sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : டிச 15, 2024

Google News

PUBLISHED ON : டிச 15, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிரந்தர வேலை கிடைக்கும் வரை...

சமீபத்தில், டூ-வீலரில் வந்த இளைஞர் ஒருவர், தானொரு கைவினைக் கலைஞர் என்று, தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழைய கண்ணாடி வளையல்களைக் கொடுத்தால், அதில் கலைநயமிக்க, 'விண்ட் சைம்ஸ்' என்ற, காற்றில் அசைந்து ஒலி எழுப்பும், அலங்கார பொருளை செய்து தருவதாகவும், அதற்கு கூலியாக கிடைக்கும் தொகை, வேலையில்லாத தனக்கு உதவுமென்றும் கூறினார்.

என் மனைவி, தன் பழைய கண்ணாடி வளையல்களையும், வளைகாப்பு நிகழ்வுகளில் தாம்பூலத்தில் கிடைத்த, அளவு சரியில்லாத வளையல் களையும், அந்த இளைஞரிடம் கொடுத்தார்.

அந்த வளையல் களில், கெட்டியான எம்பிராய்டரி நுால்களைக் கட்டினார், இளைஞர். பின், தான் கொண்டு வந்திருந்த பாக்கு மட்டைத் தட்டு மற்றும் அரையடி, ஓரடி கொண்ட மூங்கில் துண்டுகளில் துளையிட்டு, வளையல்களில் கட்டப்பட்ட நுாலின் முனைகளைக் கட்டினார்.

அதை எங்களிடம் தந்து, வீட்டிற்குள் விரும்பும் இடங்களில், தொங்கவிட சொன்னார்.

அதன்படியே செய்து, மின்விசிறியை ஓடவிட்டதும், காற்றில் வளையல்கள் அசைந்தசைந்து எழுப்பிய இனிய ஒலி, மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு, உற்சாகத்தையும் தந்தது.

நாங்கள் குப்பையென்று ஒதுக்கியதை, கலைப்பொருளாக மாற்றித் தந்த இளைஞருக்கு, அவர் கேட்ட நியாயமான தொகையைக் கொடுத்து அனுப்பினோம்.

வேலை தேடும் இளைஞர்கள், நிரந்தர வேலை கிடைக்கும் வரை, இவ்வாறு ஏதேனும் தொழில் செய்து பணம் ஈட்டலாமே!

- செ.விஜயன், சென்னை.

புதுவித மண நாள் விழா கொண்டாட்டம்!

என் தாய் மாமன் பிள்ளை, வயது: 30. தன், மண நாள் அன்று, மனைவியை அழைத்து ஹோட்டலுக்கோ, திரைப் படத்திற்கோ, வேறு எந்த கேளிக்கைக்கோ செல்ல மாட்டார். தன் வயது ஒத்த நண்பர்களை அழைத்து விருந்தும், கொடுக்க மாட்டார்.

தன் சுற்றம் சார்ந்த மூத்தக்குடி மக்களை, முன்னதாகவே போன் அல்லது கடிதம் மூலமாக, இல்லத்திற்கு வரவழைப்பார். காலை சிற்றுண்டி முடிந்ததும், வேன் வைத்து, சொந்தச் செலவில், தன் தாத்தா வழி கிராம கோவிலுக்கு அழைத்து செல்வார்; அங்குள்ள கடவுளுக்கு, சிறப்பு வழிபாடு செய்வார்.

இல்லத்தில் தயார் செய்து எடுத்து வந்த மதிய உணவும் தருவார். மிகுதியாகும் உணவை, ஊர் மக்கள், 15 - 20 பேரை அழைத்து, உண்ணக் கொடுப்பார். போகும் மற்றும் வரும் வழியில் உள்ள கோவில்களுக்கும் அழைத்துச் செல்வார். இதில் அதிகபட்சமாக, 90 வயது பாட்டியும், தாத்தாவும் கூட கலந்து கொள்வதுண்டு.

பயணத்தின் போது எழும் நையாண்டியும், பழைய நினைவூட்டல்களும், அனைவருக்கும் புது தெம்பைத் தரும். ஒவ்வொரு ஆண்டும், அவர், இதை தவறாமல் செய்கிறார்.

சுற்றத்து பெரியவர்கள் மனம் மகிழும் இச்செயலை, மற்றவர்களும் பின்பற்றலாமே!

டி.பி.கோபால், சென்னை.

தன் கையே தனக்குதவி!

சமீபத்தில், என் கணவர் மற்றும் குழந்தையுடன், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு, ஆன்மிகப் பயணம் சென்றிருந்தேன்.

மாலை நேரம், ஒரு கோவில் வாசலில் இருந்த பூக்கடையில், சாமிக்கு பூ வாங்கச் சென்றபோது, பக்கத்திலிருந்த தள்ளுவண்டியில், பள்ளிச் சீருடையோடு, முருங்கை, வல்லாரை, செம்பருத்தி, முடக்கத்தான், பொன்னாங்கண்ணி, மிளகு, நெல்லி மற்றும் கருவேப்பிலை என, பல்வேறு மூலிகை, 'சூப்' வகைகளை விற்றுக் கொண்டிருந்தாள், சிறுமி ஒருத்தி.

கோவிலில் வழிபாடு முடித்து வந்த பலர், தேவைப்படும், 'சூப்' வகையைக் கேட்டு வாங்கி, அருந்திச் செல்வதைக் கவனித்தேன்.

அச்சிறுமியிடம், 'பள்ளி வீட்டுப்பாடம் நிறைய இருக்குமே... அதைச் செய்யாம, இந்த வயசுலயே இப்படி தொழில்ல இறங்கிட்டா, உன் படிப்பு பாதிக்குமே?' என்றேன்.

'என் அப்பா, ஒரு டீக்கடையில டீ மாஸ்டரா வேலை பார்க்கிறார். அவர், குடிக்கு அடிமையானதால, சரிவர சம்பளத்தை வீட்டுக்குத் தர்றதில்ல...

'நீங்க பூ வாங்கின கடைய நடத்தறது, என்னோட அம்மா தான். அதுல கிடைக்கிற வருமானம், குடும்பச் செலவுக்கு போதுமானதா இல்லங்கறதால, இந்த, 'சூப்' கடைய ஆரம்பிச்சோம்.

'பூக்கடைய பார்த்துக்கிட்டே, அம்மா, 'சூப்'களை தயாரிச்சு வைப்பாங்க. மாலை பள்ளி முடிஞ்சு வந்ததும், இருட்டுற வரைக்கும் கடையை கவனிச்சுக்கிட்டு, அதுக்கப்புறம் அம்மாகிட்ட ஒப்படைச்சுட்டு, வீட்டுக்குப் போய் படிப்பேன்.

'விடுமுறை நாட்களில் மூலிகைப் பொடிகளை பாக்கெட் பண்ணி வெச்சு, சூப்போடு சேர்த்து, அதையும் விற்பனை செய்வதால், குடும்ப செலவுகள் போக, கொஞ்சம் சேமிக்கவும் முடியுது...' என்றாள்.

வறுமையைச் சொல்லி, பிறரிடம் கையேந்தாமல், தன் கையே தனக்குதவி என்று, கவுரவமாக உழைத்து, தன் தாய்க்கும், குடும்பத்திற்கும் உதவி வரும் அச்சிறுமிக்கு, 'சபாஷ்' சொல்லி, சென்றேன்.

- இந்திராணி ஆறுமுகம், புவனகிரி, கடலுார்.






      Dinamalar
      Follow us