
பா - கே
'தமிழக கோர்ட்டுகளில், 16 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளதாகவும், கிரிமினல் வழக்குகளை விட, சிவில் வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ளதாக, சமீபத்தில், சட்ட ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்திடம் விண்ணப்பித்து, தகவல் பெற்றுள்ளது, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதே...' என்றபடி, என் அருகில் வந்து அமர்ந்தார், 'திண்ணை' நாராயணன்.
'நீதிமன்றங்கள், நீதி தேவதைகளின் இருப்பிடம், பாரபட்சமின்றி அனைவருக்கும் நீதி வழங்கும் இடம் என்ற பெருமையெல்லாம் மலை ஏறி விட்டது போலும். வழக்குகள் தேங்கி போனதற்கு, பலரும் பல காரணங்கள் கூறுகின்றனர். ஆனால், என்ன பிரயோஜனம்...' என்று சலித்துக் கொண்டார், நாராயணன்.
'ஓய் நாணா... நாம் ஏதாவது கருத்து கூற போய், நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக, நம் மீதே அம்பு எய்வர்...' என்று எச்சரித்தார், லென்ஸ் மாமா.
கலவரமான நாராயணன், 'நீர் சொல்வது உண்மை தான். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். நீதிபதி, யாருக்கு துாக்குத் தண்டனை விதித்தாலும், தீர்ப்பு எழுதிய பேனாவை உடைத்து விடுவாராமே! நிறைய படங்களில் பார்த்துள்ளேன். அதன் பின்னணி என்ன?' என்றார்.
'அதெல்லாம் ஒரு காலம். இந்தியாவை ஆங்கிலேய அரசு ஆட்சி செய்தபோது, கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை. இதற்கு காரணம், உயிரைக் குடித்த பேனா முனையை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவும், சோகத்தை வெளிப்படுத்தவும் இதை செய்து வந்தனர்.
'ஆனால், நம் இந்திய சட்ட புத்தகத்தில் எந்த இடத்திலும், மரண தண்டனை அளித்த பிறகு, பேனா முனையை உடைக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை. அதே போல, மர சுத்தியலால் மேஜையைத் தட்டும் வழக்கமும் இங்கு கிடையாது.
'ஏதோ ஒரு சினிமாவில், மரண தண்டனை வழங்கி கையொப்பம் இட்ட பேனா முனையை உடைப்பதையும், மேஜையை மர சுத்தியலால் தட்டுவதையும் காட்ட, அதையே பிடித்துக்கொண்டு இன்றும், நம் சினிமாக்களில் பயன்படுத்துகின்றனர்.
'சினிமா பார்ப்போரை அந்தக் காட்சியில் ஈடுபாட்டுடன், கவனிக்க வைப்பதற்கு தானே ஒழிய, உண்மையில் மேற்படி சம்பவங்கள் இந்திய நீதிமன்றங்களில் நடைமுறையில் இல்லை...' என்றார், மூத்த செய்தியாளர்.
ஆங்கில வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் நம்மூர் வெயிலை சமாளிக்க முடியாமல், ஆண்டுதோறும் மே மாதம் முழுக்க கோர்ட்டுக்கு விடுமுறை விட்டு, சிம்லா, டார்ஜிலிங் சென்று தங்கினர்.
மேலும், எப்போதோ, யாரோ ஒரு இங்கிலாந்து ராணி இறந்ததற்கு அடையாளமாக ஒரே ஒருநாள், வழக்கறிஞர்கள் கறுப்பு கோர்ட் அணிந்துள்ளனர். ஆனால், அதையே பின்பற்றப்படுவதை எப்போது விடப்போகின்றனரோ என, நினைத்துக் கொண்டேன், நான்.
ப
ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக, பல்வேறு துறைகளில் பணியாற்றிய, ஞான ராஜசேகரன் எழுதிய, 'நேர்மை படும்பாடு' என்ற நுாலிலிருந்து:
ஐ.ஏ.எஸ்., பயிற்சி காலத்தில், வில்லேஜ் ஆபீசராக ஒரு மாதம் செயல்பட வேண்டும்.
நான், வில்லேஜ் பயிற்சியில் இருந்தபோது, கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், இந்திய முன்னாள் பிரதமர், ராஜிவ். ஆலப்புழை, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன் எச்சரிக்கைகளை நேரில் கண்டு அறிவதற்காக, பயிற்சியில் இருக்கும் என்னைப் போன்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளையும் பிரதமருடன் அழைத்து சென்றனர்.
