
பெரிய கிராமம். தனிப் பஞ்சாயத்து. ஊரை ஒட்டிய நெடுஞ்சாலையில், முத்தாண்டி மளிகைக்கடை இருந்தது. கூட்டம் எப்போதும் இருக்கும். பணம், கல்லாப் பெட்டியை நிரப்பும்.
முத்தாண்டிக்கு வாயில் வரும் சொல், மூதேவி. எப்பேர்ப்பட்ட வேலைக்காரனாக இருந்தாலும், வசவு வாங்காமல் தீராது. சிறு குற்றம் கண்டுபிடித்தாலும் போதும், கூட்டம் இருந்தாலும் திட்டித் தீர்த்து விடுவார்.
தன் மகன் கோபால்சாமியோடு, முத்தாண்டியின் பார்வை படும்படியாக காத்து நின்றாள், ராமாத்தாள். வெகு நேரம் கழித்துத் தற்செயலாக தலை நிமிர்த்தவர், அவளைப் பார்த்தார்.
''இவளுக்கு என்ன வேணும்ன்னு போட்டு கொடுத்து சீக்கிரம் அனுப்புங்க,'' என்றார், முத்தாண்டி.
''நான், எதுவும் வாங்க வரலப்பா. இவனோட தகப்பன் போய் சேர்ந்திட்டான். எனக்கும் வேலை சரியா கிடைக்கமாட்டுது. இந்தப் பையன், ஒன்பதாவது வரை படிச்சிருக்கான். நல்லாப் படிச்சவனை நிறுத்த வேண்டியதாப் போச்சு. உன் கடையில எதாவது வேலை போட்டுக் கொடுப்பா,'' என கெஞ்சினாள், ராமாத்தாள்.
''சின்னப் பையனா இருக்கான். இடத்தை காலி பண்ணு. நிக்காத.''
''முதலாளி, இளப்பமாச் சொல்லாதீங்க. ஒரே ஒரு மாதம் வேலை பாக்கேன். சரியில்லையினா, வேலை பார்த்ததுக்கு சம்பளம் வேண்டாம்,'' என்றான், கோபால்சாமி.
''பையன் வெடிப்பா தான் பேசறான்,'' எனக் கூறியவர், சற்று நேர மவுனத்திற்கு பிறகு, ''பேரு என்னடா?'' என்றார்.
''கோபால்சாமி, முதலாளி.''
''கொடுத்த சம்பளத்த வாங்கிக்கிடணும். கூடக் கேட்டா எனக்குப் பிடிக்காது. இடையில் போனா ஒரு ரூபா கூடத் தரமாட்டேன். சம்மதம்ன்னா சொல்லு,'' என்றார், முத்தாண்டி.
விடிந்த உடன், கடை வாசலை பெருக்கி, தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்வான், கோபால்சாமி. திறக்கும் வரை காத்திருப்பான். 9:00 மணிக்குள் சாப்பிட்டு வந்துவிட வேண்டும். வேலை செய்றவங்களுக்கு காலை, மாலை டீ வாங்கிக் கொடுக்க வேண்டும்.
போகச் சொன்ன இடத்துக்கு போய் தடங்கல் இல்லாமல் முடித்து உடனே திரும்பணும். அந்த மாதம் முழுதும் அவனை கடைக்குள் நுழைய விடவில்லை, முத்தாண்டி. கொத்தடிமையாக வேலை செய்தான்.
மாதம் முடிவில், 3,000 ரூபாய் கொடுத்தார். இதுவரை பார்த்து அறியாத பணம். காலில் விழுந்து வணங்கி, வாங்கிக் கொண்டான், கோபால்சாமி.
அடுத்த மாதம், அவனை கடைக்குள் செல்ல அனுமதித்தார். சிந்திச் சிதறிக் கிடக்கும் பொருட்களைப் பழுது பார்த்து, அதனதன் இடத்தில் வைத்தான். எங்கே எது இருக்கிறது என்பது அவனுக்கு அத்துபடி. கேட்டதை தயக்கமில்லாமல் உடனுக்குடன் எடுத்துக் கொடுத்தான். மற்றவர்களுக்கு கொஞ்சம் வேலைப் பளு குறைந்தது.
