
கைகொடுக்கும் சுயதொழில்!
எங்கள் வீதி வழியாக, வேன் ஒன்றில் பூஜை பொருட்களை விற்றுக் கொண்டு வந்தார், இளைஞர் ஒருவர். மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், சூடம், விளக்குத் திரி, சாம்பிராணி, ஊதுபத்தி மற்றும் தீப எண்ணெய் என, சகலமும் அவரிடம் இருந்தது. வீதியில் இருந்த பலரும், அவரவருக்கு தேவையானவற்றை, வாங்கிச் சென்றனர். என் வீட்டுக்கு விளக்குத் திரி தேவைப்பட்டதால், அதை வாங்க சென்றேன்.
'வீதியில பல பொருட்களை விற்பனை செய்வதைப் பார்த்திருக்கேன். நீ எப்படிப்பா, பூஜை பொருட்கள் விற்கலாம்ன்னு வித்தியாசமா யோசிச்ச?' என, அந்த இளைஞரிடம் கேட்டேன்.
அதற்கு, 'குடும்ப சூழ்நிலையால், பிளஸ் 2 வரை தான் படிக்க முடிஞ்சது, சார். அப்புறம், டவுன்ல இருக்கிற பூஜை பொருட்கள் கடையில, குறைவான சம்பளத்துக்கு வேலை பார்த்தேன்.
'அங்கே சில ஆண்டுகள் வேலை பார்த்து, தொழில் நுணுக்கங்களைக் கத்துக்கிட்டு, இதுலயே தொடர்ந்தா முன்னேற வாய்ப்பில்லைன்னு, வெளியே வந்துவிட்டேன். என்கிட்ட டிரைவிங் லைசென்ஸ் இருந்ததால், செகண்ட் ஹேண்ட்ல, இந்த வேனை வாங்கி, வீதியில பூஜை பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பிச்சிட்டேன்.
'நிறைய கோவில்கள், பூசாரிகள், புரோகிதர்கள்ன்னு, கமிஷன் அடிப்படையில, அவங்களுக்கும் பூஜை பொருட்களை கொடுக்கிறேன். சில சின்னச் சின்ன கடைகளுக்கும் வினியோகம் பண்றேன். இதன் மூலம், நிறைவா சம்பாதிக்கிறேன்...' என்றார், அந்த இளைஞர்.
வாழ்க்கையில் விரைந்து முன்னேற, சுயதொழிலே கைகொடுக்கும் என்று முடிவெடுத்து, உழைக்கும் அந்த இளைஞரை, மனதார வாழ்த்தினேன்!
- ஆ.வீரப்பன், திருச்சி.
தோள் கொடுக்கும் மகன்!
சென்னையின் பிரபலமான பூங்காவில், காலை நேரங்களில், நெல்லிக்காய், புதினா, கறிவேப்பிலை, வாழைத்தண்டு, அருகம்புல் மற்றும் முடக்கத்தான் ஜூஸ் வகைகளை விற்பனை செய்து கொண்டிருந்தான், சிறுவன் ஒருவன். சிலர், நடை பயிற்சி முடித்து, தங்களுக்கு பிடித்த ஜூஸை குடித்துச் சென்றனர். ஜூஸ் விற்பனை செய்த சிறுவனிடம், 'என்ன தம்பி, படிக்க வேண்டிய வயசுல...' என்று, இழுத்தேன்.
'அங்கிள்... எங்க அப்பா, ரோட்டோரம் இஸ்திரி கடை வைத்துள்ளார். போதிய வருமானம் இல்லை. அதனால், அம்மா - அப்பாவிற்கு அடிக்கடி சண்டை வரும்...' என்றான். அருகில் இருந்த ஒரு பாட்டியை கை காட்டி, 'இவங்க எங்க அப்பத்தா. 'மூலிகை ஜூஸ் கடை வைப்போம். மக்களுக்கும் நன்மையா இருக்கும். நமக்கும் வருமானம் கிடைக்கும்...' என்று, யோசனை கூறினார்.
'நான் பாலிடெக்னிக் படிக்கிறேன். அக்கா, கல்லுாரியில் படிக்கிறார். இந்த வருமானத்தில் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். அதுபோதும் அங்கிள்...' என்றான்.'உங்களை மாதிரி பிள்ளைகளிடம், தொழில் முனைவோர் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்...' என்று சொல்லி, 'சல்யூட்' அடித்தேன்!
- ச.தனசேகரன், சென்னை.
முயற்சி கைவிடாது!
என் நண்பர் பணிபுரிந்து வந்த தனியார் நிறுவனம், நஷ்டத்தை சந்தித்ததால் மூடிவிட்டனர்.
திடீரென வேலை பறிபோனதில், செய்வதறியாது திகைத்து போனார், நண்பர். ஆனால், மேற்கொண்டு என்ன வேலை செய்யலாம் என, மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கலந்து ஆலோசித்தார். தள்ளுவண்டியில் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்ய துவங்கினார்.
அதோடு அவருக்கு நன்றாக மரம் ஏற தெரியும். எனவே, கவுரவம் பார்க்காமல், வியாபாரத்திற்கு செல்லும் வேளையிலேயே, வீடு வீடாக தானே சென்று கேட்டு, தென்னை மரத்தில் ஏறி, தேங்காய்களை பறித்து கொடுத்தும், தேவையற்ற மட்டைகளை வெட்டிப் போட்டும், அதற்கான கூலியை பெற துவங்கினார்.
மேலும், அவர், கிராமத்துக்காரர் என்பதால், தனக்கு தெரிந்த விவசாய அனுபவத்தின் உதவியோடு, வீட்டு தோட்டங்களை சீரமைத்து தந்து, அதற்கான கூலியையும் பெற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.
மொத்தத்தில், ஆர்வத்தோடு முயற்சி செய்து உழைத்தால், அது நம்மை கைவிடாது என்பதற்கேற்ப, நிறுவனத்தில் பெற்ற ஊதியத்தை விட, கூடுதலான வருமானத்தை பெற்று, மகிழ்ச்சியாக இருக்கிறார், நண்பர்.
வாழ்க்கையில் முன்னேற, ஆசைப்படுவதோடு விட்டுவிடாமல், அதற்கான விடாமுயற்சியையும் மேற்கொள்ளுங்கள். அது உங்களை நிச்சயம் முன்னேற்றும்.
- எம்.முகுந்த், கோவை.