முதலில் ஆலப்புழையில் உரையாற்றினார், பிரதமர். அதற்கு பின், கார் பயணமாக, திருச்சூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் விருந்தினர் மாளிகைக்கு வந்து உணவருந்தி விட்டு, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு ஒரு பிரச்னை தலையெடுத்தது. பிரதமருடன் வந்த உயர் அதிகாரிகளின் கைவசமிருந்த நிகழ்ச்சி நிரலில், ஓய்வுக்கு பின், திருச்சூர் அருகே உள்ள கிராமத்தில் இருக்கும், திப்பு சுல்தான் கோட்டையை, 3:00 மணிக்கு சுற்றிப் பார்த்து விட்டு, அங்கிருந்து, 3:30 மணிக்கு, பாலக்காடு செல்வதாக, எழுதப்பட்டிருந்தது.
ஆனால், திருச்சூர் கலெக்டருக்கு அனுப்பப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரலில், திருச்சூரில் உணவருந்தி ஓய்வெடுத்த பின், 3:00 மணிக்கு நேராக பாலக்காடு செல்வதாக குறிப்பிடப் பட்டிருந்தது.
பிரபலமான, திப்பு சுல்தான் கோட்டை பாலக்காட்டில் இருப்பது எல்லாருக்கும் தெரியும். பாலக்காட்டில் இருப்பதை, திருச்சூரில் இருப்பதாக தவறாக குறிப்பிட்டு விட்டனரோ என, இதுபற்றி பிரதமருடன் வந்த முதன்மை பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசினார், கலெக்டர்.
பிரதமரோடு வந்த மூத்த போலீஸ் அதிகாரிகள், 'நிகழ்ச்சி நிரல்படி திருச்சூரில் இருக்கும், திப்பு சுல்தான் கோட்டைக்கு பிரதமரை அழைத்துச் சென்றாக வேண்டும்...' என, அடம் பிடித்தனர்.
கேரள போலீஸ் அதிகாரிகளும், தலைமைச் செயலரும், 'எங்களுக்கு கிடைத்த நிகழ்ச்சி நிரலில், திருச்சூரில் அப்படி ஒரு, திப்பு சுல்தான் கோட்டை நிகழ்ச்சி இல்லை...' என்று வாதிட்டனர்.
வாதமும், பிரதிவாதமும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
வில்லேஜ் ஆபீசரிடம், திப்பு சுல்தான் கோட்டையைப் பற்றி விசாரித்தார், கலெக்டர்.
'அப்படி ஒரு கோட்டை எங்கள் கிராமத்தில் இல்லை...' என்றார், வில்லேஜ் ஆபீசர்.
அப்போது, அங்கு வந்த, பிரதமர் ராஜிவ், 'இங்கே என்ன பிரச்னை...' என்றார்.
'சார், தங்களது நிகழ்ச்சி நிரலில், நீங்கள் அடுத்ததாகப் பார்க்கச் செல்வது இங்கே உள்ள திப்பு சுல்தான் கோட்டை என்றிருக்கிறது. உண்மையில் அப்படியொரு கோட்டை இங்கே இல்லை...' என்று கூறினார், கலெக்டர்.
'அப்படி ஒரு கோட்டை இல்லாமல் இருந்தால், அது எப்படி என் நிகழ்ச்சி நிரலில் வரும்?' என்றார், பிரதமர் ராஜிவ்.
'வில்லேஜ் ஆபீசரிடமும் விசாரித்து விட்டேன். அப்படியொரு கோட்டை இங்கே இல்லையாம்...'
'அப்படியா, அந்த வில்லேஜ் ஆபீசரை கூப்பிடுங்கள். நானே விசாரிக்கிறேன்...' என்றார்.
பிரதமர் முன் வந்து நின்ற, வில்லேஜ் ஆபீசரிடம், 'யூ ஆர் தி வில்லேஜ் ஆபிசர், டெல் மி. இஸ் தெர் எனி திப்புஸ் போர்ட் இன் யுவர் வில்லேஜ்?' என்று கேட்டார்.
எந்தவித படபடப்புமின்றி, குடையை அக்குளில் வைத்தபடி, 'சார், ஐ ஹியர் டொன்ட்டி இயர்ஸ். நோ திப்புஸ் போர்ட்...' என்றார், வில்லேஜ் ஆபீசர்.
'வில்லேஜ் ஆபீசர், நம் பிரச்னையை தீர்த்து வைத்துவிட்டார். பாலக்காடு செல்வோம்...' என்று அதிகாரிகளிடம் கூறி, புறப்பட தயாரானார், பிரதமர் ராஜிவ்.
நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட கோளாறுக்கு காரணம் யார் என்பது, இதுவரை புரியாத புதிர்!