PUBLISHED ON : ஆக 18, 2024

மதராஸ் என அழைக்கப்பட்ட அக்காலம் முதல், சென்னை என அழைக்கப்படும் இக்காலம் வரை, சுவைமிகு ஹோட்டல்கள் நிறைந்தது, சென்னை மாநகரம். 
இந்த, ஹோட்டல்கள் பெரும்பாலும், டவுன் - நகரம் என்று அழைக்கப்பட்ட, வடசென்னைப் பகுதியில் தான் இருந்தன. அந்நாளில் கல்லுாரிகள், அலுவலகங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் இந்த நகரப் பகுதிகளில் இயங்கியதே, முக்கிய காரணம். 
கடந்த, 1950 வரை, பெரும்பாலான ஹோட்டல்களின் வாசலில், 'பிராமணாள் காபி ஹோட்டல்' என்ற பெயர் பலகைகள் காட்சி தரும்.
தங்கச்சாலை தெருவில், 'காசி பாட்டி ஹோட்டல்' என, இருந்தது. காசிக்கு சென்று வந்து, சிறிய அளவிலான ஹோட்டலை துவங்கினார், பிராமண அம்மையார் ஒருவர். இந்த ஹோட்டலில் எடுப்பு சாப்பாட்டின் விலை, ரெண்டணா; நெய் தாராளமாக பரிமாறப்படும். 
தம்புச்செட்டி தெருவில், பெரும்பாலான ஹோட்டல்களை, தஞ்சாவூர், உடுப்பி மற்றும் பாலக்காடு ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தினர். 
தம்புச்செட்டி தெருவில், 'மனோரமா லஞ்ச் ஹோம்' என்ற ஹோட்டல், கடந்த 1920ம் ஆண்டு, ஏ.நாராயணசாமி என்பவரால் துவங்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட இனிப்புகள் அனைத்துமே நெய்யில் தான் செய்யப்படும். 
வக்கீல் குமாஸ்தாக்கள் சங்கத்தினர், இந்த தெருவில் ஒரு கேன்டீனை துவக்கினர். இந்த கேன்டினில் வியாபாரம் பிற்பகல், 1:00 முதல், 2:00 மணி வரைதான். 
பகல் 2:00 மணிக்கு பிறகு, மீதமிருக்கும், இட்லி, போண்டா, வடை போன்றவற்றை பாதி விலைக்கு விற்று விடுவர். 
தம்புச்செட்டி தெருவில் சிற்றுண்டி வைத்தால் லாபம் தரும் என்ற நம்பிக்கை, பலரை இந்த தெருவுக்கு அழைத்தது.
ஹோட்டல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட, தாசப்பிரகாஷ் கே.சீதாராமராவ் ஆரம்பத்தில் இங்கு தான் வளரத் துவங்கினார். இந்த தெருவில், தங்கும் விடுதியையும் கட்டினார். அது மட்டுமின்றி, தன் பணியாளர்களை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு அனுப்பி, சென்னைக்கு வரும் ரயில் பயணிகளை தன் விடுதிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்வார்.
இன்று உலகளவில் மிகப் பிரபலமாக இருக்கும், 'மசாலா தோசை'யை சென்னைக்கு அறிமுகப்படுத்தியவரும், இவர் தான். நெய் தாராளமாக ஊற்றி, மைசூர் மசாலா தோசை என்று அழைக்கப்பட்ட இதன் விலை, அப்போது, அரையணா. 
அன்று, ஓர் இந்திய ரூபாய்க்கு, பதினாறு அணாக்கள். ஒரு அணாவுக்கு, நான்கு காலணா அல்லது பன்னிரண்டு தம்பிடிகள். அதாவது, ஒரு ரூபாய்க்கு, 192 தம்பிடிகள். பன்னிரண்டு தம்பிடிகள் கையில்  இருந்தால், வயிறு நிறைய சாப்பிடலாம். 
மைசூர் போண்டா என்ற சிற்றுண்டியை சென்னைக்கு கொண்டு வந்தவரும், சீதாராமராவ் தான். 
உடுப்பி சமையல் முறையில், சாம்பார், ரசம் ஆகியவற்றில் வெல்லத்தை சற்று கலப்பர். இதற்கு தனியான சுவை உண்டு. இரண்டு இட்லிக்கு, இரண்டு பக்கெட் சாம்பார் சாப்பிடுபவர்கள் அந்த நாளிலும் உண்டு. 
பிராட்வே குறுகிய சாலையிலும், பிரபலமான பல உணவகங்கள் இருந்தன. இந்த தொழிலில் முன்னோடியாக கருதப்படும், சங்கர் ஐயர், இங்கு, 'சங்கர் கபே' என்ற பெயரில் உணவகத்தை துவங்கி, மிகவும் பிரபலமானவராக இருந்தார். இந்த இடத்தில் தான் பின்னாளில், 'அம்பீஸ் கபே' இயங்கத் துவங்கியது. 
