
பெயின்டரின் சேவை!
சமீபத்தில், எங்கள் வீட்டுக்கு பெயின்ட் அடிக்க, தன் குழுவினரோடு வந்தார், பெயின்டர் ஒருவர். மூன்று நாட்கள் வேலை செய்தவர், நான்காம் நாள் விட்டு, ஐந்தாம் நாள் வருவதாக கூறினார்.
'தொடர்ந்து வேலை செய்து முடிக்காமல், இடையில் எதற்கு விடுப்பு...' என்றேன்.
அதற்கு, 'எங்களது திருமண நாள், என் மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் என்னுடைய பிறந்தநாள் என, வருஷத்துக்கு, ஐந்து நாட்கள், சுற்று வட்டார கிராமங்களில் இருக்கிற, அரசுப் பள்ளி வகுப்பறைகள் மற்றும் கோவில்களில், இலவசமாக பெயின்ட் அடித்து தரும் சேவையை செஞ்சுக்கிட்டு வர்றேன் சார்.
'நாளைக்கு என் திருமண நாள். ஒரு கிராமத்து அரசுப் பள்ளி வகுப்பறைக்கு பெயின்ட் செய்யணும். அதனால் தான் விடுப்பு...' என்றார், அந்த பெயின்டர்.
அதைக் கேட்டு வியந்த நான், மகிழ்ச்சியோடு விடுப்பு கொடுத்து, 'அட்வான்ஸ்' வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
அந்த பெயின்டரைப் போல, வெளியுலகத்திற்கே தெரியாமல், விளம்பரமின்றி, தங்கள் தொழில் சார்ந்த சேவைகளை, பலரும் செய்து வருவது உண்மை.
நண்பர்களே... இதுபோன்று சேவையாளர்கள் யாரேனும் உங்கள் கண்ணில் பட்டால், தயக்கமின்றி வலிந்து சென்று வாழ்த்துங்கள். அதுதான் அவர்களின் சுயநலமற்ற சேவைக்கு, நாம் தரும் மரியாதை!
— வெ.பாலமுருகன், திருச்சி.
உறவினரின் பயனுள்ள நிபந்தனை!
சமீபத்தில், உறவினர் மகன் திருமணம் நடந்தது. வசதியானவர் என்பதால், திருமணத்தை விமரிசையாக நடத்தினார்.
மண்டப நுழைவு வாயிலில் வரவேற்பு மேஜைக்கு அருகில், தனியாக ஆட்களை நியமித்திருந்தார். அவர்கள், விருந்தினர்களின் மொபைல் போன்களை வாங்கி, தனித்தனி உறைகளில் போட்டு, 'டோக்கன்' கொடுத்து, உள்ளே அனுப்பினர்.
இதுபற்றி, உறவினரிடம் வினவினேன்.
'திருமண சடங்குகளைக் கவனிப்பது, விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளை ரசிப்பது, விருந்தினர்களோடு உரையாடி மகிழ்வது, மணமக்களை மனதார வாழ்த்துவது, பந்தியில் நிதானமாக உணவருந்துவது என்றில்லாமல், கையில் மொபைல் போனை வைத்துக்கொண்டு, மேற்சொன்ன அனைத்தையும் தவற விடுகின்றனர்.
'அதனால் தான், திருமண நிகழ்வில், மண்டபத்திற்கு வெளியிலேயே மொபைல் போனை வைத்து வருமாறு, நிபந்தனை விதித்திருக்கிறேன். வெளியில் செல்பவர்களும், அவசர தேவை இருப்பவர்களும், 'டோக்கனை' கொடுத்து, அவரவர் மொபல் போனை பெற்று பேசிக் கொள்ளலாம்...' என்றார்.
விருந்தினர்களின் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து, பயனுள்ள நிபந்தனை விதித்திருந்த உறவினருக்கு, நன்றியுடன், பாராட்டுகளைத் தெரிவித்தேன்!
— பொ.தினேஷ்குமார், மறைமலைநகர், செங்கல்பட்டு.
டூ வீலரில் பணிக்கு போகும் பெண்களா நீங்கள்?
நண்பர் ஒருவரின், 'பஞ்சர்' கடைக்கு, டூவீலருக்கு, 'பஞ்சர்' போட சென்றேன். அப்போது என்னிடம் அவர் கூறிய தகவல், அதிர்ச்சியை கொடுத்தது.
'டூவீலரில் பணிக்கு போகும் பெண்கள், பணி முடிந்து கிளம்பும் போது, அவர்களின் டூவீலர், 'பஞ்சர்' ஆகியிருப்பது தெரிந்தால், அங்கிருந்து தள்ளிக் கொண்டு நடந்து, 'பஞ்சர்' கடைக்கு செல்வர். அதை விட, அவர்களின் பணியிடத்திற்கே மெக்கானிக்கை வரவழைத்து, 'பஞ்சர்' ஒட்டிக்கொள்ள வேண்டும்...' என்றார், நண்பர்.
அதற்கான காரணத்தையும் கூறினார்...
'இப்போதெல்லாம், கஞ்சா போதையில் வழிப்பறி செய்யும் கும்பல் அதிகரித்து விட்டது. டூவீலரில் பணிக்கு செல்லும் பெண்களை நோட்டமிட்டு, அவர்களின் பணியிடத்திற்கே சென்று, டூவீலரை,'பஞ்சர்' ஆக்கி விடுகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்கள், தள்ளிக் கொண்டு வரும் போது, நகை மற்றும் மொபைல் போனை பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
'அவர்களிடமிருந்து தப்பிக்க, அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள், பணியிடத்திற்கு அருகில் இருக்கும் மெக்கானிக்கின் மொபைல் எண்ணை பெற்று, அவர்களை வரவைத்து, 'பஞ்சர்' ஒட்டி செல்ல வேண்டும்...' என்றார்.
வந்த பின் புலம்புவதை விட, வரும் முன் காப்பது நல்லது.
டூவீலரில் போகும் பெண்களே... அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் மெக்கானிக்கின், மொபைல் எண்களை பெற்று, வழிப்பறி நபர்களின் சூழ்ச்சியில் சிக்காமல், தப்பித்துக் கொள்ளுங்கள்.
— செ.விஜயன், சென்னை.