sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஐம்பதிலும் ஆசை வரும்!

/

ஐம்பதிலும் ஆசை வரும்!

ஐம்பதிலும் ஆசை வரும்!

ஐம்பதிலும் ஆசை வரும்!


PUBLISHED ON : செப் 01, 2024

Google News

PUBLISHED ON : செப் 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலை நேர காபியை குடித்து முடித்து, சிகரெட் ஒன்றை பற்ற வைத்தார், இன்ஸ்பெக்டர் ராமதாஸ். அன்றைய தினசரி பத்திரிகைகளை கொண்டு வந்து தந்த, அவரது மனைவி வைஷ்ணவியின் முகம் வாடியிருந்தது.

திருப்பூரில் இருக்கும் அவளுடைய அம்மா வீட்டிற்கு சென்று, நான்கு நாட்கள் இருந்து வருவதாக கேட்டு, ஒரு வாரம் ஆகிறது. அவர் பதிலே சொல்லவில்லை.

''என்ன பொல்லாத தாய் வீடு. திருமணமாகி, 30 ஆண்டுகள் ஆச்சு. இன்னும் அம்மாவாம், அம்மா...'' என்றார். அவருடைய மொபைல் போன் ஒலிக்க, முன்னாள் கவுன்சிலர் தாமோதரன் அழைத்தார். இப்போதும் செல்வாக்குடன் இருப்பவர்.

''சொல்லுங்க, தாமு...''

''சார், உங்க உதவி தேவை.''

''செஞ்சுடலாம். என்ன விஷயம்?''

தாமோதரன் சொன்னதை கேட்ட, இன்ஸ்பெக்டர் ராமதாஸ் முகம் மாறியது.

ச்சே, காதல் கன்றாவி... இவங்க பாட்டுக்கு, 'லவ்' பண்ணி ஓட வேண்டியது. இவங்களை துரத்தி தேடி கண்டுபிடிக்கிறது. இதெல்லாம் ஒரு வேலையா?

ஓடிப்போன காதலர்கள் எங்கே போவாங்க? கோவில் அல்லது போலீஸ் ஸ்டேஷன். எத்தனையோ ஜோடிக்கு தான் திருமணம் நடத்தி வைத்தது ஞாபகம் வர, முகத்தில் பெருமிதம்.

ஆனால், இது பெரிய இடத்து விவகாரம். அப்படி விட முடியாது. திருமணம் வரை காதலர்கள் சென்று விடக்கூடாது. அதற்குள் அதை தடுத்தாக வேண்டும். உடனே, சுறுசுறுப்பாக, மொபைல் போனில், உத்தரவுகள் பிறப்பித்தார்.

''சிவா, சீக்கிரம் வா... என்ன இப்படி மெதுவாக நடக்கிற,'' என்றாள், மாதவி.

அவள் கண்களில் தெரிந்த காதலில் கரைந்த சிவகுமார், ஓடி வந்தார். அவருடைய கைகளை பலமாக பிடித்து, அவரை பத்திரமாக அழைத்து சென்றாள், மாதவி.

''மாதவி, நம்முடைய புகைப்படங்கள் வெளியே தெரிவதற்கு முன், ரயில் ஏறி சென்னையை கடந்துடணும்,'' என்றார், சிவா.

''எல்லாம் சிறப்பாக நடக்கும். தைரியமா இரு சிவா,'' என்றாள், மாதவி.

சிவகுமாரை விட, துணிச்சலுடன் தைரியமாக இருந்தாள், மாதவி. அவளை பார்க்க அவருக்கு சந்தோஷமாக இருந்தது. யாராவது தங்களை நோட்டமிடுகின்றனரா என்று கண்களை சுழற்றினார், சிவா.

பஸ் வர, அதில் காதல் ஜோடி ஏறிக் கொண்டது.

போலீஸ் ஸ்டேஷன் உள்ளே சத்தம் அதிகமாக இருந்தது.

''ஓடிப்போன காதலர்களின், உறவினர்கள் வந்து இருக்காங்க சார்,'' என்றார், கான்ஸ்டபிள்.

''தேடிட்டு இருக்கோம். அவங்க கிடைச்சா, தகவல் அனுப்புறதா சொல்லி அனுப்புங்க.''