இன்று முழுமையாக மறக்கப்பட்ட மற்றொரு உணவகம், கராச்சி கபே. இதை துவக்கியவர்கள், சென்னையின் மிகப் பிரபலமான துணி வியாபாரிகளான, கராச்சியிலிருந்து வந்த, கிஷன்சந்த்ஸ் - செல்லாராம்ஸ் குடும்பத்தினர். 
இது, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரில் இருந்தது. சென்னை நகரின், 'ஏசி' வசதி செய்யப்பட்ட தனியறையோடு, அந்நாளில் சரித்திரம் படைத்தது, கராச்சி கபே. 
இந்த உணவகத்தின் வாசலில் நின்று வேடிக்கை பார்த்தபடி, 'உள்ளே போனா குளிருமாமே...' என்று, மூக்கின் மேல் விரலை வைத்தவர்களும் உண்டு. இந்த உணவகத்தின், கராச்சி அல்வா அன்றைய நாளில் மிகப் பிரபலம். 
இனிப்பு பண்டங்களுக்கு, காசி அல்வா, டில்லி பாதுஷா, கல்கத்தா மல்கோவா, பாம்பே அல்வா... இப்படி, வட மாநில அடையாளத்தோடு பெயர்கள் வைப்பது வழக்கம். இவற்றின் விலை, இரண்டணா தான். என்றுமே தனிச் சிறப்பு கொண்ட, பாதாம் அல்வா விலை, மூனணா. 
'பாதாம் அல்வா வேண்டும்...' என்று ஒருவர் கேட்டால், அவர் மிகப்பெரிய பணக்காரர் என்று அர்த்தம். 
பாதாம் அல்வா என்றால், உடனே மனதில் பளிச்சென்று தோன்றுவது, கோயம்புத்துார் கிருஷ்ண ஐயர் தான். மிகப்பிரபலமான இந்த உணவகம், திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை, தற்போதைய, பாரதியார் சாலையில் இருந்தது. 
இதன் உள்ளே சென்றால், ஆடம்பரமில்லாத, நடுத்தர வீடு போலத்தான் இருக்கும். ஆனால், இங்கு வக்கீல்கள், எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள், அன்றைய சென்னை நகரத்தின் பல பிரபலங்களை அடிக்கடி பார்க்கலாம்.
எஸ்.எஸ்.வாசன், கல்கி போன்றவர்களும் இங்கு வருவதுண்டு. பாதாம் அல்வாவைச் சாப்பிடுவதற்கென்றே சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருவர். 
அதுபோலவே, மயிலாப்பூரில் இயங்கிய, 'ராயர் ஹோட்டல்' மிகவும் பிரபலம். இங்கு இட்லி சாப்பிட்டால் தான் காரியங்கள் சரியாக நடக்கும் என நினைத்தவர்களில், நடிகர் ஜெமினி கணேசனும் ஒருவர். 
அதுபோலவே, தங்கச் சாலை தெருவில், பிரபலமாக இயங்கிய, 'சீனிவாஸ் பவன்' உணவகம், மாலை, 7:00 மணிக்குத் திறக்கப்பட்டு, நள்ளிரவைத் தாண்டிய பிறகே மூடப்படும். இங்கு என்ன விசேஷம் என்றால், பூரியுடன் பாசந்தி கொடுப்பர். 
உருளைக்கிழங்கு மசாலா வேண்டுமென்றால், முதலிலேயே சொல்ல வேண்டும். இல்லையென்றால், பாசந்தி தான் பரிமாறப்படும். இங்கு பூரி - பாசந்தி சாப்பிடுவதற்காக மயிலாப்பூரிலிருந்து பலர், இரவில் கார்களில் வருவர். 
உணவக வியாபாரம் சிலருக்கு புண்ணியத்தை மட்டுமல்லாமல், பணத்தையும் வாரிக் கொடுத்தது. அதில், பெருமளவில் வளர்ச்சி கண்டவர்கள், வி.ஆர்.ராமநாத ஐயர், சி.எம்.சர்மா, கே.சீதாராமராவ் ஆகியோர். 
ராமநாத ஐயருக்கும், சர்மாவுக்கும் சென்னை நகரத்தில், 100 வீடுகள் சொந்தமாக இருந்ததாக, அந்த நாளில் பரப்பரப்பாக பேசுவர். 
அதே அளவில் வளர்ந்தவர், உடுப்பியைச் சேர்ந்த, கே.கிருஷ்ணாராவ். இன்று உலகெங்கும் புகழைப் பரப்பிய உட்லண்ட்ஸ் உணவகத்தையும், விடுதியையும் நிறுவியவர், இவர் தான். 
