
செக்கு எண்ணெய் வாங்க போகிறீர்களா?
பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பவுச்சுகளில் விற்கும் நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் போன்றவைகளில், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் பல பொருட்கள் கலந்து இருப்பதாக செய்தி பரவியது. இதனால், பாரம்பரிய செக்கு எண்ணெய் கடைக்கு சென்று, விலை அதிகம் என்றாலும் வாங்கினேன்.
கடையின் இன்னொரு வாசல் வழியாக, மூட்டை மூட்டையாக தனியார் எண்ணெய்களின் காலி டின்களை, மூன்று சக்கர வண்டியில், இளைஞன் ஒருவன் ஏற்றிக் கொண்டிருந்ததை, தற்செயலாக கவனித்தேன்.
செக்கு எண்ணெய் விற்கும் கடையில், தனியார் தயாரிக்கும் எண்ணெய் டின்களுக்கு என்ன அவசியம் என்ற சந்தேகம் எழுந்தது.
மூன்று சக்கர வண்டியை மறித்து, அந்த இளைஞனிடம் இதுகுறித்து விசாரித்தேன்.
முதலில் முரண்டு பிடித்தவன், 'அரசு அதிகாரி...' என்று மிரட்டியதும், 'வியாபாரமாகும், 100 லிட்டர் எண்ணெயில், 10- - 15 லிட்டர் தான் செக்கு எண்ணெய்; மீதியெல்லாம் தனியார் எண்ணெய் கம்பெனிகளிடமிருந்து வாங்கி, செக்கு எண்ணெயுடன் கலந்து, நல்ல லாபத்தில் விற்பனை செய்கின்றனர்...' என்ற உண்மையை கூறினான்.
பொது மக்களின் செக்கு எண்ணெய் ஆர்வத்தை மூலதனமாக்கி, காளான்கள் போல முளைத்திருக்கும் இது போன்ற, போலி செக்கு எண்ணெய் விற்பனையாளர்களை அடையாளம் காணுங்கள். தரமான செக்கு எண்ணெய் வாங்க விரும்புவோர், தீர விசாரித்து முடிவு எடுப்பது நல்லது.
— சோ.குமார. நாகேந்திரன், மதுரை.
திருநங்கையருக்கு வாய்ப்பு கொடுங்கள்!
கடந்த ஆண்டு, எங்கள் ஊரின் ஒரு பகுதியில் நடந்த தைப்பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள, திருநங்கையருக்கும் வாய்ப்பு கொடுத்தனர்.
சோடா பாட்டிலில் நீரை நிரப்புதல், கோலப்போட்டி, மியூசிக் சேர், பாட்டுப் போட்டி மற்றும் வினாடி வினா போன்ற போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று, பல பரிசுகளை வென்றனர், திருநங்கையர்.
மற்றவர்களுக்கு நிகராக தங்களையும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்ததற்கு கண்ணீர் மல்க நன்றி கூறினர்.
'நாங்களும் மனிதர்கள் தான் என்பதை இன்று தான் மனதார உணர்ந்தோம்...' என, அவர்கள் பெருமை பொங்க கூறினர்.
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடியதால் அவர்களது மன இறுக்கம் தளர்ந்து, மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததை காண முடிந்தது. விளையாட்டு விழா பொறுப்பாளரையும், அனைவரும் பாராட்டினர்.
இதுபோல் உங்கள் ஊரில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில், திருநங்கையரும் பங்கேற்கும் வாய்ப்பை அளித்து, அவர்களையும் மனம் மலரச் செய்யலாமே!
பொன்சரவணகுரு, செங்கோட்டை.
ரயில் தண்டவாளத்தில்...
நண்பர் ஒருவருடன் அரசியல், சினிமா சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, பொது அறிவு குறித்து பேசிய போது, அவர் கூறிய விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
'ஆளில்லா, 'லெவல் கிராசிங்' மற்றும் ரயில்வே கேட் அருகே ரயில் வரும் நேரத்தில், நல்ல நிலையில் உள்ள ஆட்டோ, ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்கள், தண்டவாளத்தை கடக்கின்றன. அப்போது, திடீரென நின்று, அதன் இயக்கம் முழுவதும் செயல் இழந்து விடுவதற்கான காரணம் தெரியுமா?' என்றார்.
'தெரியாது...' என்றேன்.
'அதாவது, துாரத்தில் ரயில் வரும் போது, தண்டவாளத்தை கடக்க வாகனங்கள் முயற்சி செய்தால், எந்த புது வாகனமாக இருந்தாலும், அதில் உள்ள என்ஜின் பகுதி, தண்டவாளத்தில் உள்ள காந்த விசையால் ஈர்க்கப்பட்டு செயலிழந்து, வாகனத்தை நிறுத்தி விடும்.
'காந்த விசை இழுத்துப் பிடித்துக் கொள்வதால், மறுபடியும், 'ஸ்டார்ட்' ஆகாது. அதாவது, என்ஜின் இயங்காது. இந்த விபரம் நிறைய டிரைவர்களுக்கு தெரிவதில்லை. அதனால் தான், 'லெவல் கிராசிங் கேட்'டில் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன...' என்றார்.
எனவே, ஆட்டோ, ஷேர் ஆட்டோ போன்ற சிறிய ரக வாகனங்கள், ஆளில்லா லெவல் கிராசிங்கை தாண்டி செல்ல வேண்டுமானால், ரயில் கடந்து சென்ற பின் அல்லது மாற்று வழியை உபயோகிப்பது நல்லது.
— கோ.குப்புசாமி, சங்கராபுரம்