தன் இடத்தில் அமர்ந்த இன்ஸ்பெக்டர் பெருமூச்செறிந்தார். மறுபடியும் கவுன்சிலர் போன்.

''சீக்கிரம் உள்ளாட்சி தேர்தல் வந்து தொலைக்கக் கூடாதா? இவங்க அதிலேயாவது கவனம் செலுத்துவாங்க...'' என்று சலித்துக் கொண்டவர், வேறு வழியின்றி கவுன்சிலரிடம் பேசினார்.

''தாமு, கவலைப்படாதீங்க. பிடிச்சுடலாம்.''

''சார், அங்கே பிரபு வந்திருக்கார்; பெரிய தொழிலதிபர். நமக்கு எவ்வளவோ செஞ்சிருக்கார். ப்ளீஸ், அவரிடம் மட்டும் சமாதானப்படுத்துங்க,'' என்றார், கவுன்சிலர்.

பிரபுவை வரவழைத்தார்.

''ஏட்டையா, டீ சொல்லுங்க.''

''பிரபு சார், ஓடிப்போனது, உங்க பையனா, பொண்ணா?''

''அவங்க கிடையாது, சார்.''

''பின்னே?''

''என்னுடைய தாய்,'' என்று, பிரபு கூற, திடுக்கிட்டார், இன்ஸ்பெக்டர்.

''உங்க அம்மாவா... என்ன சொல்றீங்க?'' என்றார்.

''ஆமா சார். அந்த அசிங்கத்தை ஏன் கேக்குறீங்க. எனக்கு தொழிலை பார்க்கவே நேரம் போதல. மனைவியும் வேலைக்கு போறாங்க. அப்பா இறந்து விட்டார். வீட்டில் அம்மா மட்டும் தான் இருந்தார். அவங்க தொண தொணப்பு தாங்காமல், முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டேன்,'' என்றார், பிரபு.

''அவங்க பெயர்.''

''மாதவி,'' என்றார்.

''உங்க அம்மாவை கடத்தி சென்றதாக புகார் கொடுத்திருக்கீங்க. அந்த ஆள் யார்?'' என்று கேட்டார், இன்ஸ்பெக்டர்.

''சிவகுமார். அவரும் முதியோர் இல்லத்தில் தான் இருந்தார்.''

''அவங்க ரெண்டு பேரும் சர்க்கரை நோய்க்கு, 'வாக்கிங்' கூட போயிருக்கலாம். அதுக்குள்ள புகார் கொடுத்திடறதா?''

''இல்லை சார். ரொம்ப நாளாகவே அவங்களுக்குள்ள நட்பு இருந்திருக்கு. இதை கேள்விப்பட்டு இரண்டு பேரையும் அதட்டினேன். எந்த பிரயோஜனமுமில்லை. நேற்று முதியோர் இல்லத்திலிருந்து ஜோடியாக போனவங்க, இன்னும் திரும்பி வரல.''

''சரி, நீங்க போங்க,'' என்றவர், கான்ஸ்டபிளை பார்த்து, ''சிவக்குமாருக்காக யார் வந்திருக்காங்க?' என்றார், இன்ஸ்பெக்டர்.

''அவங்க பொண்ணு,'' என்று கூறினார், கான்ஸ்டபிள்.

சிவகுமாரின் மகள் வித்யா உள்ளே நுழைந்தாள்.

''தயவு செய்து, இந்த செய்தி மீடியாவில் வராமல் பார்த்துக்குங்க, சார். எங்க மானமே போகுது,'' என்றாள், வித்யா.

''பெற்ற தகப்பனை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் போது, உங்க கவுரவம் கொடி கட்டி பறந்ததா?'' என்று கேட்டு, அந்த இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார், இன்ஸ்பெக்டர் ராமதாஸ்.

''முதியோர் இல்ல நிர்வாகியை கூட்டிட்டு வாங்க,'' என்று கான்ஸ்டபிளிடம் கூறி, காலை நேர ரவுண்ட்ஸ்க்கு புறப்பட்டார், இன்ஸ்பெக்டர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பஸ் நின்றது. சிவகுமாரும், மாதவியும் இறங்கினர்.

''இனி எங்கே போவது?'' என்றார், சிவகுமார். அவருக்கு, 65 வயதிருக்கும்.