சோப்புகள் வாங்கி, பணம் கொடுக்காமல் நழுவினான், 'டிப் டாப்' ஆசாமி ஒருவன். யாரும் கவனிக்கவில்லை.
''முதலாளி, முதலாளி பணம் கொடுக்காமப் போறான்,'' என்று சத்தம் போட்டுக் கொண்டே பின்னால் ஓடி, அவனை இழுத்து வந்தான், கோபால்சாமி.
''ஐயா, அவசரத்தில் மறந்து போயிட்டேன். மன்னிச்சுக்கோங்க,'' என, பில்லையும், பணத்தையும் கொடுத்தான், அவன்.
''கோபால்சாமி, இங்க வாடா. இப்படித்தான் கவனமா இருக்கணும். வியாபாரத்தில் அது ரொம்ப முக்கியம். கெட்டிக்காரன். இந்தா இந்த, 200 ரூபாய் உனக்கு வெச்சுக்கோ.''
''வேண்டாம், முதலாளி. செய்ற வேலைக்கு சம்பளம் தர்றீங்க. இதுவும் ஒரு வேலை தானே முதலாளி.''
''கண்ணும் கருத்துமா நீ இருந்ததுக்கு சன்மானம்,'' என்று கூறி, சட்டைப் பையில் திணித்தார்.
அடிமையாக வேலை பார்த்தாலும், செய்த தொழிலை தெய்வமாக நேசித்தான், கோபால்சாமி.
எல்லாரும் இவனிடமே, பொருட்கள் எழுதிய பட்டியலைக் கொடுப்பர். ஒன்று விடாமல் பொட்டலம் போட்டு, துல்லியமாக, 'பில்' எழுதி, ஒப்படைப்பான். முதலாளி இல்லாவிட்டாலும் பணத்தை வாங்கி கல்லாவில் போடுவான். மீதம் கொடுக்க வேண்டியிருந்தால் எடுத்துக் கொடுப்பான். வேலை செய்யும் மற்றவர்களுக்கு இந்தச் சலுகை கிடையாது.
மூன்றாண்டில், வியாபார நுட்பங்களைத் தெளிவாக்கிக் கொண்டான். வாங்குவோரின் மனநிலையையும் தெரிந்து கொண்டான்.
ஓய்வு பெற்ற ஆசிரியர், நல்ல சிவம். ஊர் போற்றும் சிறந்த மனிதர். சொல்வாக்கும், செல்வாக்கும் பெற்றவர். கடையின் நிரந்தர வாடிக்கையாளர்.
''ஏப்பா முத்தாண்டி, நல்ல வேலைக்காரன் கிடைக்கக் கொடுத்து வைக்கணும்ன்னு சொல்லுவாங்க. கோபால்சாமி உனக்கு கிடைச்சிருக்கான். கொஞ்ச வயது, சூட்டிக்கையான பையன், எல்லாரும் விரும்பும்படியா நடக்கான். பயன்படுத்திக்கோ விட்றாத,'' என, புகழ்ந்து சொன்னார். மற்ற சிலரும் பேச்சோடு பேச்சாக இப்படிச் சொல்லக் கேட்டிருந்தார்.
'அப்படி என்ன நமக்குப் பெரிசா சாதிச்சிட்டான். ஒரு வேளை, கூடக் குறையக் கொடுப்பானோ, 'பில்' போடாம விடுவானோ...' என, சந்தேகம் வலுத்தது; யோசிக்க ஆரம்பித்தார், முத்தாண்டி. அவன் மேல் கோணல் பார்வை விழுந்தது.
பணம் குவிந்தாலும் வேலையாட்களுக்குத் தீபாவளி, தைப்பொங்கலுக்கு எந்தச் சலுகையும் கிடையாது.
சூது வாது அறியாத, கோபால்சாமி, ''முதலாளி போனசு,'' என, தயங்கித் தயங்கி இழுத்தான்.
கேட்காததைக் கேட்ட மாதிரி அவருக்கு கோபம் பொங்கி கொப்பளித்தது.
