PUBLISHED ON : ஜூலை 28, 2024

ஜூலை கடைசி ஞாயிறு - தேசிய மர தினம்!
நாம் வாழும் பூமியில், ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது, மரங்கள். மனிதர்கள் சுவாசிப்பதற்காக காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை மரங்கள் எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனை வெளியிடுகிறது. அதை தான் மனிதர்கள் சுவாசிக்கின்றனர்.
மழையை வானத்திலிருந்து வரவழைப்பதற்கு இருக்கும் ஒரே வழி, மரங்களை வளர்ப்பது தான். இன்று, நாம் சந்திக்கும் இன்னொரு சவால், காற்று மாசுபாடு. இதிலிருந்து தப்பிக்கவும் மரங்கள் தான் நமக்கு கைகொடுக்கின்றன.
மழைநீர், அது போகும்போது, நிலப்பகுதி மேல் உள்ள மண்ணையும் எடுத்து போகிறது. இதை தவிர்க்க ஒரே வழி, அதிகளவில் மரங்களை நடுவது தான். அடுத்து வரும் காலங்களில் வெப்ப சலனத்தை தாக்குபிடிக்க, கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் மரங்கள் நட்டு, பாதுகாப்பாக வளருங்கள்.
மரங்கள் அதிகம் உள்ள இடங்களில் வாழும் குழந்தைகளுக்கு, ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு குறைவு. அதிக மரங்கள் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், குறைவான அளவில், இதய மற்றும் வளர்சிதை மாற்ற உடல்நலக் குறைபாடுகளைக் கொண்டுள்ளனர். மேலும், இதய அல்லது நுரையீரல் நோயால் இறக்கும் வாய்ப்பு குறைவு என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.
இயற்கையான நிழல் தருகின்றன, மரங்கள். உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள வெப்பத்தை குறைத்து, வீசும் காற்றை குளிர்விக்கும். தோட்டம் மற்றும் பழ மரங்களைப் பராமரிப்பது, ஒரு மன சிகிச்சையாக இருந்து, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
மரங்கள் சூழ்ந்த இடத்தில் வாழும் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன் வாழ்வதாக, ஜப்பானிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
வீட்டிலேயே, முருங்கை, வாழை, மா, பலா, பப்பாளி, சீத்தாப்பழம், கொய்யா, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, வேப்பிலை என, பயனுள்ள மரங்களை நட்டு வளர்க்கலாம்.
மா, பலா மற்றும் வாழை ஆகியவை முக்கனிகளாக கருதப்படுகிறது. அதேபோல், பாதிரி, வன்னி, மா, மந்தாரை, வில்வம் ஆகியவை, பஞ்ச மரங்கள் என, அழைக்கப்படுகிறது.
வீட்டின் முன் குளிர்ச்சி தரும் வேப்ப மரம் வைக்கலாம்.
வீட்டுக்கு அருகில் வேப்பமரம் இருந்தால், நம் ஆரோக்கியம் எப்போதும் மேம்பட்ட நிலையில் இருக்கும். இது மூலிகை மரம் என்றும் சொல்லலாம். இதன் இலைகள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.
வேப்பங்காற்று உடல் நலனுக்கு நல்லது. மலேரியா கொசுக்களை கூட வீட்டை சுற்றாமல் தடுக்கிறது. இதன் காரணமாகத் தான் நம் முன்னோர், தோட்டம் அமைக்கும் போது, வீட்டிற்கு அருகில் இரண்டு வேப்ப மர கன்றுகளையும் நடுவதுண்டு.
ஞானதேவராஜ்