/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (20)
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (20)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (20)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (20)
PUBLISHED ON : டிச 15, 2024

அன்று திங்கட்கிழமை -
அம்மா போன் செய்து, 'கோவிலில் பூஜை செய்தேன்; வந்து பிரசாதம் எடுத்துப் போ...' என்றார்.
திங்கட்கிழமை தோறும் நான், உபவாசம் இருப்பது வழக்கம். எனவே, பிரசாதம் எடுத்து வரலாம் என்று போனேன்.
'இரவுக்கும் சேர்த்து பலகாரம் தருகிறேன். அதை, நீ மட்டும் தான் சாப்பிட வேண்டும்; யாருக்கும் தர வேண்டாம்...' என்றார்.
அம்மாவுடனேயே சில மணி நேரம் இருந்துவிட்டு, என் வீட்டிற்கு திரும்பினேன்.
சப்பாத்தி மற்றும் தயிர் சாதம் தந்திருந்தார்.
அம்மா சொன்னபடியே சாப்பிட்டு முடித்து, ஏதோ ஒரு புத்தகத்தை படித்தபடி, சற்று கண் அயர்ந்து விட்டேன்.
அப்போது, போன் அழைப்பு வந்தது, அம்மா பேசினார்.
யாருக்கோ மாப்பிள்ளை பார்ப்பது, யாருக்கோ பெண் பார்ப்பது, யாருக்கோ தோட்டம் வாங்குவது, தென்னை மரம், துறவு என்று ஏதேதோ பேசினார்.
'இப்போது, இரவு 10:30 மணி; இந்த நேரத்துக்கு என்ன இந்த கதையெல்லாம்? எல்லாம் காலையில் பேசிக் கொள்ளலாம். இப்ப போனை வைம்மா...' என்றேன்.
அவர் தொடர்ந்து என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார். நான் போனை வைத்து விட்டேன். சிறிது நேரத்தில், திரும்பவும் போன் அடிக்க, என் மகள் புவனா எடுத்தாள்.
'அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். டாக்டரிடம் போக வேண்டுமாம்...' என்றாள்.
சொன்னதோடு நில்லாமல், உடனடியாக புறப்பட்டு போய், அம்மாவை டாக்டரிடம் அழைத்துப் போனாள்.
திரும்ப சிறிது நேரத்தில், புவனாவிடம் இருந்து போன் வந்தது, 'அம்மா போய் விட்டார்...' என்று!
'பேசிக் கொண்டிருந்தவரை, நாளைக்கு பேசு என்று சொல்லிவிட்டோமே... இப்போது, பேசுவதற்கு அவரே இல்லையே...' என்று பைத்தியம் போல் எழுந்து, வெளியில் ஓடத் துவங்கினேன்.
எதிர் வீட்டுக்காரர் பார்த்து, 'எதற்காகவோ, சரோஜாதேவி ரோட்டில் ஓடுகிறாள்...' என்று, என் பின்னாலேயே கார் எடுத்து வந்து, பின், என்னை அழைத்து சென்றார்.
வீட்டில் எல்லாம் இருந்தது; ஆனால், அம்மா இல்லை!
அம்மா இருந்த போது, 'என் வீட்டிலேயே வந்து இரு...' என்றார். நான் கேட்காமல், மல்லேஸ்வரத்தில் என் புகுந்த வீட்டிலேயே தங்கியிருந்தேன்.
சதாசிவ நகரில், வெறும் அலுவலக வேலை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். தற்போது, இரண்டு இடங்களையும் மாறி மாறி கவனிக்க ஆரம்பித்தேன்.
ஒருமுறை, டில்லிக்கு நான், புவனா, அவளது மகள் இந்து மற்றும் மகன் கவுதம் ஆகியோர் சென்று கொண்டிருந்தோம்.
விமானத்தில், என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் மீது, தன் காலை போட்டிருந்தாள், இந்து.
சங்கோஜத்தில், அவள் காலை எடுத்தேன்.
'இருக்கட்டும்; சின்னப் பெண் தானே...' என்றார்.
அப்போதைய பிரதமர் ராஜிவின் உதவியாளர்களில் அவரும் ஒருவர். பெயர், ஸ்ரீபாலி என்று தெரிந்தது.
'ராஜிவை சந்தித்து இருக்கிறீர்களா?' என்று கேட்டார்.
'இல்லை...' என்று கூறி, 'நாங்கள், இந்திராவிடம் மிகவும் அபிமானம் கொண்டவர்கள். இந்துவுக்கு கூட, இந்திரா என்ற பெயரை தான் வைத்திருக்கிறோம்.
'முன்பு டில்லியில் நடந்த ஒரு விழாவின் போது, அப்போதைய பிரதமர் நேருவை சந்தித்து பேசியிருக்கிறேன். என்னைப் பார்த்து, 'தும் பஹூத் சம்மத் ஹீரோயின் ஹூம்...' (நீ ரொம்பவும் அழகான கதாநாயகி.) என்றார், நேரு. அவர் சொன்னது, அடுத்த நாள் எல்லாப் பத்திரிகைகளிலும் செய்தியாக வந்திருந்தது. இந்திராவையும் சந்தித்திருக்கிறேன்...' என்றேன்.