''இரப்பாளிப் பய நாயி. எனக்கு தெரியும் மூதேவி. உங்க வேலைக்கு சம்பளமே தெண்டம். உனக்கு வேலை கொடுத்தேன் பாரு. இங்கு வேலை பார்க்கதுன்னா பாரு, இல்லை இடைத்த காலி பண்ணு,'' என, அவன் மேலுள்ள சந்தேகத்தில் காட்டமாகப் பேசினார்.
அதிர்ந்து போனான், கோபால்சாமி.
''முதலாளி மன்னிச்சுக்கோங்க. இவங்க கேட்க சொன்னாங்கேன்னு கேட்டுட்டேன்.''
'முதலாளி... பொய் சொல்லு தான். அதுபற்றி நினைக்கவே இல்லை...' என்றனர், மற்ற வேலையாட்கள்.
''இனிமே கல்லாப் பக்கம் வந்திராத. மரியாதை கிடையாது.''
'ஆழம் பாக்கச் சொல்லிட்டு, மாட்டி விட்டுட்டிங்களே...' என, மற்ற வேலைக்காரர்களைப் பார்த்து முறைத்தான்.
'படித்தவன் விபரம் தெரிந்த பயலா இருக்கான். மற்றவர்களிடம் நாட்டு நடப்பைச் சொல்லி உசுப்பேத்தி, வேலை செய்யவிடாமல் கெடுத்து விடுவான். தொலைத்துக்கட்ட வேண்டும்...' என்ற எண்ணம், முத்தாண்டி மனதில் புரையோடியது. தக்க சமயத்தை எதிர் நோக்கியிருந்தார்.
மதிய நேரம் கூட்டம் அவ்வளவாக இல்லை. சாமான்கள் வாங்கிய, நல்லசிவம் ஆசிரியர், கோபால்சாமியிடம், 3,000 ரூபாயைக் கொடுத்து மீதம் கேட்டார்.
''ஐயா, கொஞ்சம் பொறுங்க, முதலாளி குடோனுக்குள்ள போயிருக்காரு. இப்போ வந்திருவாரு வாங்கிக்கோங்க,'' என்றான், கோபால்சாமி.
''நீ கொடுப்ப இல்லப்பா. ஏன் தயங்குற. ஒண்ணும் சொல்ல மாட்டார் கொடு,'' என்றார்.
பெரிய மனிதர் சொன்னதை மீற முடியவில்லை. பணத்தை கல்லாவில் போட்டவன் மீதம் கொடுத்தான். எண்ணிப் பார்த்த ஆசிரியர், ''கோபால்சாமி, 50 ரூபாய் கூட இருக்குப்பா,'' என, அவன் கையில் கொடுத்தார்.
அந்த நேரம் வந்த முத்தாண்டி, ''ஏலே, தெருப்பொறுக்கிக் கழுதை. இப்படி எத்தனை பேருக்கு கொடுத்திருப்ப. எவ்வளவு பணம் களவாண்டிருப்ப. நீ இங்க இருந்தா நான், போண்டியாத்தான் போகணும். இந்த மாதம் நீ பாத்த நாளுக்கு சம்பளம் கிடையாது. உன்னை நம்ப முடியாது. இறங்கி நட,'' என்று கடும் சொற்களைத் தெறித்தார், முத்தாண்டி.
ஒவ்வொரு சொல்லும், கோபால்சாமியின் செவிப்பறையைக் கிழித்தது. முகம் கறுத்து, கூனிக் குறுகினான்.
''முத்தாண்டி, என்னப்பா பெரிய தவறா பண்ணிட்டான்? மனம் நோகப் பேசுற. வேலை மும்மரத்தில எண்ணிக் கொடுத்திட்டான். நான் சொல்லாமப் போயிருந்தா என்னப்பா செய்வ. போகச் சொல்லாத,'' என்று, தன்னால் அவனுக்கு ஏற்பட்ட அவலத்தையும், அவமானத்தையும் கண்டு ஆதங்கம் அடைந்தார், நல்லசிவம்.
''இவனைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும். சோலியப் பாத்திட்டுப் போங்க,'' என்று முகத்தில் அடித்த மாதிரி பேசினார்.