தேவராஜ முதலி தெருவில் இருந்த, வெங்கட்ராம ஐயர் உணவகத்தில் சாப்பாடு தான் பிரபலம். தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். இங்கு என்ன விசேஷம் என்றால், ஒவ்வொரு நேரத்துக்கு ஒரு காய் கிடைக்கும். 
கூட்டம் நிரம்பி வழிவதால், பரிமாறப்படும் காய்கறிகள் உடனே தீர்ந்துவிடும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உருளைக்கிழங்கு பொரியல் என்றால், அரைமணி நேரம் கடந்ததும், வாழைக்காய் பொரியல், அடுத்து கருணைக்கிழங்கு பொரியல் பரிமாறப்படும்.
'இப்ப என்ன பொரியல்?' என்று கேட்டு பலர், டிக்கெட் வாங்குவர். அவ்வளவு பிரபலம் இந்த, வெங்கட்ராம ஐயர் ஹோட்டல். 
இரண்டாவது உலகப் போர் நடைபெற்ற காலத்தில், சென்னை மீது ஜப்பானியர் அணுகுண்டு போடுவர் என்ற பயத்தால், நகரமே காலியானது. பல உணவகங்கள் மூடப்பட்டன. அந்த பயம் நீங்கிய பிறகு, மீண்டும் ஹோட்டல்கள் துவக்கப்பட்டன. 
ஆனால், மீண்டும் துவங்கப்படாமலேயே மறைந்தது, கராச்சி கபே.
தொகுப்பு : அசோக் ராஜா. 
1871 - சென்னையின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1876 - சென்னை வழியே பக்கிங்ஹாம் கால்வாயின் அமைக்கப்பட்டது.
1611 - மசூலிப்பட்டினத்தில், ஆங்கிலேயர் தொழிற்சாலையை நிறுவினர்.
1↓641 - ஆண்ட்ரூ கோகனுக்குக் கீழ், கிழக்கு கடற்கரையில் இங்கிலாந்தின் முக்கிய தொழிற்சாலையாக சென்னை ஆனது.
1856 - சென்னையிலிருந்து ஆற்காடு வரை முதல் இருப்புப் பாதை.
1672 - சென்னை ஆவணங்களை முறையாக பதிவு செய்ய, ஆளுனர் லாங்ஹார்னின் கட்டளை இட்டார்.
1688 - சென்னை மாநகராட்சி உதயமானது. முதல் மேயர் ஹிக்கின்சன். மேயர் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
1692 - இளவரசர் கான் பக் ஷியிடமிருந்து, நாணயங்கள் அச்சடிக்க ஆங்கிலேயர்களுக்கு உரிமை வழங்கப்பட்டது.
1712 - பழைய கருப்பர் நகரில் முதல் ஆர்மீனியன் சர்ச் கட்டப்பட்டது.
1733 - ஆளுனர் மார்டன் பிட் ஆணைப்படி, சென்னை மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் வரைபடம் தயாரிக்கப்பட்டது.
1751 - புனித ஜார்ஜ் கோட்டையின் மேலாளர் ஆனார், ராபர்ட் கிளைவ்.
1757 - 83 - புனித ஜார்ஜ் கோட்டை பலப்படுத்தப்பட்டு, இன்றைய உருவைப் பெற்றது.
1786 - சென்னை அஞ்சல் துறை அமைக்கப்பட்டு, அஞ்சல் சேவை ஆரம்பமானது.
1792 - சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் திறக்கப்பட்டது.
1835 - சென்னை மருத்துவப் பள்ளி (பிற்காலத்தில், கிண்டி பொறியியல் கல்லுாரி) துவங்கப்பட்டது.
1837 - ஜெனரல் அசெம்பிளி பள்ளியை (பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லுாரி) நிறுவினார், ஜான் ஆண்டர்சன்.
1841 - மாநில உயர்நிலை பள்ளி (பிறகு மாநில கல்லுாரி) திறக்கப்பட்டது.
1842 - பச்சையப்பா மத்திய நிறுவனம் (பிறகு பச்சையப்பன் கல்லுாரி) ஆரம்பிக்கப்பட்டது.
1843 - முன்னோடியான, பல சரக்கு அங்காடி ஓக்ஸ் அண்ட் கோ ஆரம்பிக்கப்பட்டது.
1855 - கர்நாடக நவாப் என்ற பட்டம் பிடுங்கப்பட்ட பின், சேப்பாக்க அரண்மனையை அரசாங்கம் எடுத்துக் கொண்டது. சென்னையின் முதல் மிருகக்காட்சி சாலை ஆரம்பிக்கப்பட்டது. பொது தந்தி சேவை ஆரம்பமானது.

