sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : அக் 20, 2024

Google News

PUBLISHED ON : அக் 20, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

பீச் மீட்டிங். வழக்கம் போல அனைவரும் ஆஜராகி இருந்தனர். இருள் கவ்வும் நேரம். வானத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார், குப்பண்ணா.

'என்ன ஓய்... வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறீர். தங்க மழை கொட்ட போகிறதா?' என்றார், 'திண்ணை' நாராயணன்.

'இல்லப்பா... வானத்துல ரெண்டு நிலா தெரியும்ன்னு சொன்னாங்க. அதான் பார்க்கிறேன்...' என்றார், குப்பண்ணா.

'என்னது... ரெண்டு நிலாவா? பழைய நிலா குட்டி போட்டுட்டதா? நானும் பார்க்கணும்பா...' என்றார், ராமசாமி அண்ணாச்சி.

'அது நிலா இல்லை ஓய். மிகப்பெரிய விண்கல்லாம். கொஞ்ச நாளுக்கு வானத்தில் தெரியுமாம்...' என்றார், நாராயணன்.

வாயை பிளந்து கேட்டுக் கொண்டிருந்த, ராமசாமி அண்ணாச்சியை பார்த்து, 'ஓய், பெரிசு, வாயில் கொசு போயிட போகுது. மேக மூட்டத்தால் வழக்கமா தெரியும் நிலாவையே பார்க்க முடியல. இதில் இரண்டாவதை எப்படி பார்க்கிறது.

'டெலஸ்கோப்பில் தான் பார்க்கணுமாம். பிர்லா கோளரங்கம் அழைத்துப் போகிறேன். இப்ப வழக்கமான வேலையைப் பார்ப்போம்...' என்று படப்படத்தார், லென்ஸ் மாமா.

'டெலிட்டா கூட்டிட்டு போறயா லெஞ்சு...' என்றார், அண்ணாச்சி.

'உம்மோட இதே ரோதனையா போச்சு. அது, 'டெலிட்' இல்லை. 'டெபனிட்' - நிச்சயமா என்று தமிழில் சொல்றதுக்கென்ன?' என்று எரிந்து விழுந்தார், லென்ஸ்.

'சரிப்பா, கோச்சுக்காதே... நான் சொல்ல வர்றது புரியுது தானே. அப்புறம், நானும் இங்கிலீஷ் கத்துக்க வேணாமா?' என்றார், அப்பாவியாக அண்ணாச்சி.

இவர்களது கலாட்டாவை ரசித்துக் கொண்டிருந்த என்னை, 'ஹலோ மணி...' என்ற குரல் திரும்பி பார்க்க வைத்தது.

பல்கலைக்கழகம் ஒன்றில், 'அஸ்ட்ரானமி' அதாவது, வானியல் துறை பேராசிரியர் ஒருவர் நின்றிருந்தார். அவரை வரவேற்று, மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.

'துாரத்தில் வரும்போதே, உங்களைப் பார்த்துட்டேன். எதைப் பற்றியோ சீரியசா விவாதித்துக் கொண்டிருந்தீர் போலிருக்கு...' என்றார், பேராசிரியர்.

'இரண்டு நிலா தெரிவதை பற்றி தான் பேசிட்டு இருந்தோம். இதை பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்திருக்குமே! எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்...' என்றார், குப்பண்ணா.

கூற ஆரம்பித்தார், பேராசிரியர்:

இரண்டாவது வருவது, நிலா இல்லை. அது ஒரு விண்கல். 5 முதல் 20 மீட்டர், விட்டம் கொண்ட மிகப்பெரிய பாறை. இதன் மீது சூரிய ஒளி பட்டு, பூமியை நோக்கி திரும்பும். அப்போது, இந்த பாறை ஒளிர்ந்து, இன்னொரு நிலா போல் காட்சியளிக்கும்.

வழக்கமான நிலவை விட, இது மிகவும் சிறியதாக தென்படும் என்பதால், தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். நவம்பர் 25ம் தேதி வரை வானில் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். நிலா பற்றி இன்னொரு சுவாரஸ்யமான தகவல், இலக்கியத்தில் காணப்படுகிறது.

குழந்தை பருவத்திலிருந்தே, நிலவுக்கும், நமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பொதுவாக, பாட்டிகள், நம் சிறுபிராயத்தில் நிலாவைப் பற்றி பல கதைகள் கூறி, அதை பற்றி ஓர் பிரமிப்பை நம் எண்ணத்தில் விதைத்து விட்டனர். நிலாவுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை நம்மில் பலருக்கும் ஏற்படுத்தி விட்டனர் என்பது நிதர்சனம்.

