
ஆக., 23 - தேசிய விண்வெளி தினம்!
நம் நாட்டின் விண்வெளி ஆய்வு திட்டம் மற்றும் ராக்கெட், செயற்கை கோளை தயாரித்து புவியின் சுற்றுவட்ட பாதையில் சரியாக நிலை நிறுத்துவதிலும், பிற நாடுகளின் செயற்கைக்கோளை கட்டண அடிப்படையில் விண்வெளிக்கு அனுப்பி வைப்பதிலும், சாதனை படைத்து வருகிறது, இந்தியா.
இந்த சாதனைக்கு பின்னணியாக இருப்பது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, இஸ்ரோ தான். 
கடந்த, 1962ல், நேரு பிரதமராக இருந்தபோது, 'இன்காஸ்பர்' என்று அழைக்கப்படும் விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய குழுவை ஏற்படுத்தினார். ஆக., 15, 1969ல், இது, 'இஸ்ரோ' ஆக மாறியது. 
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே, கடலோர மீனவ கிராமம் தும்பாவில் செயல்பட துவங்கியது, இஸ்ரோ.
இதன் தலைவராக, விக்ரம் சாராபாய் நியமிக்கப்பட்டு, தன்னுடைய இறுதி காலமான, 52 வயது  வரை (1971) பொறுப்பு வகித்தார். இவரே, இந்திய விண்வெளி ஆய்வு திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 
செயற்கை கோள்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள், இந்தியாவுக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே, அமெரிக்காவில் இருந்து செயற்கைக்கோள் ஒன்றை வாடகைக்கு எடுத்து வந்து, அப்போதைய பிரதமர் இந்திராவின் முன்னிலையில், செயல் விளக்கம் செய்து காண்பித்து, திட்டத்திற்கான ஒப்புதலை பெற்றார், விக்ரம் சாராபாய். 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் துவங்கிய, ஆறு ஆண்டுகளுக்குப் பின், சோவியத் ரஷ்யா ராக்கெட் மூலம் இந்தியாவின், ஆரியபட்டா செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 
நவ., 1, 1963ல், தும்பாவிலிருந்து முதல் ராக்கெட் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, அக்., 22, 2008 பிஎஸ்எல்வி -- சி2 ராக்கெட் மூலம், சந்திராயன் - 1 ஏவப்பட்டது. 
ஜூலை 22, 2019ல், ஜிஎஸ்எல்வி - மார்க் 3 ராக்கெட் மூலம், சந்திராயன் - 2 ஏவப்பட்டது. செப்., 6, 2019 நிலவில் தரையிறங்க  முடியாமல் நிலவின் தரையில் மோதியது. 
மனம் தளராத விண்வெளி விஞ்ஞானிகள், தொடர்ந்து குறைகளை சரி செய்து, அடுத்தகட்ட ஆய்வுக்காக, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டனர்.
ஜூலை 14, 2023, சந்திராயன் - 3, ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நிலவை நோக்கி பயணப்பட்டது. 
ஆகஸ்ட், 23ல், வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. நிலவின் தென் துருவப் பகுதியில் முதன் முதலாக வெற்றிகரமாக தரையிறங்கிய நாடு இந்தியா தான்.
'இந்த சாதனை நிகழ்ந்த நாளான, ஆகஸ்ட் 23ம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும்...' என, பிரதமர் மோடி அறிவித்தார். இந்த ஆண்டு முதல், இது கொண்டாடப்பட உள்ளது.
விண்வெளி அறிவியலுக்கான இஸ்ரோவின் அர்ப்பணிப்பு மகத்தானது. 
வி. எஸ். ராமசந்திரன்

