/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (15)
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (15)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (15)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (15)
PUBLISHED ON : நவ 10, 2024

என் பிறந்த நாள், ஜனவரி 7.
ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினம், சத்யநாராயணா பூஜைக்கு எல்லாரையும் கூப்பிடுவோம். அன்று, ஹர்ஷாவையும் அழைத்திருந்தோம்.
வந்தார், என்னை பார்த்தார். நானும், அவரை பார்த்தேன்.
என்னிடம் பேச வேண்டும் என, சொன்னாராம், ஹர்ஷா.
'எங்களில் யாரும் திருமணத்திற்கு முன், பெண்ணையும், மாப்பிள்ளையும் பேச விடுவதில்லை...' என, சொல்லியிருக்கிறார், அம்மா.
'என்ன இப்படி சொல்கிறீர், ருத்ரம்மா? பையன் இப்போ தான் ஜெர்மனியிலிருந்து வந்திருக்கிறான். பெண்ணோ பிலிம் ஸ்டார். நீங்கள் இப்பவும் இப்படி சொல்கிறீர்களே...' என்று, யாரோ ஒருவர் கூறினர்.
உடனே, ஒப்புதல் தந்து, மல்லேஸ்வரம் வீட்டிற்கு வரச்சொல்லி இருந்தார், அம்மா.
நான் சோபாவில் அமர்ந் திருந்தேன்.
பக்கத்து அறை, டைனிங் ஹால் மற்றும் வராந்தா முழுக்க கூட்டம்.
உடம்பெல்லாம் காதுகளாக எல்லாரும், ஹர்ஷா என்ன பேசுகிறார் என்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
சினிமா நடிகை திருமணம் என்றவுடன், என்னென்னவோ கதைகள், கவர்ச்சியான விஷயங்கள், சுவாரஸ்யமான திருப்பங்கள் ஏராளம் இருக்கும் என, காத்திருந்தனர்.
ஒரு ஆபீசில் வேலை செய்யும் பெண்ணின் திருமண ஏற்பாடு போன்றே தான் இதுவும் இருக்கும் என, யாருக்கும் தோன்றவில்லை.
ஹர்ஷா என்னென்னவோ பேசினார். எல்லாவற்றுக்கும், 'உம்' கொட்டி தலையாட்டினேன்.
எத்தனையோ வசனங்களையெல்லாம், ரொம்ப சுலபமாக பேசிக் கொண்டிருந்த நான், அன்று வாய் பேச முடியாத ஊமையாக இருந்தேன்.
'நீங்கள் ஒரு பெரிய கலைஞர். நான் உங்களுக்கு எந்த வகையிலும் ஈடாக மாட்டேன். உங்களின் எல்லா சுதந்திரமும் என்றைக்கும் இருக்கும். ஆனால், ஒரே ஒரு வார்த்தை... உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக எதுவும் செய்யாதீர்கள். இந்த தீர்மானத்தை மட்டும் கை கொள்ளுங்கள்...' என்றார், ஹர்ஷா.
'சரி'யென தலையாட்டி எழுந்து, உள்ளே போனேன்.
எனக்குள் ஒரேயொரு கேள்வி இருந்தது.
ஹர்ஷாவுக்கு சிகரெட் மற்றும் குடி பழக்கம் இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது.
அவரின் நெருங்கிய நண்பர் ஒருவரின் போன் நம்பர், என்னிடம் இருந்தது. அவரிடம் கேட்க, நம்பரை சுழற்றி, அம்மா மூலம் தகவல் கேட்டேன்.
அவர் சொன்ன தகவல், என் எல்லா சந்தேகங்களையும் போக்கியது.
நண்பருடன் ஒருமுறை கிளப்புக்கு சென்றிருந்தாராம். அங்கே, விஸ்கி, பீர் எல்லாம், 'ஆர்டர்' செய்திருக்கின்றனர்.
'சாரி, நான் எதுவும் குடிப்பதில்லை...' என்றிருக்கிறார், ஹர்ஷா.
அது தெரிந்தவுடன் எனக்கு அவ்வளவு சந்தோஷம். தவிர, அவர் ஒரு மிதவாதி. உணவை லிமிட்டாக தான் சாப்பிடுவார். தினசரி யோகா, கட்டுப்பாடான வாழ்க்கை என்று தெரிய வந்தது. ஒரு ஆணுக்கு இன்னும் வேறென்ன வேண்டும்?
திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஒருநாள், ஐதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்து, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். பின்னால், யாரோ தொடர்ந்து வருவது போல் உணர்ந்தேன்.
