sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 10, 2024

Google News

PUBLISHED ON : நவ 10, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

அலுவலகம்.

'ஒரு நிமிஷம், அந்த பக்கம் போயிட்டு வர்றதுக்குள்ள, டேபிள் மீது வெச்சிருந்த பேனா காணாம போயிடுது. ஆட்டையை போடறதுக்கு என்றே யாராவது வருவாங்க...' என்று அலறினார், உதவி ஆசிரியை ஒருவர்.

'பிசாத்து பேனா... 10 ரூபாய்க்கு, நாலு பேனா வாங்கி வைச்சுட்டு, என்னம்மா அலம்பல் பண்ணுது...' என்று முணுமுணுத்த லென்ஸ் மாமா, 'பேப்பருக்கு அடியில் எங்காவது இருக்கும் இல்லாவிட்டால், உருண்டு கீழே விழுந்திருக்கும். அதை போய் யாராவது தொடுவாங்களா?' என்றார், லென்ஸ் மாமா கிண்டலாக.

'அது சரி... ஆட்டையை போடறதுன்னா என்னன்னு தெரியுமா?' என்றார்.

'ஆட்டையை போடறதுன்னா, திருடறது... எத்தனை சினிமாவில், வடிவேல் காமெடியில் இந்த, 'டயலாக்'கை கேட்டுள்ளேன்...' என்றார், உ.ஆ.,

'உமக்கு தெரிந்தது அவ்வளவு தான். அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?' என்று கேட்டு, கூற ஆரம்பித்தார், லென்ஸ் மாமா:

'ஆட்டையப் போட்டுட்டான், ஆட்டையப் போட்டுட்டான்...' என்பது, சமீப காலங்களில், அடுத்தவர்களை ஏமாற்றி, பணம், பொருள் ஆகியவற்றை அபகரிப்பதற்கு கூறப்படும் வார்த்தைகளாக மக்களால் பேசப்படுகிறது.

'ஆட்டை' என்ற சொல்லுக்கு, 'ஆண்டு' என்று ஒரு பொருள் உண்டு.

அந்தக் காலத்தில், நாடாண்டவர்கள், பல வகையான வரிகளை மக்களிடமிருந்து வாங்கியுள்ளனர். சில வகை வரிகளை ஒவ்வொரு பருவத்திற்கும், சில வகை வரிகளை ஒவ்வொரு ஆண்டிற்கும் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.

இதில், பெரும்பாலான வரிகள், ஆண்டின் அடிப்படையில் வாங்கி, அந்த வரிக்கு, ஆட்டைக் காணிக்கை, ஆட்டை வரி மற்றும் ஆட்டை சம்மாதம் என்றெல்லாம் காலத்திற்கு ஒரு பெயராக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வரிகளை வசூல் செய்வதற்கு ஆட்டை வாரியம் என, ஒரு வாரியமும் இருந்து இருக்கிறது. ஆண்டுதோறும் வரிக்கணக்கை சரிபார்ப்பது, இந்த வாரியம் தான்.

வரி செலுத்த வேண்டியோர், அந்த ஆண்டுக்கான வரியை ஒழுங்காக செலுத்தவில்லை என்றால், முதலில் அவர்களை அழைத்து வரியை கட்ட சொல்லி எச்சரிக்கும். அப்படி எச்சரித்த பின்பும், அந்த வரியை செலுத்தவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

என்ன மாதிரி நடவடிக்கை? தண்டம் விதித்து அடுத்த ஆண்டு வரியோடு சேர்த்துக் கட்ட சொல்வரா அல்லது சமரசம் பேசி, வரியைக் கட்டிவிட்டால் நடவடிக்கை இல்லை என்பரா? அதெல்லாம் இல்லை.

வரி செலுத்த வேண்டியவர்கள், கட்ட வேண்டிய வரி எவ்வளவோ, அதன் மதிப்புக்கு அவர்களிடம் இருக்கும் நிலத்தையோ, சொத்துக்களையோ அவர்கள் சம்மதம் இல்லாமலேயே பறிமுதல் செய்து விடுவர்.

வரி பாக்கிக்காக அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்வதைத் தான், ஆட்டையைப் போடுறது என்று சொல்லி இருக்கின்றனர்.

தமிழ் மன்னர்கள் ஆட்சி மாறி, நாயக்கர்கள், மராட்டியர்கள், இஸ்லாமியர், கடைசியாக ஆங்கிலேயர்கள் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டபோது, இந்த வாரிய முறைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டு, 'ஆட்டைய போடுறது' மாதிரியான ஆட்சி சொற்கள் வழக்கொழிந்து விட்டது.