''ஐயா, குதர்க்கப் புத்தியும், முரண்டும் பிடித்த இவரிடம் பேசாதீங்க. உங்க மதிப்புத்தான் கெடும். மரியாதை கெட்ட மட ஜென்மம். நன்றி விசுவாசத்தோடு மாடா உழைத்தேன். அதுக்கு, நல்ல மரியாதை கொடுத்திட்டிங்க.
''எனக்குத் திறமையும், நம்பிக்கையும் இருக்கு. சொந்தக் காலில் நிற்பேன்....'' என்று கையிலிருந்த, 50 ரூபாயை அவர் முன்னால் போட்டவன், கடையை விட்டு இறங்கினான்.
''கோபால்சாமி, அவனுக்கு நல்லா சூடு போட்ட. என்னால, இந்தச் சங்கடம் ஏற்பட்டதை நினைக்கும் போது வருத்தமா இருக்கு. நீ நினைத்தபடி எல்லாம் நடக்கும். நடத்திக் காட்டுவ,'' என்றார், ஆசிரியர் நல்லசிவம்.
''என்னடா சீக்கிரம் வந்திட்ட. மூணு மணி வாக்கிலதான சாப்பிட வருவ.''
''வேலை செய்ய வேண்டாமுன்னு போகச் சொல்லிட்டாரும்மா,'' என்று, கோபால்சாமி கூற, ராமாத்தாளுக்கு நெஞ்சம் பகீரென்றது.
''வருத்தப்படாதம்மா, நானும் தனியா கடை நடத்தப் போறேன்.''
''என்னடா சொல்லுற. தொட்டுக்கோ தொடச்சுக்கோன்னு தினமும் கழியுது. கடை வைக்க அம்புட்டுப் பணத்துக்கு எங்கடா போவேன்! வயது வந்த உன் தங்கச்சி வேற படிக்கிறாள். என்னடா செய்யச் சொல்லுற,'' என்றாள்.
முத்தாண்டி பேசிய பேச்சும், ஏச்சும் மனசுக்குள் ஜுவாலை விட்டு எரிந்து, அவனுள் ஒரு வெறியை ஏற்படுத்தியது.
''அம்மா, எனக்கு நம்பிக்கையும் தைரியமும் இருக்கு. நம்ம நிலமை மாறும்; மாற்றிக் காட்டுவேன். நாலு பேருக்கு வேலை கொடுப்பேன். நீ பெருமைப்படுற அளவுக்கு தொழில் செய்வேன்.''
ஆசிரியர் நல்லசிவம் பொறுப்பேற்று, கடை ஒன்றை ஏற்பாடு செய்தார். இனம் வாரியாக மளிகைச் சாமான்கள் எல்லாவற்றையும், சிறுகச் சிறுக வாங்கி நிரப்பினான்.
''கோபால்சாமி! திறமையும், முயற்சியும், வியாபார நுட்பமும் உன்னிடம் இருக்கின்றன. எனக்கு நம்பிக்கை உண்டு. பணம் தேவைப்பட்டால் தயங்காம கேள். குலதெய்வத்தை வழிபட்டுத் துணிந்து நடத்து. வெற்றி பெறுவாய்,'' என்று ஆசீர்வதித்தார், ஆசிரியர்.
''ஐயா, உங்களைத் தவிர வேற தெய்வம் கிடையாது,'' என்று கூறி, காலில் விழுந்தான்.
ஆரம்ப விற்பனை மந்தமாக இருந்தது. பிறகு, வாடிக்கையாளர்கள் பெருகி, விற்பனை சூடு பிடித்தது.
தனியார் வங்கி, பத்திரப் பதிவு அலுவலகம், உயர்நிலைப் பள்ளி மாறி, மேல்நிலைப் பள்ளி, பெரிய பெரிய கட்டடங்கள், புதுப்புது மனிதர்கள் மற்றும் போக்குவரத்து விறுவிறுப்பு என, அந்த கிராமம், நகரமாக விரிந்து கொண்டிருந்தது; விற்பனையும் பெருக்கெடுத்தது!
இரவு பகலாய் கடுமையாக உழைத்தான், கோபால்சாமி. மூன்றாம் ஆண்டில் இவன் கடை, அமோகமாக வளர்ச்சி அடைந்தது; முத்தாண்டி கடை படுத்தது.