மறுநாள், நான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு போன் அழைப்பு வந்தது; 'அடுத்த நாள் காலை, 11:00 மணிக்கு, பிரதமரை சந்திக்க தயாராக இருக்கவும்...' என்ற செய்தி வந்தது.
மறுநாள் தயாராக இருந்தோம். 'ரிசப்ஷன்' எதிரிலேயே கார் வந்து நின்றது. காருக்குள், விமானத்தில் பார்த்த, ஸ்ரீபாலி அமர்ந்திருந்தார்.
ஏற்கனவே, ஒரு பூச்செண்டு, 'ஆர்டர்' கொடுத்திருந்தேன். அதை, ஸ்ரீபாலியின் காரிலேயே சென்று, வாங்கி கொண்டு போனோம். நாங்கள் சென்ற காரிலிருந்து இறங்கி, வேறொரு காரில் மாறி சென்றோம். எல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.
வீட்டு முன், கேட் அருகில் இறங்கி, பரிசோதனை எல்லாம் முடித்து, இன்னொரு காரில் ஏறிச் சென்றோம்.
வீட்டினுள், ஓர் அறைக்கு அழைத்து சென்று, 'ஒரு நிமிடம் உட்காருங்கள்; ராஜிவ் வருவார்...' என்று கூறி, உள்ளே சென்றார், ஸ்ரீபாலி.
கதவை திறந்து வந்தார், ராஜிவ்.
அவரை பார்த்ததும் மிகவும் சந்தோஷமாகி விட்டது.
'உங்க தாத்தா நேருவை சந்தித்திருக்கிறேன், அம்மா இந்திராவை சந்தித்திருக்கிறேன். உங்களை சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை...' என்று கூறி, கையில் இருந்த பூச்செண்டை கொடுத்தேன்.
'ஹோ, சோனியா லவ்ஸ் திஸ் கலர்...' என்றபடியே பூச்செண்டை வாங்கி, உள்ளே அனுப்பி வைத்தார்.
பின்னர், 'கர்நாடக மாநிலம், மாண்டியாவில் காங்கிரஸ் வேட்பாளராக நிற்க முடியுமா?' என்று கேட்டார், ராஜிவ்.
'வேண்டாம்...' என்றேன்.
'ஏன்?' என்றார்.
'எனக்கு அந்த சக்தியில்லை. என் கணவர் இருந்தபோது, நான், எம்.பி.,யாக வேண்டுமென்று, அவர் ஆசைப்பட்டார். இப்போது அவரே இல்லை. எனக்கு அரசியல் ஆசையெல்லாம் போய் விட்டது. அதனால், இப்போது அந்த எண்ணம் இல்லை...' என்றேன்.
'அப்படியானால், தேர்தல் பிரசாரம் செய்வீர்களா?' என்று கேட்டார்.
அதற்கும், 'இல்லை...' என்று தலையாட்டினேன்.
அப்போது, ஜானகி எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தனித் தனியாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
'நீங்கள் யாருக்காக பிரசாரம் செய்வீர்கள்?' என்றார், ராஜிவ்.
'யாருக்கும் இல்லை...' என்றேன்.
மெல்லிய புன்னகையுடன், 'தமிழகத்தில் பிரசாரத்திற்கு போவதில்லை என்று எனக்கு வாக்கு கொடுங்கள்...' என்றார்.
'யாருக்காகவும் பிரசாரத்திற்கு போக மாட்டேன்...' என்றேன்.
'பிராமிஸ்?' என்று, ராஜிவ் கேட்க, 'பிராமிஸ்...' என்றேன்.
- தொடரும்.
நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்.
சரோஜாதேவிக்கு, இந்திய முன்னாள் ஜனாதிபதியாக இருந்த, அப்துல்கலாமை சந்தித்து பேச, ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. 'பத்து நிமிடம் தான் சந்தித்து பேச முடியும்...' என்று முதலில் விதிக்கப்படிருந்த நிபந்தனை, சந்தித்த பின், பேசி முடிக்க, இரண்டு மணி நேரம் ஆனது. சந்திப்பில், சரோஜாதேவி நடித்த பழைய படங்களை பற்றி நினைவு கூர்ந்துள்ளார், அப்துல்கலாம்.அதில், கல்யாண பரிசு படத்தில் சைக்கிள் ஓட்டியபடி நடித்ததை, சிலாகித்து கூறியுள்ளார், கலாம். இச்சந்திப்புக்கு பின், தேசிய திரைப்பட விருதுகள் குழுவின் தலைவராக, தான், 2006ல், நியமிக்கப்பட்டதாக கூறினார், சரோஜாதேவி.
- எஸ். விஜயன்