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் போன்ற பகுதிகளில் மட்டும் புழக்கத்தில் இருந்த இந்த சொற்றொடர், சினிமாவில் கிண்டலடித்து பேச பயன்பட்டது. அதன் தொடர்ச்சியாக மக்களாலும், நகைச்சுவையாக தமிழ்நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்படுகிறது.

- என்று கூறி முடித்தார், மாமா.

கதை கேட்டு முடித்த, உ.ஆ., ஒரு வழியாக டேபிளுக்கும், சுவருக்கும் இடையே சிக்கியிருந்த, பேனாவை கண்டுபிடித்து விட்டார். 'கால் முளைத்து போயிருச்சு போல...' என்று அலுத்து கொண்டார்.

இதில் ஒரு ரகசியம் இருக்கிறது. அதாவது, தான் எடுக்கும் புகைப்படங்களுக்கு கீழே படவிளக்கம் எழுத, யார் டேபிளில் இருந்தாவது பேனாவை எடுத்து, எழுதுவார், லென்ஸ் மாமா.

எழுதி முடித்ததும், தன் கேபினில் இருந்தபடியே, சம்பந்தபட்டவர்களின் டேபிள் மீது பேனாவை விட்டெறிவார். அது, எக்குத்தப்பாக எங்காவது விழுந்துவிடும். சமயத்தில் குப்பை கூடைக்குள்ளும் சென்று விடும். அப்புறம் என்ன? பேனாவுக்கு உரியவர்கள் அங்கும் இங்கும் தேடி அலைவர்.

'இப்படி செய்யாதீர்கள்...' என, பலமுறை மாமாவிடம் கூறியும், காதில் வாங்கவே மாட்டார். அவரை மாட்டி விடவும் மனசு வராததால், என்னிடமிருக்கும் பேனாவை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்து விடுவேன், நான்.



ஒரு சமயம், 'ஜனசக்தி' பத்திரிகை அலுவலகத்தில் எழுத்துப்பணியில் மும்முரமாக இருந்தார், தோழர் ப.ஜீவானந்தம் என்ற ஜீவா.

அப்போது அவரை பார்க்க வந்திருந்தார், ஒரு பெண்.

'ஜீவா இருக்கிறாரா?' என, அலுவலக பணியாளரிடம் கேட்டார், அந்த பெண்.

'இருக்கிறார்...' என்று கூறி, அப்பெண்ணை, ஜீவாவின் அறைக்கே அழைத்து சென்றார், அலுவலக பணியாளர்.

எழுத்தில் முழு கவனத்துடன் இருந்த ஜீவா, அந்தப் பெண் வந்திருப்பதை கூட, கவனிக்காமல் எழுதிக் கொண்டே இருந்தார். எழுதி முடித்தவுடன் தான், அப்பெண்ணை கவனித்தார், ஜீவா.

இயல்பான பரிவு குரலுடன், 'என்னம்மா வேண்டும்...' என்றார், ஜீவா.

'உங்களை தான் பார்க்க வந்தேன்...' என்றார், அந்த பெண்.

'நீ யாரம்மா?' எனக் கேட்க, அந்த பெண் பதில் ஏதும் கூறாமல், கண்ணீர் மல்க ஜீவாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.

'நான் என்னம்மா கேட்டு விட்டேன். நீ யார்?' என, மறுபடியும் கேட்டார், ஜீவா.

ஒரு பேப்பரை எடுத்து, என் தாத்தா பெயர், குலசேகரதாஸ். என் தாயின் பெயர், கண்ணம்மா என்று எழுதி, ஜீவாவிடம் கொடுத்தார், அப்பெண்.

அதை வாங்கிய ஜீவாவின் கண்கள் குளமாகி விட்டன. கண்ணாடியை கழற்றி விட்டு, வேட்டியின் ஒரு முனையை கையில் எடுத்து கண்களை துடைத்துக் கொண்டார். அதே பேப்பரின் பின் பக்கத்தை திருப்பி, நீ தான் என் மகள் குமுதா என்று எழுதி, அந்த பெண்ணிடம் கொடுத்தார், ஜீவா.

நெடுநாட்கள் சிறையில் இருந்து, கட்சிக்காக பல மாநிலங்களுக்கு சென்று, பல காலம் கழித்து சென்னை வந்தார், ஜீவா. குழந்தையாக இருந்த தன் மகள், பெரிய பெண்ணாக ஆனது கூட அவருக்கு தெரியாமல் இருந்தது என்பது தான் உண்மை.

நாட்டுக்காக உழைத்து தன் குடும்பத்தையே மறந்த ஒப்பற்ற தலைவர், ஜீவா.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.






      Dinamalar
      Follow us