''இந்த ஸ்டேஷனில் நுழைந்தால், நம்மை கண்டுபிடிச்சுடுவாங்க. புறநகர் ஸ்டேஷனுக்கு சென்று கும்மிடிப்பூண்டிக்கு போயிடுவோம். அங்கே என் தோழி யமுனா இருக்கிறாள். அவளிடம் பேசிட்டேன்,'' என்றாள், மாதவி. 60 வயது மாதவியின் புத்திக் கூர்மையை எண்ணி, மகிழ்ந்து போனார், சிவகுமார்.

போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த இன்ஸ்பெக்டர், அந்த மனிதரைப் பார்த்ததும் புரிந்து கொண்டார். நடேசன், முதியோர் இல்ல நிர்வாகி.

''நடேசன் சார், உங்க மேல நம்பிக்கை வச்சுத்தானே பிள்ளைங்க, அவங்க பெற்றோர்களை இல்லத்தில் சேர்க்கின்றனர்.''

''அதே பெற்றோர்கள், எவ்வளவு நம்பிக்கைகளுடன் தங்கள் பிள்ளைகளை வளர்த்திருப்பாங்க, சார்...'' என்று நடேசன் கூற, நிமிர்ந்தார், இன்ஸ்பெக்டர்.

''அப்ப பெரியவங்க மேல தப்பு இல்லையா?'' என்றார்.

''சிவகுமார், மனைவியை இழந்தவர். மாதவி, கணவரை இழந்தவர். இருவரும் இல்லத்தில் தான் சந்தித்தனர். தனிமையில் இருந்த இருவருடைய நட்பும், அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. அதுவே, காதலாக மாறிப் போச்சு,'' என்றார், நடேசன்.

''நீங்க இதை ஏன் அவங்க பிள்ளைங்க கிட்ட சொல்லலே?''

''அவங்க பெற்றோரை பார்க்கவே வருவதில்லையே, சார். போனில் கூட நலம் விசாரிப்பதில்லை. பணம் அனுப்பறதோட சரி. எப்படியோ அந்தம்மாவோட பையனுக்கு விஷயம் முன்னாடியே தெரிஞ்சு, அவர் செய்த கலாட்டாவில் இந்த முடிவுக்கு வந்திருப்பாங்க,'' என்றார், நடேசன்.

அமைதியாக இருந்தார், இன்ஸ்பெக்டர்.

''அவங்க என்ன சார் பெரிய பாவம் செஞ்சுட்டாங்க. காதலிச்சாங்க. ஓடிப் போய் திருமணம் செஞ்சு எங்கேயாவது சந்தோஷமாக வாழட்டுமே, சார்.''

''நீங்க சொல்றதும் சரியாதான் இருக்கு. ஏதாவது தகவல் தெரிஞ்சா சொல்லுங்க,'' என்றார், இன்ஸ்பெக்டர்.

மறுநாள் காலை, மணியம்மை முதியோர் இல்லத்திற்குள் போலீஸ் ஜீப் நுழைந்தது. இன்ஸ்பெக்டருடன், கவுன்சிலர் தாமோதரனும் இருந்தார்.

''ஓடிப்போன, சிவகுமார் மற்றும் மாதவியின் அறைகளை சோதனை செய்யுங்க. ஏதாவது தகவல் கிடைக்குதா பார்க்கலாம்,'' என்று, கான்ஸ்டபிளிடம் கூறினார், இன்ஸ்பெக்டர்.

நடேசனுடன் அமர்ந்து, இருவரும் டீ குடித்தனர்.

''சார், ஒரு லவ் லட்டர் மட்டும் தான் கிடைத்தது.''

இன்ஸ்பெக்டர் வாங்கி படித்து, கவுன்சிலரிடம் கொடுத்தார்.

''சூப்பர், ரொம்ப அழகான கவிதை. இதை படிச்சா எந்த பெண்ணோட மனசும் உருகும்.''

''சிவகுமார் கவிஞரா?'' என்றார், அதை படித்த, கவுன்சிலர் தாமோதரன்.

''இல்லை சார். இங்கே ஒருத்தர் தங்கியிருக்கார். தன்னை, கவிஞர் சின்ன பாரதி என்று சொல்லிக் கொள்வார். அவர் தான் இந்த மாதிரி வேலைகளை செய்வார்.''

சிறிது நேரத்தில், கவிஞர் சின்ன பாரதி வந்தார். அவருக்கு, 70 வயதிருக்கும்.