இந்த ஆவல் தோன்றிய போது, நாமாவது, நிலாவுக்கு போவதா என, வேடிக்கையாக இருந்திருக்கலாம்.

ஆனால், இன்று நம் திருநாட்டின் அறிவியல் தொழில் நுட்பத்தால், இது சாத்தியம் ஆக வாய்ப்பு வந்துவிட்டது. அந்தக் காலத்திலேயே, முண்டாசு கவிஞர் பாரதி, 'வானையளப்போம்... சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்...' என்று, தம்முடைய தீர்க்க தரிசனத்தால் பாடியது இன்றைக்கு பலித்திருக்கிறது.

பழங்காலம் தொட்டே நிலவோடு நாம் கொண்டிருக்கிற உறவுக்கும், அதை அடைய முயல்கிற முயற்சிக்கும் சான்றாக ஒரு பாடல், முத்தொள்ளாயிரத்தில் இடம் பெற்றிருக்கிறது.

வீறுசால் மன்னர் விரிதாம வெண்கொடையைப்

பாற எறிந்த பரிசயத்தால் - தேறாது

செங்கண்மாக் கோதை சினவெங் களியானை

திங்கள் மேல் நீட்டுந்தன் கை...

என்கிறது அப்பாடல்.

அதாவது, சேர அரசனின் படையில், இருந்த யானை போர்க்களத்தில், கடுஞ்சினத்துடன் போரிடும் குணம் உடையது. போரின் முடிவில், எதிரி அரசர்களின் வெண்கொற்றக் குடையைப் பறித்து எறியும் குணமும், வழக்கமும் கொண்டது. இப்படிப்பட்ட யானை படையை உடைய மன்னவனுக்கு பகைவர்கள் இருக்க முடியுமா?

அதனால், இப்போது போர் ஏதும் இல்லை. வெறுமனே தின்று, தின்று பொழுது போக்கக் கூடிய, அந்த யானை, போர்க்களத்தை நினைத்து, அதே பழக்கத்தில் பகை அரசனின் வெண்கொற்றக் குடையோ என்று எண்ணி, வானத்தில் தோன்றும் நிலவை பறிப்பதற்காக, தன் கையை நீட்டும் என்பது தான், இப்பாடலின் பொருள்.

வல்லரசுகளோடு போட்டியிட்டு, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது, நம் பாரத தேசம். உலகின் கவனத்தை நம் பக்கம் திருப்பி, நம் வெற்றியை உலகம் பார்த்துக் கொண்டிருப்பது, இந்தப் பாடலுக்கு எவ்வளவு பொருத்தமாக அமைந்துள்ளது என்பதை கவனியுங்கள்.

- என்று கூறி முடித்தார், பேராசிரியர்.

'வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலை தொடலாமா?' என்ற, கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வந்தது. நம் முன்னோர்களின் கற்பனை எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்று வியந்தேன், நான்.

பிர்லா கோளரங்கம் போயே ஆக வேண்டும் என்று, லென்ஸ் மாமாவை நச்சரித்துக் கொண்டிருந்தார், ராமசாமி அண்ணாச்சி.



காலையிலேயே, 'மூட் அவுட்' உடன் எழுந்திருந்தான், ஒருவன்.

இரவு, 'தண்ணி' அடித்துவிட்டு, மனைவியுடன் சண்டை போட்டது, அவன் மனதை மிகவும் பாதித்திருந்தது. சுற்றிக் கிடந்த பீர் பாட்டில்கள் அனைத்தையும் எடுத்து வெளியே வந்து, முதல் பாட்டிலை எடுத்து சுவரில் அடித்தான்.

'என் மனைவியுடன் சண்டை போட நீதான் காரணம். நீ உருப்படாம போ...'

ரெண்டாவது பாட்டிலை எடுத்து, 'என் மனைவியை நேசிக்காததுக்கு நீ தான் காரணம்...' என்று சொல்லி சுவரில் அடித்தான்.

மூணாவது பாட்டிலை எடுத்து, 'எனக்கு உருப்படியா ஒரு வேலை கிடைக்காததுக்கு நீ தான் காரணம்...' என்று கூறி, அதையும் துாக்கி அடித்தான்.

நான்காவது பாட்டிலை எடுத்தான். அது, 'ஓப்பன்' செய்யாமல், முழுவதும் அப்படியே இருந்தது.

உடனே, 'உனக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ ஓரமா உட்கார்...' என, தனியாக எடுத்து வைத்து கொண்டான்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.






      Dinamalar
      Follow us