/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (13)
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (13)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (13)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (13)
PUBLISHED ON : அக் 27, 2024

அமெரிக்காவில், மருத்துவமனை ஒன்றில், 'செக் அப்' செய்ய போன கண்ணதாசனுக்கு, விபரீதம் நடந்து விட்டது.
எவ்வளவோ படைப்புகளை எழுதிய கை, அன்றைக்கு மடங்கிக் கொண்டு பிரிக்க முடியாமல் போனது.
என்னை பார்த்தவுடன் அவருக்கு கண்களில், நீர் கோர்த்தது.
'என்னை எப்படியாவது, ஊருக்கு அனுப்பிடும்மா. இங்கே வேணாம், நான் செத்தாலும் மெட்ராஸ் போய் சாகிறேன். நானெல்லாம், அமெரிக்க டாக்டர்களிடம் பேச முடியாது...' என்றார்.
'நான் சொல்லிப் பார்க்கிறேன், அண்ணே...' என்று, அவரிடம் சொல்லி அகன்றேன். வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம், அவர் இறந்து விட்டதாக தகவல் வந்தது.
அப்போது, எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த சமயம். சென்னைக்கு உடல் கொண்டு வரப்பட்டது.
பொதுவாக ஒரு படம், 100 நாள் ஓடினாலே விழா எடுத்து, அதில் நடித்தவர் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு எல்லாம் ஏதாவது பரிசு கொடுப்பர்.
எங்க வீட்டு பிள்ளை படம் பிரமாதமாக ஓடின போது, எம்.ஜி.ஆருக்கு, எனக்கு, ஒளிப்பதிவாளருக்கு, 'ப்ரிஜ்' கொடுத்தனர். 'ப்ரிஜ்' புதிதாக வந்திருந்த நேரம் அது. எங்க வீட்டு பிள்ளை ப்ரிஜ் என்றே அதற்கு பெயர்.
பிளைமவுத் கார், இந்தியாவுக்கு முதன் முதலாக வந்தபோது, நான், பத்மினி, சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர்., நான்கு பேரும், டி.வி.எஸ்., நிறுவனத்தில், 'புக்' செய்து அதை வாங்கினோம்.
நான் நடித்த படங்கள், வெள்ளிவிழா கொண்டாடும்போது, ஒவ்வொரு படத்தின் சார்பில், எனக்கு ஏதாவது நகை வாங்கித் தருவார், அம்மா. இன்னமும் அவற்றை நான் வைத்திருக்கிறேன்.
ஒருமுறை எனக்கு ஒரு விபத்து நடந்தது.
பூனாவின் ஒரு கிராமத்தில், துார் கா சாந்த் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. நான் கிராமத்து பெண்ணாக, காக்ரா சோளி போட்டு தலையில், பானை வைத்து வருவேன்.
ஷம்மி கபூர், ஒரு கல்லை எடுத்து பானை மீது எறிய வேண்டும். அப்போது, நான் செருப்பை கையில் வைத்துக் கொண்டு அவரைத் திட்டுவது போன்ற காட்சி.
படத்தின் இயக்குனர், நிதின் போஸ்.
முதலில் ஒத்திகை பார்க்கும் விதமாக, ஒரு சிறிய கல்லை எடுத்து, அடித்தார்.
கல் பானையின் விளிம்பில் பட்டது.
மீண்டும் ஒத்திகை பார்த்தபோது, நிதின் போஸின் உதவியாளர், ஒரு பெரிய கல்லை எடுத்து வீசினார்.
அது சரியாக என் மண்டையில் வந்து விழுந்தது.
நான் நிலைகுலைந்து விழுந்தேன். ரத்தம் கொட்டியது.
நல்ல வெயில் நேரம். ரத்தத்துடன் அங்கிருந்த முள்ளும், மண்ணும், புழுதியும் சேர்ந்து கொள்ள, காயம் பெரிதாகி, கீழே விழுந்து புரண்டு, துடித்தேன்.
பதறித் துடித்து ஓடி வந்து, ரத்தம் வரும் இடத்தை அழுத்தி பிடித்தார், அப்பா. ஆனாலும், அவரது கையை மீறி ரத்தம் பீறிட்டது.
அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு போகலாம் என்றால், ஐந்து மைல் துாரம்.
ஜஹாங்கிர் ஆஸ்பத்திரியை அடைவதற்குள் கார் முழுவதும் ரத்தம். ஆஸ்பத்திரியில் எமர்ஜென்சிக்கு அழைத்து போயினர்.
கிராமத்து பெண் வேடம், முகம் முழுவதும் பரவியிருந்த ரத்தம், கலைந்திருந்த தலை, இதையெல்லாம் பார்த்ததும், அவர்கள் என்ன நினைத்தனரோ தெரியவில்லை.
