/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (18)
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (18)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (18)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (18)
PUBLISHED ON : டிச 01, 2024

காலையில், 'அம்மா, அம்மா எழுந்திருங்கள்...' என்று அலறியபடி, என்னை எழுப்பினாள், பணிப்பெண்.
எழுந்தவுடன் பார்த்த காட்சி பகீரென்றது.
கீழே விழுந்து நெஞ்சைப் பிடித்தபடி, 'இதயம் வலிக்கிறது. உடனே டாக்டருக்கு போன் செய்...' என்றார், என் கணவர், ஹர்ஷா.
'என்னை ஏன் எழுப்பவில்லை...' என்றேன், பணிப்பெண்ணிடம்.
'ஒன்றுமில்லை, பயப்படாதே என்று, ஐயா சொன்னதால் தான் எழுப்பவில்லை...' என்றாள்.
உடனே, மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
'சிவியர் ஹட்டாக்' என்று சொல்லி, அவரை, 'இன்டன்சிவ் வார்டில்' சேர்த்தனர்.
உள்ளே எவரையும் அனுமதிக்கவில்லை.
நான் அழுதபடி இருந்ததால், மக்கள் என்னை சூழ்ந்து கொண்டனர்.
என்னை உள்ளே போக கூறினர், டாக்டர்கள்.
என்னை மிகவும் வற்புறுத்தி சாப்பிட வைத்தாள், ஹர்ஷாவின் தங்கை.
'இன்று ஞாயிற்றுக்கிழமை தானே, குழந்தைகளை அழைத்து வா...' என்றார், ஹர்ஷா.
மறுநாள் குழந்தைகளை அழைத்துப் போனேன்.
பேத்தி இந்துவை துாக்கி முத்தமிட்டு, என்னிடம், 'இனிமேல் எல்லாவற்றையும் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும். என் இடத்தில் நீயே இருக்க வேண்டும். நாளைக்கு வரும்போது, 'ஷேவிங் செட்' கொண்டு வா...' என்றார், ஹர்ஷா.
இரவு, 10:30 மணிக்கு ஒரு டம்ளர் சூடான பால் தந்தேன். குடித்த பின் கண்ணயர்ந்தார்.
நள்ளிரவு, 12:00 மணி அளவில், என்னை விட்டுவிட்டு, கணவர் ஹர்ஷா போய் விட்டார் என்ற செய்தி கேட்டு, 'எல்லாரும் பொய் சொல்லுகிறீர்கள். என்னை தனியாக விட்டு, அவர் மட்டும் போக மாட்டார்...' என்று, அழுதேன்.
ஹர்ஷாவை வீட்டிற்கு கொண்டு வந்தோம்.
அவருக்கு போகன்வில்லா என்றால் மிகவும் இஷ்டம். விதவிதமான போகன்வில்லா செடிகளை எல்லாம் கொண்டு வந்து, வீட்டில் வைத்து வளர்த்தார். அதன் ஒரு இலையை கூட யாரையும் தொட விட்டதில்லை.
வீட்டிற்கு வந்ததும் அவர் ஆசையுடன் வளர்த்து வந்த, நாகப்பழ நிற போகன்வில்லா கண்ணில் பட்டது.
எனக்குள் ஆவேசம் வந்து, 'உன்னுடைய ஒரேயொரு இலையைத் தொட்டால் கூட திட்டுவார். இப்போது என்ன செய்யப் போகிறாய். அவர் தான் என்ன செய்வார்?' என்று கேட்டு, அந்த செடியை அடித்து துவைத்தேன்.
அவருக்கு மிகவும் பிடித்த கார், பியட் 1717.
'நீ எதற்காக இன்னமும் நின்றிருக்கிறாய். அவருடன் சேர்ந்து நீயும் போ...' என்று சொல்லி, ஒரு கட்டையை எடுத்து, காரை அடித்து நொறுக்கினேன்.
அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்.
மாலையை கொண்டு வந்தனர், நாத்தனார்கள்; அவர்களை நான் போட விடவில்லை.
'மாலையை போட்டு விட்டால், அவர் நிஜமாகவே இறந்தது போன்ற தோற்றம் வந்துவிடும். அவருக்கு யாருமே மாலை போட, சம்மதிக்க மாட்டேன். இறுதிக் காரியங்கள் செய்ய யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்...' என்று அழுதேன்.
செய்தி அறிந்து, டாக்டர் நாராயண ரெட்டி வந்தார். அவர், எனக்கு அண்ணன் போன்றவர்.
'இப்போதே, மதியம், 3:00 மணி ஆகிவிட்டது. பாடியை கொடும்மா...' என்று சொல்லி, ஒருவாறாக என்னை ஒப்புக்கொள்ள வைத்தார்.
