
உழைப்பு வளர்ச்சி தரும்!
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, மார்க்கெட்டில் மூட்டை சுமக்கும் வேலை செய்து வந்தான், தெரிந்தவர் மகன்.
சென்னையில் வசிக்கும் தன் மகளுக்கு, வீட்டு வேலைகள் செய்ய ஆள் தேவைப்படுவதாக, அவனிடம் கூறியுள்ளார், காய்கறி மண்டி உரிமையாளர்.
தானே செல்வதாக கூறி, சென்னைக்கு சென்று, மாத சம்பளத்துக்கு வேலை செய்து வந்தான்.
சென்னை சென்ற இரண்டு ஆண்டுகளிலேயே, சொந்த கிராமத்தில் வசதியாக வீடு கட்டி, கிரஹப்பிரவேசம் நடத்தினான்.
ஒருமுறை ஊருக்கு வந்தவனை சந்தித்து, அவனது இந்த வளர்ச்சி பற்றி கேட்டேன்.
அதற்கு, 'மார்க்கெட்டில் மூட்டை துாக்கினால் எவ்வளவு சம்பாதிப்பேனோ, அதையே மாத சம்பளமாக தருவதாக சொல்லி, வீட்டு வேலைக்கு வெச்சாங்க.
'ஒரு நாள், அந்த வீட்டுக்கு வந்த, அதே தெருவில் இருக்கும் அவரது நண்பர், வீட்டில் இருந்த டாய்லெட் எல்லாம் சுத்தமாக இருப்பதை பார்த்து, அவங்க வீட்டு டாய்லெட்டையும், பாத்ரூமையும் சுத்தம் பண்ணித் தரக் கூப்பிட்டார். அதற்கு கூலியாக, 200 ரூபாயும் கொடுத்தார்.
'அப்போது தான், கவுரவம் பார்க்காமல் உழைத்தால், டாய்லெட் சுத்தம் பண்ணும் வேலையிலேயே நிறைய சம்பாதிக்கலாம்ன்னு தோணுச்சு. எங்க ஓனர் பொண்ணு வீட்டு வேலை எல்லாம் முடித்து, அவங்க அனுமதியோட, தினமும் குறைஞ்சது, ஐந்து வீடுகளில் இதே வேலையை செய்ய ஆரம்பித்தேன்.
'இதனால் தினசரி, 1,000 ரூபாய் வீதம் ஒரு மாதத்துக்கு சராசரியாக, 30 ஆயிரம் வரை கிடைக்க, என்னாலேயும் சீக்கிரம் முன்னேற முடிந்தது...' என்றான்.
உழைப்பு வளர்ச்சி தரும் என்பதற்கு உதாரணமாய், கண் முன் நடமாடும் அவனை, மனதார பாராட்டினேன்.
எஸ்.நாகராணி, மதுரை.
வியாபார யுக்தி!
எங்கள் வீட்டுக்கு, வாரந்தோறும் காலையில், கோல மாவு விற்பனைக்கு கொண்டு வருவர்.
காலத்திற்கு ஏற்றபடி பொருட்களை விற்கும் அவர்களின் வியாபார யுக்தியை சொல்ல வேண்டியதில்லை. வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி வைத்திருப்பவர்களையும் கோல மாவு வாங்கத் துாண்டும்.
தொடர்ந்து, பண்டிகைகள் களை கட்டும் இந்த காலத்தில், சாதாரண கோல மாவு, கோல மாவு அச்சுகள், வண்ணப் பொடிகள் மற்றும் வெள்ளை வெளேர் சுண்ணாம்பு பொடி என்று, காலத்திற்கு ஏற்ற வியாபார யுக்தியால் விற்பனை சூடு பிடிக்கும்.
மார்கழி மாதத்தில், பூசணிப்பூக்கள், காவிப் பொடி என்று கலக்கலான வண்ணக் கோலப் பொடிகளை விற்பனை செய்வர். இது ஒரு பக்கம் என்றால், வாசலை அழகுபடுத்தி பச்சரிசி மாவில் கோலமிட்டு காண்போர் கண்களுக்கு கலைநயம் படைப்பர், பெண்கள்.
இதுபோல், பூ விற்பனையாளரும், அந்தந்தப் பண்டிகையின் பெருமைகளைக் கூறி, விற்பனை செய்வர்.
இவர்களிடம் பேரம் பேசாமல் பொருட்களை வாங்கி, அவர்களின் தொழில் வளர செய்வது, நாம் செய்யும் சிறு உதவி ஆகும். இவர்களை மகிழ்வித்து, சிறப்புடனே நம் பண்டிகைகளை கொண்டாடி மகிழ்வோம்.
ரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.
பெண்கள், பெண்களாக இருங்களேன்!
சமீபத்தில், பெங்களூருக்கு சுற்றுலா சென்றபோது, அங்கிருந்த பெண்கள் கழிவறையை உபயோகப் படுத்தினேன். அப்போது, உள்ளே இருந்து ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்க, அப்பெண்ணிடம் அதிர்ச்சியுடன் என்னவென்று கேட்டோம்.
அப்போது, ஜீன்ஸ், டீ - ஷர்ட் அணிந்திருந்த ஒருவரை காட்டி, 'இவர் தவறுதலாக பெண்கள் கழிவறைக்கு வந்துவிட்டார்...' என்றார்.
அப்பெண் கூறிய நபரை பார்த்த போது, ஆண் போலவே தெரிந்தார். காரணம், அந்த நபர், ஜீன்ஸ், டீ - ஷர்ட் அணிந்திருந்ததோடு, தலைமுடியை ஆண் போலவே கிராப்பும் வெட்டி இருந்தார். பூனை மீசையும் முளைத்திருந்தது.
மேலும், குரலில் ஆண் போல லேசான கரகரப்பு இருக்கவே, அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட, அவருக்கு தர்ம அடி கொடுக்க முயன்றனர்.
அப்போது, அவர், தன், 'ஐடி கார்டை' காட்டி, தான் ஒரு பெண் என, குறிப்பிட்டார். பெண்கள் அனைவரும் இதை ஏற்க மறுத்து, போலீசுக்கு தகவல் அளித்து, அவர்களிடம் ஒப்படைத்தனர்.
அந்நபரை அழைத்து சென்றனர், பெண் போலீசார். எதற்கு இந்த அவமானம்?
ஆணுக்கும், பெண்ணுக்கும் உடல் வித்தியாசத்தை இயற்கை நன்றாகவே படைத்திருக்கிறது. இதுபோன்ற வெளியூர் பயணங்களின் போது, பெண்களுக்குரிய உடையை அணிந்து வருவது நல்லது.
ஆண் - பெண் வித்தியாசம் தெரியாமல் போனால், மேலே கூறிய பல விபரீதங்களும், குற்றங்களும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
பே.ராமலட்சுமி, விருதுநகர்.