்றும் போது, வெளிநாட்டிலிருந்து வந்த ஓவியர் ஒருவர், அவரைப் பார்த்து கேலிச்சித்திரம் வரைந்து, காந்திஜியின் சகாக்களிடம் அதை காட்டினார்.
அதை பார்த்து மகிழ்ச்சியுற்ற அவர்கள், சொற்பொழிவு முடிந்ததும் அதை காந்திஜியிடம் காட்டினர். அதைப் பார்த்து சிரித்தபடி, 'ஏன் என்னுடைய காது பெரியதாக வரையப் பட்டிருக்கிறது...' என்றார், காந்திஜி.
'தங்களுடைய காது உண்மையில் பெரியதாகத்தானே இருக்கிறது...' என்றார், ஓவியர்.
'அப்படியா? நான் கண்ணாடி பார்ப்பதில்லை...' எனக் கூறினார், காந்திஜி.
**********
பிரிட்டன் முன்னாள் பிரதமர் சர்ச்சிலுடைய வாயிலிருந்து அவ்வளவு சீக்கிரம் யாதொரு வார்த்தையையும் வெளிக் கொண்டு வர முடியாது.
நேரடியாக எதற்கும் பதில் கூற மாட்டார்.
ஒரு கேள்விக்கு நேரான பதிலை பெற்று விடுவதாக கூறி சென்ற ஒருவர், சர்ச்சிலிடம், 'இப்போது மணி என்ன?' எனக் கேட்டார்.
உடனே, 'தங்களுடைய கடிகாரத்தில் என்ன மணியாகி இருக்கிறது?' என, பதில் கேள்வி கேட்டார், சர்ச்சில்.
அவ்வளவு தான்... கேட்ட நண்பருக்கு வாயடைத்து விட்டது.
***********
ஒருமுறை திருவண்ணாமலைக்கு
வந்து, பகவான் ரமண மகரிஷியை சந்தித்தார், தமிழ்த்தாத்தா உ.வே.சா.,
ஆசிரமத்தின் அமைதியும், ரமண மகரிஷியின் ஆன்மிக சக்தியையும் நுகர்ந்து இன்புற்ற உ.வே.சா., 'பகவானே எனக்கு சன்னியாசம் வாங்கிக் கொள்ள வேண்டும் என, நீண்ட நாள் விருப்பம். ஆனாலும், பாச, பந்தம் என்னை விட்டு போகவில்லை. நான் என்ன செய்வது?' என்றார்.
'என்ன உன் பாசம், பந்தம்...' எனக் கேட்டார், ரமணர்.
'பகவானே, இந்த ஏட்டுச் சுவடிகளை வைத்துக் கொண்டு, இரவும், பகலும் அல்லல்படுவதிலேயே மனம் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. அந்த பந்தம் விலகுமானால் நான், சன்னியாசம் வாங்கிக் கொள்ளலாம்...' என்றார், உ.வே.சா.,
அதற்கு, 'அது பந்தம் அல்ல. அது, உங்களுக்காக செய்து கொள்ளும் காரியமும் அல்ல. உலகத்துக்காக செய்யும் நல்ல காரியங்களும் ஒரு வகையான சன்னியாசம் தான்.
'குடும்பத்தை விட்டு வருகிற சன்னியாசிக்கு, உலகமே குடும்பமாகி விடுவதைப் போல், நீங்கள் செய்து வரும் மாபெரும் தமிழ்த் தொண்டே நல்ல சன்னியாச யோகம் தான்...' என, ஆசி வழங்கினார், ரமணர்.
********
சுகி சிவம் எழுதிய, 'வெற்றி நிச்சயம்' என்ற நுாலிலிருந்து:
அமெரிக்க ஜனாதிபதியாக, ஜான்.எப்.கென்னடி இருந்த போது, வெள்ளை மாளிகையில் தினமும் பள்ளி மாணவர்களை சந்திப்பார்.
ஒருநாள், பார்வையாளர்களில் பளிச்சென்று புன்னகையுடன் இருந்த ஒரு மாணவன், அவரை கவர்ந்தான்.
அந்த மாணவனிடம், 'உன் எதிர்கால லட்சியம் என்ன?' எனக் கேட்டார், கென்னடி.
'இன்று நீங்கள் இருக்கும் இடத்திற்கு, ஒருநாள் நான் வர வேண்டும். அது தான் என் லட்சியம்...' என்றான், அந்த மாணவன்.
அதைக் கேட்டு, விழிகளை உயர்த்தி பாராட்டினார், கென்னடி.
லட்சியம் போலவே, பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனான், அந்த மாணவன்.
அது, பில் கிளிண்டன்.
நடுத்தெரு நாராயணன்