
ம.வசந்தி, திண்டிவனம்: இரு மொழிக் கொள்கை, மூன்று மொழிக் கொள்கை என்று, சர்ச்சைப் பேச்சு இருந்த போதிலும், இன்றைய மாணவர்களிடம், ஒரு மொழி புலமை கூட இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம்?
ஆட்சியாளர்கள்!
ஆர்.பிச்சுமணி, சென்னை: தமிழ்நாட்டில், பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், தலை சாயம் பூசிக் கொள்பவர்களாக உள்ளனர். அரசியல்வாதிகள், முதிர்ச்சியான தோற்றத்தில் இருந்தால் பெருமை. சாயம் பூசுவது ஏன் என்று தெரியவில்லையே...
சாயம் மட்டுமா பூசிக் கொள்கின்றனர்... 'விக்'கும் வைத்துக் கொள்கின்றனரே!
* நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி: 'கூட்டணிக்கு வருவோருக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு...' என, விஜய் கூறி இருக்கிறாரே...
கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்பதை புரிந்து வைத்திருக்கிறார்; தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதும் தெரிந்திருக்கிறதே!
மு. நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: 'நான் வைக்கும் ஒவ்வொரு தேர்விலும், உதயநிதி, முழு மதிப்பெண் வாங்குகிறார்...' என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே...
அவர்களே, அவர்களுக்கு, 'மார்க்' போட்டுக் கொள்கின்றனர்.
நா.முஸ்தபா, கீழக்கரை: ஊழல் கறை படிந்தவர்களையும், வேலை செய்யாதவர்களையும் பணியிலிருந்து நீக்கும்படி, மத்திய அரசின் அனைத்துத் துறை செயலர்களுக்கும், பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளாரே...
மிக மிக நல்ல உத்தரவு! மாநிலங்களுக்கும் இதை அமல்படுத்தினால் நல்லது!
ஜே.எஸ்.சரவணன், மதுரை:நம், 'தினமலர்' நாளிதழில், தினமும் வெளியாகும், 'இது உங்கள் இடம்' பகுதியில், 'இ - மெயில்' கடிதங்கள் மட்டும் தான் இடம் பெறுமா?
இன்லேண்டு, கவர் மற்றும் கார்டு என, எதில் எழுதினாலும், கருத்துள்ள கடிதங்களுக்கு எப்போதும் இடம் உண்டு!
* ஜெ.ரவிக்குமார், காங்கேயம்:'இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க முடியுமா?' என, தேர்தல் கமிஷனை, நீதிமன்றம் கேட்டுள்ளதே...
தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை; 'அதிகாரம் கொடுங்கள்...' என, நீதிமன்றமே ஆணையிட்டால், அது நடக்கும்!
ஏ.எம்.எம்.ரிஸ்வான், சென்னை:லென்ஸ் மாமா என்ற பட்டப்பெயர், அவர் எதையும் லென்சை வைத்து, துருவித் துருவி ஆராய்பவர் என்பதாலா அல்லது சோடாபுட்டி கண்ணாடி போட்டிருப்பார் என்பதாலா?
அவர், போட்டோகிராபர் என்பதால்!