/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (12)
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (12)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (12)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (12)
PUBLISHED ON : அக் 20, 2024

படப்பிடிப்பு இடைவேளை நேரத்தில், நான் ஒலிப்பதிவு கூடம் செல்வேன்.
அங்கே போனால், எம்.எஸ்.விஸ்வநாதனோ, கே.வி.மகாதேவனோ இருப்பர்.
சிறிது நேரத்தில், பி.சுசீலா வருவார். இருவரும் பேசிக் கொண்டிருப்போம்.
சாப்பாட்டு நேரமென்றால், நான் சுசீலாவை அழைத்துக் கொண்டு, என் அறைக்கு வந்து விடுவேன். நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் சாப்பிடுவோம்.
அதேபோல, பி.சுசீலாவும், 'யாருடைய ஷூட்டிங்?' என்று கேட்டு, என், 'ஷூட்டிங்' என்றால் வந்து உட்கார்ந்து விடுவார்.
நானும், சுசீலாவும் எப்படி தோழிகளோ, அதே போல், எல்.ஆர்.ஈஸ்வரியுடனும் பழகுவேன்.
பி.சுசீலா பாடிய எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும்.
பள்ளி நாட்களில், நான் ஸ்கூலுக்காகப் பாடிக் கொண்டிருந்தேன். நடிப்பு என்று வந்த பின், என் கவனம் பாடலை விட்டு போய் விட்டது.
என் சம கால, சிறந்த இயக்குனர்களில் ஒருவர், ஸ்ரீதர். அவரது இயக்கம் மட்டுமல்லாது, அவர் எழுதும் வசனங்களும் மிகவும் பிரபலம். எங்களுக்கெல்லாம் பேசுவதற்கு சுலபமாகவும் இருக்கும்.
கல்யாண பரிசு படத்தில், ஜெமினி கணேசனை, கல்யாணம் செய்து கொள்ள விஜயகுமாரி விரும்புவார். ஜெமினிகணேசனும் ஒத்து கொள்வார்.அப்போது நான் அவரிடம், 'என்னை படைத்த தெய்வத்தை விட, என்னைப் பெற்ற தாயை விட மேலான தெய்வம் நீங்க தான் பாஸ்கர்...' என்று ஒரு வசனம் பேசுவேன். அதெல்லாம் இன்னமும் நினைவில் இருக்கிறது.
ஸ்ரீதர், ஒரு காட்சி வைத்தாரென்றால், அது ஓவியம் போல் இருக்கும்.
இதில், கேமரா மேனுக்கும் பங்கு இருந்தாலும், காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை, அவர் தான் தீர்மானிப்பார்.
ஸ்ரீதரின், கல்யாண பரிசு, விடிவெள்ளி, கல்யாணப்பரிசின் தெலுங்கு தயாரிப்பான, பெல்லிகாலுகா படங்களில் நான் நடித்துள்ளேன்.
தெலுங்கில், நாகேஸ்வர ராவ் மற்றும் கிருஷ்ணகுமாரி (சவுகார் ஜானகியின் தங்கை) ஆகியோருடன் நடித்திருக்கிறேன்.
அப்போதெல்லாம் தமிழ்ப் படம் எடுக்கும்போதே, தெலுங்கிலும் எடுத்து விடுவர். தெலுங்கிலும் நான் தான் இருப்பேன்.
இந்த படத்திற்கு ஒருமுறை, அந்த படத்திற்கு ஒருமுறை, 'மேக் -அப்' போடுவது, 'செட்' போடுவது, உடை மாற்றுவது, 'பிக் அப், டிராப்' என்பதெல்லாம் இருக்காது. அதே உடை, அதே, 'மேக் அப், செட்' என்பதில் நேரமும், பணமும் மிச்சமாகும். 'ஹீரோ' மட்டும் வேறாக இருப்பார்.
தேவர் அண்ணனை தயாரிப்பாளராக மட்டுமே நினைக்க முடியாது. பழைய காலத்தில் நடிகராக எப்படி இருந்தாரோ, அதேபோல் படப்பிடிப்பு தளம் வருவார். மேல் சட்டை போட மாட்டார். அவர் வந்தாலே அங்கு, 'குஷி மூட்' எழும்பி விடும். கலகலவென்று இருப்பார்.
பேசிய பணத்தை, என் அம்மாவிடம் முழுவதும் கொடுத்து விடுவார்.