''நீங்க, கவிஞரா?'' என்றார், இன்ஸ்பெக்டர்.

''ஆமா, சார்.''

''எந்த பத்திரிகையில எழுதறீங்க.''

''எல்லா பத்திரிகையிலும் வாசகர் கடிதம் எழுதறேன்.''

''கவிஞர் சின்ன பாரதி, அற்புதம். சிறப்பாக எழுதியிருக்கீங்க. அப்புறம் இந்த நம்பருக்கு, 'மிஸ்டு கால்' கொடுங்க,'' என்றார், கவுன்சிலர்.

''ஐயா, என் கவிதையை பிரசுரிப்பீங்களா?''

''இல்லை. நீங்க, 'மிஸ்டு கால்' கொடுத்தா, எங்க கட்சியிலே உறுப்பினரா சேர்ந்துடலாம்,'' என்றார், நக்கலாக.

இன்ஸ்பெக்டரும், கவுன்சிலரும் அந்த இல்லத்தை சுற்றி பார்த்தனர்.

''தாமு, வெறுங்கையோட வந்தது எப்படியோ இருக்கு. பழங்கள், பிஸ்கட் வாங்கி வந்திருக்கலாம். இவங்களை பார்க்கவே பாவமா இருக்கு. ஒவ்வொருத்தர் கண்களிலும் ஏக்கம் தெரியுது. யாராவது தங்களை பார்க்க வரமாட்டாங்களா, தங்களிடம் ஏதாவது பேச மாட்டாங்களான்னு தவிப்பு,'' என்றார், இன்ஸ்பெக்டர்.

''கரெக்டா சொன்னீங்க, சார்.''

''ஜெயில்ல இருக்கிற கைதிகளை பார்க்க கூட, குடும்பத்தினர், நண்பர்கள் வராங்க. இங்கே அது கூட கிடையாது,'' என்று இன்ஸ்பெக்டர் கூறிக் கொண்டிருக்கும்போதே, ''அப்பு தானே நீ. எப்படி எருமை மாடு மாதிரி வளர்ந்துட்ட, சாப்பிட்டியாப்பா?'' என்று, தாமோதரனிடம் சிரித்தபடி கேட்டாள், ஒரு மூதாட்டி.

''நான் அப்பு கிடையாது,'' என்றார், தாமோதரன்.

''நீ பொய் சொல்றே. எனக்கு தெரியாதா. என் பையனோட நண்பன் நீ. அவன் தான் உன்னை அனுப்பியிருப்பான். என் மகன் நல்லா இருக்கானா? அவனை பார்த்துக்கோப்பா. அவன் வெகுளி,'' என்று அந்த மூதாட்டி பேச, அழுதுவிட்டார், தாமோதரன்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு திரும்பி கொண்டிருந்த வழியில், மொபைல் போன் சிணுங்க, இன்ஸ்பெக்டர் எடுத்து பேசினார்.

''சார், நான் கும்மிடிப்பூண்டி ஸ்டேஷன் எஸ்.ஐ., கிருஷ்ணா பேசறேன்.''

''சொல்லுங்க.''

''நீங்க தேடிக்கிட்டிருக்கிற ஜோடி, இங்கே தான் இருக்காங்க. என்ன செய்ய?''

''எதுவும் செய்யாதீங்க. அவங்களை நிம்மதியா வாழ விடுங்க,'' என்றார், இன்ஸ்பெக்டர் ராமதாஸ்.

இதைக்கேட்ட, தாமோதரன் முகத்தில் மலர்ச்சி.

'வாட்ஸ் - அப்'பில் குறுந்தகவல் வர, அதை பார்த்தாள், இன்ஸ்பெக்டரின் மனைவி வைஷ்ணவி. நாளை காலை, 6:00 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பூருக்கு இரண்டு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை பார்த்து கணவருக்கு போன் செய்தாள்.

''என்னோட கூட வருவது யார்?'' அவளுடைய குரலில் ஆனந்தம்.

''நான் தான் வைஷ். எனக்கு தான் பெற்றோர்கள் கிடையாது. உங்க அம்மாவை பார்க்கலாமே,'' என்றார், இன்ஸ்பெக்டர் ராமதாஸ்.

அப்சல்






      Dinamalar
      Follow us