sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூலை 28, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 28, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இப்படியும் சேவை செய்யலாமே!

நர்சாக இருந்து, பணி ஓய்வு பெற்றார், உறவினர் ஒருவர். அவரது பணி நிறைவு விழாவுக்கு சென்றிருந்தேன்.

மேடையில், ஒரு ஆணும் - பெண்ணும், லேப்டாப்பில் உள்ள, 'கரோக்கி' எனப்படும் பின்னனி இசையின் உதவியால், அருமையாக பாடினர். வந்திருந்த அனைவரும் ரசித்தனர். இருவரையும் பாராட்டி, 'நீங்கள் பாடகர்களா?' என, விசாரித்தேன்.

அவர்கள் சொன்ன விஷயம், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருவரும் நர்சாக பணிபுரிகின்றனர். தாங்கள் பணிபுரியும், ஜி.ஹெச்.,சில் உள்ள புற்றுநோய் வார்டில், வாரம் இருமுறை சென்று, பாட்டு பாடி, கச்சேரி செய்வது வழக்கமாம்.

'கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பர். அவர்களுக்கு நாங்கள் பாடும் பாட்டு, சந்தோஷத்தையும், மன ஆறுதலையும் தரும்; மன அழுத்தத்தையும் போக்கும். 'அதனால், நாங்கள் வாரம் இருமுறை, அந்த வார்டுக்கு சென்று, பாட்டுக் கச்சேரியை நடத்துவோம்...' என்றனர்.

அவர்கள் சொன்ன பதில், எனக்கு, மன நெகிழ்வை அளித்தது. மேடையில் ஏறி, இந்த விஷயத்தை நான், 'மைக்'கில் சொன்னதும், அரங்கமே எழுந்து நின்று, அவர்களை கை தட்டி, பாராட்டியது.

கா.பசும்பொன் இளங்கோ, மதுரை.

திருநங்கையின் உதவி!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு, நாங்கள் குடி போனோம். நான்காவது மாடியில் எங்களது வீடு. அக்குடியிருப்பில் மொத்தம், 40 வீடுகள் உள்ளன.

இரண்டு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் அனைத்தையும் வாங்கி வைத்து கொண்டோம். ஒருநாள், சமையலுக்கு முக்கியமான ஒரு பொருள் தேவைப்பட்டதால் வாங்குவதற்காக, நான்காவது மாடியிலிருந்து இறங்கி வந்தேன்.

அப்போது, குடியிருப்புவாசி ஒருவர், விபரம் கேட்டார். விஷயத்தை சொன்னதும், 'வேலை கேட்டு வந்தவருக்கு உதவ, நிர்வாகத்திடம் பேசி, குடியிருப்பில் எடுபிடி வேலை செய்ய மற்றும் சிறு சிறு வேலைக்கு, திருநங்கையை பணியில் அமர்த்தியுள்ளோம்.

'அந்த திருநங்கை, கீழ் தளத்தில் இருப்பார். மருந்து, மாத்திரை மற்றும் வேறு ஏதேனும் பொருட்கள் தேவைப்பட்டால், அவருக்கு போனில் தகவல் கூறி, 'ஜி பே' செய்தால் போதும். அவரது, 'டூ - வீலரில்' சென்று, பொருட்களை, 'பில்'லோடு, வாங்கி தந்து விடுவார். 'இதற்காக மாதா மாதம், அனைத்து வீட்டினரும் ஒரு தொகை தருகிறோம். காலை, 9:00 மணியிலிருந்து மாலை, 6:00 மணி வரை வேலை செய்வார்...' என்றார்.

திருநங்கையரும் வாழ்வில் முன்னேற, அவர்களுக்கு வேலை தந்து உதவிய குடியிருப்புவாசிகளையும், நிர்வாகத்தையும் பாராட்டி, திருநங்கையின் மொபைல் போன் எண் பெற்று வந்தேன். இதே நடைமுறையை, மற்ற குடியிருப்புவாசிகளும் பின்பற்றலாமே!

மொ.நல்லம்மாள், கோவை.

நூலகரின் வித்தியாசமான முயற்சி!

கிளை நுாலகம் ஒன்றில், நுாலகராக பணியாற்றி வருகிறார், நண்பர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ரிசல்ட் வந்த பின், பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள், ஐ.டி.ஐ., பிற தொழில் பயிற்சி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கைக்கு நாளிதழ்களில் விளம்பரம் மற்றும் செய்தி வெளியிடுகின்றன.

மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக அரசு தரப்பு, தனியார் கல்லுாரிகள் வெளியிடும் விளம்பரங்களை தினமும் வெட்டி எடுத்து, தேதி வாரியாக தனியாக நோட்டில் ஒட்டி வைத்து விடுகிறார். அந்த ஊரில் உள்ள மாணவ - மாணவியர் மட்டுமின்றி, அருகிலுள்ள கிராமங்களில் வசிக்கும் மாணவர்களும், நுாலகரை அணுகி, தேவையான விபரங்களை பெற்றுச் செல்கின்றனர்.

எந்தெந்த பாடப்பிரிவு, எந்த கல்லுாரி, பல்கலையில் இருக்கிறது என்பது பற்றி பெற்றோர்களும் தெரிந்து கொள்கின்றனர். நுாலகரை சந்தித்தால், சில நிமிடங்களில் நமக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கும் என, நம்பி வருகின்றனர்.

வழி தெரியாமல் தடுமாறும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, நல்ல வழியைக் காட்டுகிறார். இவரைப் போல், பகுதி நேர, நகர்புற, கிளை, மாவட்ட மைய நுாலகங்களில் பணியாற்றுவோர், கல்வி, வேலை வாய்ப்பு சார்ந்த செய்தி, விளம்பரங்களை தொகுத்து உதவலாமே!

சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.






      Dinamalar
      Follow us