படப்பிடிப்பு துவங்கும் அன்றே, வெளியாகும் தேதியையும் சொல்லி விடுவார். அவர் சொன்ன தேதியில் வெளியாகி விட வேண்டும். அந்த நாள், நல்ல நாளா, இல்லையா என்றெல்லாம் பார்க்க மாட்டார். படம் வெளியாகப் போகும் தியேட்டர்கள் உட்பட எல்லாவற்றையும், 'புக்' செய்து வைத்திருப்பார்.
அதே நாளில், போட்டியாக எவ்வளவு பெரிய படம் வெளியானாலும், அதுபற்றி கவலைபட மாட்டார். 'என் படம் வெளியாகணும்...' என்பார். நுாறு நாள் ஓடணும் என்றால், நுாறு நாட்கள் ஓடும்.
எம்.ஜி.ஆருடன், தேவர் அண்ணன் இருப்பார்; அங்கே நானும் இருப்பேன். ஒரு குடும்பம் மாதிரி இருக்கும்.
ஒரு படத்துக்கு தேதி கொடுத்து விட்டால், 'அந்த தேதியை எடுத்து வச்சுருங்க...' என்பார். அந்த அளவு நம்பிக்கை. செட்டில் இருக்கும் அனைவரையும் நன்றாக பார்த்துக் கொள்வார்.
நடிகர் அசோகன் கொஞ்சம் முரடு. செட்டுக்கு வந்ததும், என் கையைக் கொஞ்சம் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்.
தேவர் அண்ணன் பார்த்து விட்டால், 'ஐயையோ, அது லட்சக்கணக்கான மதிப்புள்ள கைப்பா. அவ்வளவு கெட்டியாய் பிடிக்காதே. கொஞ்சம் மெதுவா பிடிச்சுக்கோ...' என்பார்.
ஒருமுறை, ஸ்டுடியோ ஒன்றில், கண்காட்சி போல கடைகள் போட்டிருந்தனர். வேறு யாரும் அங்கு வர முடியாது என்பதால், திரை உலகை சேர்ந்தவர்கள் மட்டுமே கடை கடையாக பார்த்துக் கொண்டு வந்தோம். அங்கே, உம்மிடியார்ஸ் நகை கடையில், நெக்லஸ் எடுத்து அணிந்து பார்த்தேன். ரொம்பவும் பிடித்திருந்தது. அதை,'பேக்' செய்ய சொன்னேன்.
'இல்லம்மா, அதை முன்பே, சாவித்திரி மேடம் வாங்கிட்டாங்க...' என்றனர்.
எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளத் தெரியாது என்பதால், என் முகம் ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. ஏமாற்றத்துடன் பேசாமல் வந்து விட்டேன்.
அந்த படத்தின் நுாறாவது நாள் விழாவில், எல்லாருக்கும் பரிசளித்துக் கொண்டிருந்தனர். என் பெயர் அழைக்கப்படவும், நான் மேடைக்கு சென்றேன். எனக்கும் பரிசளித்தனர்.
பரிசு கொஞ்சம் வித்தியாசமாய் ஒரு பெட்டி வடிவில் இருந்தது.
கீழே வந்து திறந்து பார்த்தால், அன்றைக்கு உம்மிடியார்ஸ் கடையில் பார்த்த அதே நெக்லஸ்.
சிறிது நேரத்திற்கு என்ன நடந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இதற்கு தேவர் அண்ணன் மட்டும் காரணமல்ல, எம்.ஜி.ஆரும் தான்.
இதுபோன்று, ஒரு சந்தோஷத்தையும், அதிர்ச்சியையும் என் வாழ்வில் அதுவரை அனுபவித்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அன்றைக்கு கடையில் எடுத்து பார்த்து, நான் ஏமாந்தேன் என்பதை எப்படியோ தெரிந்து, அதே கடையில், 'ஆர்டர்' செய்து, படத்தின், 100வது நாள் விழாவில் எனக்கு பரிசளித்துள்ளனர்.
நான் அமெரிக்கா சென்றிருந்த போது, கவிஞர் கண்ணதாசன் ஆஸ்பத்திரியில் இருப்பதை அறிந்து, பார்க்க விரும்பினேன். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த, கண்ணதாசன், அங்குள்ள ஆஸ்பத்திரி மற்றும் டாக்டர்களை பற்றி கேள்விப்பட்டு, அங்கிருக்கும் மிஷின்களை எல்லாம் பார்த்து, நாமும் ஒரு தரம், 'செக் - அப்' செய்து கொள்ளலாம் என, சாதாரணமாகத்தான் போயிருக்கிறார்.
நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காரர்கள், கண்ணதாசனை பார்க்க புறப்பட்டவுடன், நாங்களும் அவர்களின் காரில் சென்றோம்.
தொடரும்.
நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்.
- எஸ்.விஜயன்