'இது கொலை கேஸா கூட இருக்கலாம். அதனால், நாங்கள் சிகிச்சை பண்ண மாட்டோம்; போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுங்கள்...' என்றனர்.
எனக்கோ, ஒரு மாதிரி ஆகி விட்டது. கூட வந்தவர்கள் எல்லாம் பதறினர்.
அப்போது, உடன் வந்த நடிகர், 'இவங்களை யார்ன்னு நெனைச்சீங்க? இவங்க தான், பி.சரோஜாதேவி. சசுரால் படத்தின் கதாநாயகி. படப்பிடிப்பின் போது அடிபட்டு விட்டது...' என்றார்.
அவர் சொன்னது தான் தாமதம், ஆஸ்பத்திரியின் போக்கே மாறியது. மளமளவென்று சிகிச்சைகள் நடைபெற்றன.
தலையில் அடிபட்டிருந்ததே தவிர, நினைவு தவறவில்லை. ஆகையால், எல்லாவற்றையும் கவனித்தேன்.
சிகிச்சை முடிந்ததும், ஆஸ்பத்திரியின், 'ஸ்பெஷல் வார்டு'க்கு மாற்றப்பட்டேன்.
இதற்குள் போன் செய்யப் போன என் அம்மா, திரும்ப வந்தபோது, நான் ஆபரேஷன் தியேட்டரில் இல்லையென்றதும், என்னவோ ஏதோ என்று பயந்து, 'எமர்ஜென்சி வார்டு'க்கு போய் பார்த்திருக்கிறார். அங்கேயும் இல்லையென்றதும் பயந்து, ஓவென அழ ஆரம்பித்து விட்டார்.
நல்லவேளை, இதற்குள் அம்மாவைப் பார்த்த, யாரோ ஒருவர், அவரை சமாதானப்படுத்தி என்னிடம் அழைத்து வந்தார்.
அம்மாவிடம், 'அப்படியே நான் செத்தால் கூட மெட்ராசில் தான் சாவேன். இங்கே வேண்டாம். இங்கிருந்து கிளம்புவோம்...' என்றேன்.
அந்த நிலையில் என்னை அனுப்ப மறுத்தனர், டாக்டர்கள்.
பயணம் கூடாது என்று, டாக்டர்களின் அறிவுரையையும் மீறி, எழுதி தந்து, அங்கிருந்து கிளம்பினோம்.
எங்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நர்ஸ் ஒருவரும் எங்களுடன் வந்தார்.
விமானம் கிளம்ப ஆரம்பித்த போது, தலையில் கட்டு போட்ட இடத்திலிருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது.
தனி விமானத்தில் சென்னை வந்திறங்கியதும், ஆம்புலன்ஸ் தயாராக நின்றிருந்தது. மருத்துவமனை சென்றோம். காயம் முழுவதும் குணமாக ஒரு மாதம் ஆயிற்று.
தலைக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டாம் என்றனர். தலைமுடியையும் கத்தரித்திருந்தனர்.
ஆத்ம பலம் என்ற தெலுங்கு படத்தின், சில காட்சிகளை முடித்துக் கொடுக்க வேண்டி இருந்தது.
குறிப்பாக, பாடல் காட்சியில், என்னை நடிக்க வைப்பதற்காக வந்து நின்றனர்.
மழை நீரில் நனைந்து நடிப்பது போன்ற பாடல் காட்சி. பாடலுக்காக, 'பிளாஸ்டிக் ஸ்கார்ப்' அணிந்து கொண்டு நடித்தேன்.
படப்பிடிப்பில், இதுமாதிரியான ஆபத்துகள் நடக்க தான் செய்யும். ஆனால், என் பாதுகாப்புக்கு, அம்மா எப்போதும் துணையாக இருப்பார். என்னை விடவும் அம்மாவுக்கு தான் அதிக தொந்தரவுகள் இருக்கும். அதை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்.
பனித்திரை படத்திற்காக, அணைக்கட்டின் அருகே, படப்பிடிப்பு நடைபெற்றது. அங்கு மிக அழகான ரோஜாத் தோட்டம் அமைந்திருந்தது. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க, அதிகளவில் மக்கள் கூட்டம் நின்றிருந்தது. சுற்றுலா பயணியர் நிறைய பேர் வந்திருந்தனர்.
படப்பிடிப்பு முடியும் தருவாயில், இயக்குனர் என்னிடம், 'சரோஜா, இப்போது நான் சத்தமாக, 'பேக் - அப்' என்று சொன்னால், மக்கள் உன்னை சூழ்ந்து கொள்வர். அதனால், அதற்கு முன்பே நீ போய்விடு...' என்றார்.
— தொடரும்நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்
எஸ். விஜயன்