திரும்பி பார்த்தால், போலீஸ் ஜீப்.
யாரோ முக்கியஸ்தர் வந்திருக்கிறார் போலும். அதற்காக தான் இத்தனை போலீஸ் என்று எண்ணினேன். ஆனால், என்னை தொடர்ந்து போலீசாரின் கார்கள் வந்து கொண்டிருந்தது.
காரிலிருந்து இறங்கியவுடன் பயந்தபடி வீட்டினுள் நுழைந்தேன்.
உள்ளே வந்தது போலீஸ்.
எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்டிருந்த சமயம் அது.
பெற்றால் தான் பிள்ளையா படத்தை தொடர்ந்து, இந்த விவகாரம் நடந்தது. நான் அந்த படத்தின் கதாநாயகி. எம்.ஜி.ஆர்., கதாநாயகன். படத்தில், எனக்கு அண்ணன் எம்.ஆர்.ராதா.
நான், போலீஸ் தரப்பின் முக்கிய சாட்சி. வக்கீலுக்கு போன் செய்தேன்.
'ஒன்றும் பயப்பட வேண்டாம். போலீஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்...' என்றார்.
'என்ன கேள்வியாக இருந்தாலும் இங்கேயே கேளுங்கள், பதில் சொல்கிறேன். நான் கோர்ட்டுக்கு வரமாட்டேன். இப்போது தான் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது...' என்றேன்.
கோர்ட் என்றால் எனக்கு ரொம்பவும் பயம். மாப்பிள்ளை வீட்டில் என்ன நினைத்து கொள்வரோ என்ற தவிப்பு. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறினேன்.
'பாகப்பிரிவினை படத்திலிருந்து, எம்.ஆர்.ராதாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரையிலும், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை எதற்காக சுட்டார் என்று தெரியவில்லை...' என்றேன்.
விசாரணை முடிந்ததும் இன்ஸ்பெக்டரிடம், 'எதுவாயிருந்தாலும், நான் எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அவர், எனக்கு தாயை போல முக்கியமானவர்...' என்றேன்.
உடனே, ஆஸ்பத்திரிக்கு போக ஏற்பாடு செய்தார், இன்ஸ்பெக்டர்.
ஆஸ்பத்திரி வாசலில் ஏராளமான ரசிகர்கள் குழுமியிருந்தனர். எனக்கு வழி விட, எம்.ஜி.ஆர்., இருந்த வார்டை அடைந்தேன். அவரை படுக்கையில் பார்த்ததும், எனக்கு அழுகை வந்தது.
நான் பக்கத்தில் நின்று அழுவதை பார்த்த, எம்.ஜி.ஆர்., 'அழாதே சரோஜா...' என்றார்.
அவர் பேச ஆரம்பித்ததும் தான், எனக்கு ஓரளவு தெம்பு வந்தது.
மார்ச் 1, 1967ல், பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற என் திருமணத்திற்கு அப்படியொரு மக்கள் கூட்டம். சென்னையில், மார்ச் 6ல் நடைபெற்ற ரிசப்ஷனிலும் ஏக கூட்டம். திரையுலகமே திரண்டிருந்தது.
அங்கு வந்த சிவாஜி, 'என்ன ஹர்ஷா, சரோஜாவை நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள். இவளை நான் அல்லவா திருமணம் செய்து கொள்ளலாம் என்றிருந்தேன். நல்ல அழகும், சம்பாத்தியமும் உள்ள இந்த பெண், எனக்கு கிடைக்கவில்லையே...' என்றார், தமாஷாக.
ஹர்ஷாவும் சிரித்து விட்டார்.
பெங்களூரில் நடைபெற்ற திருமணத்தில், எம்.எஸ்.சுப்புலட்சுமியும், அவரது கணவர் சதாசிவமும் கலந்து கொண்டனர். எம்.எஸ்., அம்மாவின் கச்சேரியும் நடைபெற்றது. அவர்கள் என் திருமணத்திற்கு வந்து பாடியதை, பெரும் பேறாக நினைக்கிறேன்.
இரண்டு நிகழ்வுகளையுமே பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார், அம்மா.
'நல்ல மாப்பிள்ளை கிடைத்தால், சிருங்கேரிக்கு போய் மணமாலை போடுகிறேன்...' என்று வேண்டியிருந்தார், அம்மா. அதன்படி திருமணம் முடிந்ததும், சிருங்கேரி பிரார்த்தனையை நிறைவேற்ற சென்றோம்.
தொடரும்
எஸ். விஜயன்
நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்