
இப்படியும் வருமானத்தை பெருக்கலாம்!
எனக்கு தெரிந்த ஒருவர், அவருடைய கிராமத்தில், குடும்பத்துடன், மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன், வடமாநில சுற்றுலா சென்றவர், அங்கிருந்து புதுமையான ஒரு செய்முறையை அறிந்து வந்து, அதை அவரது தொழிலில் செயல்படுத்துவதை கேள்விப்பட்டேன்.
அதுபற்றி தெரிந்து கொள்ள, அவரை சந்தித்தேன்.
மண்பாண்டங்கள் செய்ய பயன்படும் களிமண் குவியலுக்கு அருகில், பசுஞ்சாணக் குவியல் இருப்பதைப் பார்த்து, 'அது எதற்காக?' என்று வினவினேன்.
'சுற்றுலா சென்றபோது, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில தலைநகரான சண்டிகரில் உள்ள ஒரு கோசாலையில், பசுஞ்சாண அகல்விளக்கு மற்றும் பூந்தொட்டி போன்றவற்றை செய்து, நாடெங்கும் விற்பனைக்கு அனுப்புவதை கவனித்தேன்.
'இங்கேயும் அதுபோல் செய்யலாம் என்று, வழக்கமான மண் பாண்டங்களோடு, என் வீட்டில் வளர்க்கும் பசுக்களின் சாணத்தை சேகரித்து, அகல் விளக்குகளையும், தொட்டிகளையும் செய்து, விற்று வருகிறேன்.
'சாணத்தில் செய்யப்படும் தொட்டிகளில் வளர்க்கப்படும் செடிகளுக்கு, தனியாக எருவிட வேண்டிய அவசியமில்லை. சாண அகல் விளக்குகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. இவை, இரண்டும் சேதமடைந்தாலும், தோட்டத்தில் உரமாக துாவி விடலாம். இதனால், பலரும் விரும்பி வாங்குகின்றனர்; கூடுதல் வருமானமும் கிடைக்கிறது...' என்றார்.
தொழிலில் மாற்று சிந்தனை, கூடுதல் சம்பாத்தியத்திற்கு உதவும் என்பதற்கு, உதாரணமாக விளங்கும் அவரை, மனதார பாராட்டி வந்தேன்.
--டி.எல்.குமார், விழுப்புரம்.
லைவ் கண்காணிப்பும் அவசியம் தான்!
சி.சி.டி.வி., கேமரா பொருத்தி வரும், தெரிந்த நபர் ஒருவரை, 'யூனிபார்ம்'மில் கடைத்தெருவில் சந்தித்தேன்.
'இது என்ன புது, கெட்- அப்!' என்றேன்.
அதற்கு அவர், 'கேமரா தொழிலுக்கு வந்து, 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கு வயதும், 50 தாண்டிவிட்டது. முன்பு போல் உயரத்தில் ஏறி, இறங்கி வேலை செய்ய முடியவில்லை. ஆட்கள் இருந்தாலும், சில, 'டெக்னிக்கல்' ஆன விஷயங்களை நாம் தான் செய்ய வேண்டும்.
'இந்நிலையில், ஒருநாள், கம்பெனி ஒன்றில் கேமரா பழுது பார்க்க போயிருந்தேன். அந்த கம்பெனி இரவு - பகல் என, இயங்கக் கூடியது. வெவ்வேறு மாநிலம் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இளம் பெண்களும், இளைஞர்களும் அங்கு பணிபுரிகின்றனர். அங்கு, 30 கேமரா இருக்கிறது.
'மேலும், 'பெரிய, 'ஸ்கிரீன்' வைத்து, அதில், 30 கேமராவும் தெரியும்படி செய்ய போகிறோம். அதை தொடர்ந்து கண்காணிக்க, மூன்று, 'ஷிப்ட்'டாக ஆட்களையும் நியமனம் செய்ய இருக்கிறோம். நல்ல சம்பளமும் தர உள்ளோம். ஆட்கள் இருந்தால் கூறுங்கள்...' என்றார், அந்த கம்பெனி நிர்வாகி.
'நான் உடனே, 'ஆட்கள் எதற்கு, 'புட்டேஜ்' பதிவு தான் இருக்கிறதே...' என்றேன்.
'அதைக் கேட்டு, 'ஒரு சம்பவம் நடந்து முடிந்த பின், அதை, 'புட்டேஜில்' பார்த்து என்ன செய்ய முடியும். குற்றவாளியை கண்டுபிடித்து, தண்டனை வாங்கி தரலாம். ஆனால், போன உயிரும், மானமும் திரும்ப கண்டிப்பாக வராது. வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம். மேலும், 'டிவி' அல்லது, 'ஸ்கிரீன்'களில் கேமராவை ஆட்கள் மூலம் நேரடியாக கவனித்தால் மட்டுமே, ஒரு சம்பவம் நடப்பதை, முன்கூட்டியே தெரிந்து, அதை தடுத்து நிறுத்தி விடலாம்...' என்றார்.
'அந்த கேமரா கண்காணிப்பு பணியில் சேர முடிவு செய்து, அதில் சேர்ந்து விட்டேன்...' என்றார்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்பதற்கு இணங்க, முன்கூட்டியே புத்திசாலித்தனமாக யோசித்து, அதை நிறைவேற்றிய அந்த நிறுவனத்தை பாராட்டினேன்.
இதை மற்ற நிறுவனங்களும் பின்பற்றலாமே?
- ப.சிதம்பரமணி, கோவை.
பெயரை எழுதி வையுங்கள்!
எங்களது பக்கத்து வீட்டு பெண், தன் வீட்டு மிக்ஸி பழுது ஏற்பட, மிக்ஸியில், தன் பெயரை எழுதி, ஒட்டி, கடையில் கொடுக்க வைத்திருந்தார்.
'எதற்காக மிக்ஸியில் பெயரை எழுதி, ஒட்டி வைத்துள்ளீர்...' என்றேன்.
'பழுது பார்க்கும் கடைக்கு, நிறைய மிக்ஸிகள் வரும். நாம் வைத்துள்ள கம்பெனி மிக்ஸி போல, மற்றவர்களும் சரி செய்ய கொண்டு வருவர். மிக்ஸி மாறி விடும் என்பதால், பெயரை எழுதி, ஒட்டி கொடுப்பேன்.
'மிக்ஸி மட்டுமின்றி, கிரைண்டர் என, எதைக் கொடுத்தாலும், நம் பொருள் மீது இதுபோன்று, 'ஸ்டிக்கர்' ஒட்டி கொடுத்து விடுவேன்...' என்றார்.
'சரியான யோசனை; உங்கள் வழியை, நானும் பின்பற்றுகிறேன்...' என்றேன்.
- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.