வெளியில் வந்து பார்த்தால், திரைப்படத்துறையை சார்ந்தவர்கள், இவரின் நண்பர்கள் என, ஏராளமானோர் குழுமியிருந்தனர்.
'ஒருவேளை நான் இறந்து விட்டால், என் அம்மாவுக்கு பக்கத்திலேயே புதைத்துவிட வேண்டும்...' என்று, எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார், ஹர்ஷா. அதன்படியே அங்கு கொண்டு சென்று அடக்கம் செய்தோம்.
இரவு, 12:00 மணிக்கு, நடிகர் அம்பரீஷ் வந்தார். எப்போதும் கலகலப்பாக பேசுபவர் அன்று, ஒரு வார்த்தை கூட பேசாமல், சிலை போல் நின்றிருந்தார்.
'பயப்படாதே, நாங்கள் எல்லாரும் இருக்கிறோம்...' என்று, எனக்கு போன் செய்து, ஆறுதல் சொன்னார், எம்.ஜி.ஆர்.,
அன்றைய தினம் தான், சென்னையில், வைஜெயந்தி மாலாவின் கணவர், பாலியும் மரண மடைந்தார்.
அழுது அழுது ஓய்ந்தேன்.
கண்களில் வலி ஏற்பட, 'கண்களில் நீர் வற்றிப் போயுள்ளது. செயற்கைக் கண்ணீருக்குத்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்...' என்றார், கண் டாக்டர்.
இந்தியாவில் மருந்து கிடைக்காது என்பதால், வெளிநாட்டிலிருந்து வரவழைத்தனர்.
சும்மா உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதற்கு பதில், அவருக்குப் பிடித்தமான ஏதாவது செய்தால், அதனால், மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்குமே என்று, திடீரென்று எனக்குள் ஒரு யோசனை தோன்றியது.
உடனே, ஹர்ஷாவை அடக்கம் செய்த தோட்டத்துக்கு சென்று, காபி, அரை நெல்லிக்காய், சாதாரண நெல்லிக்காய், சப்போட்டா, மாதுளை, சீதாப்பழம், எலுமிச்சை, தென்னை மற்றும் செர்ரி என்று, எல்லா வகை மரங்களுடன், ஒரு தோட்டம் அமைத்தேன்.
அவருக்கு பிடித்தமான எல்லா வகை பூக்கள் மற்றும் போகன்வில்லா செடிகளையும் அங்கே கொண்டு வந்து வைத்தேன்.
அங்கே ஒரு கிணறு வெட்ட, 30 அடியில் தண்ணீர் வந்தது. நானே நின்று ஒவ்வொன்றையும் கவனித்தேன்.
ஆச்சரியப்பட்டனர், மக்கள்.
அங்கு செல்வதற்கு சரியான சாலை வசதிகள் இல்லை. அப்போது, கர்நாடகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த, நசீர் சாபிடம் போன் செய்து, என் கோரிக்கையை சொன்னேன். அவர் உடனடியாக சாலை அமைத்து தந்தார். தோட்டம் பற்றிய விபரம் தெரிந்த ஒருவரை, வேளாண் துறையிலிருந்து அனுப்பி வைத்தார்.
என் தேவைகளுக்கு, அப்போதைய முதல்வர், ராமகிருஷ்ண ஹெக்டேவும் நிறைய உதவிகள் செய்தார். சதாசிவ நகர் வீட்டிற்கு, ஒரு போலீசை அனுப்பி வைத்தார்.
ஒருநாள் எனக்கு போன் செய்து, 'வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தால், வேதனை குறையாது. வெளியே வாருங்கள். 'ராகப்ராப்ருதி'க்கு உங்களை சேர்மேனாக போட்டிருக்கிறேன். கன்னடப் படங்களைப் பார்த்து, அதில் சிறந்தவைகளை தேர்வு செய்வது, உங்கள் வேலை. அதை செய்யுங்கள்...' என்றார், முதல்வர் ஹெக்டே.
'நான் எங்கும் வரவில்லை...' என்றேன்.
என்னென்னவோ கூறி, என்னை ஒப்புக் கொள்ள செய்தார்.
இங்கு, பூரண் பிரதிக்ஞா என்றொரு பள்ளி உள்ளது. என் வளர்ப்பு மகள் புவனேஸ்வரி, தன் மகன் கவுதம் ராமச்சந்திரனை பள்ளியில் சேர்க்க, அங்கு போயிருக்கிறாள்.
அவளை பார்த்த சுவாமிகள், என்னை வரச் சொல்லி இருக்கிறார்.
- தொடரும்
நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்
- எஸ். விஜயன்