கோபால்சாமியின் கடையில், லாரியிலும், வேன்களிலும் விற்பனைப் பொருள் வந்து குவிந்தன.
ஊரை ஒட்டிய நெடுஞ்சாலை ஓரத்தில், 25 சென்ட் நிலம் வாங்கினான், கோபால்சாமி.
ஆசிரியர் முயற்சியால் வங்கியில் பெருந்தொகையை, கடனாக பெற்று, பெரிய கடையாக மாற்றினான்.
'ராமாத்தாள் பல் பொருள் பேரங்காடி' என, பெயர் எழுதிய பலகையைப் பொருத்தினான். சுற்றிலும் அலங்கார மின் விளக்குகளை, வகை வகையான நிறங்களில் ஜொலிக்க வைத்தான்.
விலை கூடிய பட்டு வேட்டி, சட்டை, சேலை மற்றும் பல வகைப் பழங்கள் நிரப்பிய தாம்பூலத் தட்டை ஏந்தி, மேள தாளம் முழங்க, முத்தாண்டி காலில் போய் விழுந்தான். திடீரென்று நடந்த இந்த நிகழ்வு அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து அவரைப் பிரமிக்க வைத்தது. நா எழவில்லை. தொண்டைக் குழி அடைத்தது.
''முதலாளி! காணிக்கையை ஏற்று ஆசீர்வதியுங்கள்,'' என்றான்.
தன்னிலைக்கு திரும்பியவர், ''என்னப்பா இதெல்லாம். சொல்லத் தகாத சொல்லால் உன்னை நோக அடிச்சேன், கேவலப்படுத்தி வெளியேத்தினேன். அதுக்குக் கைமாறாப்பா,'' என்றார், முத்தாண்டி.
''ஐயோ, முதலாளி, அப்படி சொல்லாதீங்க. அதெல்லாம் மறந்திட்டேன். நீங்கள் பேசிய பேச்சும், ஏச்சும் வைராக்கியமாக்கியது. அதையே உரமா போட்டுத் தொழிலை செழிப்பாக்கினேன்.
''உங்க கடையில் வேலை செய்யப் போய், வியாபார முறையை கற்க முடிந்தது. உங்க கையால் கடையைத் திறந்து, கல்லாவில் அமர வேண்டும். என்றென்றும் நீங்கள் தான், என் முதலாளி. மனப் பூர்வமாகச் சொல்கிறேன்.''
மனம் நெகிழ்ந்தார், முத்தாண்டி.
ஆசிரியர் நல்லசிவம், விளக்கேற்றினார்.
படித்து முடித்து இருந்த பெண்கள் சிலர் வேலையில் சேர்ந்தனர். அந்தந்த பொருளின் விற்பனைக்குத் தனித்தனி நபர்கள். மேலும், மேலும் விற்பனைப் பொருட்கள் வந்து குவிந்தன. சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள், மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி வேனிலும், ஆட்டோவிலும் ஏற்றிச் சென்றனர்.
பொறியியல் பட்டதாரியான தங்கை மாரித்தாயை, சீரும் சிறப்புமாக தகுந்த இடத்தில் திருமணம் செய்து கொடுத்தான்.
இன்று ஊரில் முக்கிய பெரும் புள்ளி. சொல்லி அடித்த கில்லி, கோபால்சாமி.
சு.ஆதிகோபிநாத்
வயது: 23, படிப்பு: பி.இ., சொந்த ஊர்: சங்கரன்கோவில், தென்காசி. துணுக்குகள் மற்றும் சிறுகதைகள் எழுதியுள்ளார். நிறைய சிறுகதைகள் எழுத வேண்டும் என்பது, இவரது லட்சியம்.கதைக் கரு பிறந்த விதம்: எங்கள் ஊரில் உள்ள மளிகைக் கடையில் வேலை செய்த சிறுவன், சில ஆண்டுகளில், அனுபவம் பெற்று, தனியாக கடை நடத்தினார். சிறு வயதிலேயே நல்ல முன்னேற்றம் அடைந்தார். அவரது திறமையையே கருவாக வைத்து, இக்கதை எழுதப்பட்டது.