
இளைஞர்களின் வித்தியாமான முயற்சி!
எங்கள் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், கடப்பாரை, மண்வெட்டி, பூச்சு கரண்டி, செடி வெட்டும் கத்தரி கோல், ஒட்டடை அடிக்கும் குச்சு, டிரில்லிங் மெஷின், டூவீலர் வாட்டர் சர்வீஸ் மோட்டார் என, வீட்டு வேலைக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் குவித்து வைத்திருந்தனர். அதன் அருகில், 'பொருட்கள் வாடகைக்கு கிடைக்கும்' என்ற அறிவிப்பு பலகையும் இருந்தது.
அதுகுறித்து கேட்டபோது, 'எப்போதாவது தேவைப்படும் பொருட்கள் பெரும்பாலும் வீடுகளில் வைத்திருப்பதில்லை. அந்த பொருட்கள் தேவைப்படும் போது, 'சிறிய வேலைக்கு போய் நிறைய பணம் தந்து, அதை, வாங்க வேண்டுமா...' என நினைத்து, அதை வாங்காமல் விட்டுவிடுகின்றனர்.
'இன்னும் சிலரோ, உரிய கருவி இல்லாமல், அந்த வேலையை ஏனோ தானோ என செய்து விடுகின்றனர்.
'இப்படி தான் எங்கள் வீட்டிலும் நடந்தது. இதையடுத்து, தேவைப்படும் பொருட்களை, ஊர் ஊராக கொண்டு சென்று, வாடகைக்கு விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. என்னைப் போல், ஐ.டி.ஐ., படித்துவிட்டு, வேலை இல்லாமல் இருந்த நண்பனையும் சேர்த்து, தொழிலில் இறங்கினோம்.
'அதன்படி வங்கியில் கடன் பெற்று, பொருட்களை வாங்கினோம். சொந்தமாக பழைய மினி டோர் வாகனம் ஒன்றும் வாங்கி, அதில் பொருட்களை ஏற்றி, ஊர் ஊராக கொண்டு சென்று, வாடகைக்கு விட்டு வருகிறோம்.
'எங்களிடம் பொருட்கள் வாடகைக்கு எடுப்பவர்களிடம், ஆதார் கார்டு காபி மற்றும் போன் எண் பெற்று, ஒரு நாளில் இருந்து மூன்று நாட்கள் வரை வாடகைக்கு தருகிறோம். அதிக நாட்கள் பொருட்கள் தேவைப்படுவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வாடகையை நிர்ணயம் செய்து, அனுப்புகிறோம்.
'நாங்களே எதிர்பாராதவிதமாக நிறைய பேர் இந்த வசதியை பயன்படுத்தி கொள்கின்றனர். எங்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது...' என்றார்.
அவர்களின் வித்தியாசமான முயற்சியை பாராட்டி, எனக்கு தேவைப்பட்ட கடப்பாரை ஒன்றை வாடகைக்கு எடுத்து வந்தேன்.
பி.என்.பத்மநாபன், கோவை.
பள்ளி தாளாளரின் மனிதாபிமானம்!
சமீபத்தில், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நண்பரைச் சந்திக்க, அவருடைய பள்ளிக்குச் சென்றிருந்தேன்.
அப்போது அங்கு வந்த, 7--0 வயதை கடந்த, கணவரை இழந்த பாட்டி ஒருவர், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட அனாதை என்று தன்னைக் கூறி, பள்ளி செக்யூரிட்டியிடம் பிச்சை கேட்டு, நச்சரித்துக் கொண்டிருந்தார். கேட்டுக்கு வெளியே இருந்தபடியே, எங்களிடமும் கையேந்தினார்.
அப்போது, பள்ளி தாளாளரின் கார் உள்ளே வந்தது.
காரிலிருந்தபடியே, செக்யூரிட்டியிடம் விபரத்தைக் கேட்டார், தாளாளர்.
பாட்டியை அருகே அழைத்து, 'இனிமே நீங்க இப்படி பிச்சை எடுக்க வேண்டாம். ஸ்கூல்ல வேலை போட்டுக் கொடுக்கிறேன். தோட்டக்காரருக்கு உதவியா, களை பறிக்கிற, தண்ணீர் பாய்ச்சற வேலையை செய்யுங்க. ஸ்கூல் கேன்டீன்ல சாப்பிட்டுக்கிட்டு, பணியாளர்களுக்கான குவார்ட்டர்ஸ்ல தங்கிக்கோங்க...' என்று கூறி, அவரை ஆபீசுக்கு அழைத்து வருமாறு, செக்யூரிட்டியிடம் சொல்லி சென்றார்.
பிச்சையெடுத்து பிழைத்தவரை, மாதம் ஊதியம் பெறுபவராக மாற்றிய, பள்ளி தாளாளரின் மனிதாபிமானத்தை, நெகிழ்ந்து வாழ்த்தினேன்.
வடிவேல் முருகன், நெல்லை.
பயனுள்ள திட்டம்!
நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அச்சமயம், வெளியே போயிருந்த அவரும் வந்து சேர்ந்தார். தீபாவளி சீட்டு கட்டப் போயிருந்ததாக கூறினார். அதுபற்றி தெரியாததால், விபரம் கேட்டேன்.
'இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான,
10 மாதங்களுக்கு, மாதம், 250 ரூபாய் செலுத்த வேண்டும். தீபாவளிக்கு ஒரு வாரம் முன், அவர்கள் நம்மை அழைத்து, தீபாவளி, 'பேக்கேஜ்' கொடுப்பர். அத்துடன், 1,000 ரூபாய் ரொக்கமும் தருவர்.
'அந்த, 'பேக்கேஜில்' தீபாவளி பலகாரங்கள் செய்ய தேவையான மாவு வகைகள், நெய், சர்க்கரை, வெல்லம் மற்றும் பருப்பு வகைகள் என, பல பொருட்கள் இருக்கும். அத்துடன் சில, 'காஸ்மடிக்' பொருட்களும் இருக்கும்...' என்றார்.
வழக்கமாக தருவது போல் ஸ்வீட், பட்டாசு மற்றும் பாத்திரம் தராமல், நாம் செலுத்தும் மொத்தத் தொகை 2,500 ரூபாயில், 1,000 ரூபாயை நமக்கே திருப்பித் தருகின்றனர். மீதிப் பணத்தில், தீபாவளிக்கு தேவைப்படும் பொருட்களை, 'பேக்கேஜ்' ஆக தருவது பயனுள்ள திட்டமாக இருந்தது.
மாதந்தோறும் சிறு தொகை செலுத்துவதோடு, தீபாவளி நேரத்தில் நம் செலவுச் சுமையை குறைக்கும் இதுபோன்ற, திட்டங்களில் இணைந்து, பண்டிகை காலத்தில் பயன் பெறலாமே!
— எம்.சுப்பையா, கோவை.