PUBLISHED ON : ஜன 12, 2025

பொங்கல் பண்டிகையின் மணிமகுடம் போல இருப்பது, ஜல்லிக்கட்டு. இது நம்முடைய பாரம்பரிய விளையாட்டு.
நீலகிரி மாவட்டம் கரிக்கியூர் கிராமத்தில், மக்கள், காளைகளை துரத்துவது போன்ற காட்சிகள், 3,500 ஆண்டுகள் பழமையான கல் வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
மதுரை நகரிலிருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்ள கல்லுாத்து மேட்டுப்பட்டியில், சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கல் பலகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், ஏறுதழுவும் காட்சிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இதிலிருந்தே, ஜல்லிக்கட்டின் பழமையான வரலாறை அறியலாம். மேலும், காளையை அடக்க முயலும் மனிதனைச் சித்தரிக்கும் ஓவியங்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியத்தின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும், கலித்தொகை, மலைபடுகடாம் போன்ற இலக்கியப் படைப்புகளிலும், ஜல்லிக்கட்டு பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஆதிகாலத்தில் பெண்கள், தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்க, ஜல்லிக்கட்டு விளையாட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது. மாட்டை அடக்கி வெற்றி பெறும் வீரர்களை, மணமகன்களாக தேர்வு செய்துள்ளனர், பெண்கள்.
விளையாட்டின் ஒரு பகுதியாக, காளையின் கொம்பில், தங்க காசு முடிச்சு கட்டப்பட்டு, ஓடும் காளையை பிடிப்பவர்கள், வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படும்.
இந்தப் பழக்கம் பிற்காலத்தில் கைவிடப்பட்டு, அதற்குப் பதிலாக, வெற்றிபெறும் வீரர்களுக்கு, கார், பைக், தங்க நாணயம், மொபைல் போன், பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை பரிசாக அளிக்கப்படுகின்றன.
காங்கேயம் காளை, புள்ளிகுளம் காளை ஆகிய இன மாடுகளே, பெரும்பான்மையாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. இந்தக் காளைகள், சிறப்பான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் வளர்க்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு போட்டிகள், தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெறுகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பீளமேடு; சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல், காண்டுபட்டி; புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவாப்பூர், வேடன்பட்டி; சேலம் மாவட்டம் திம்மம்பட்டி; தேனி மாவட்டம் பல்லவரயான்பட்டி ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பிரபலமாக நடத்தப்படுகின்றன.
ல்லிக்கட்டு நடத்தப்படுவது, எந்தக் காளை வலிமையானது என்பதைக் கண்டறிய தான். ஏனெனில், போட்டியில் வெற்றிபெறும் காளைகள், இனப்பெருக்கதிற்குப் பயன்படுத்தப்பட்டு, வலிமையான சந்ததிகள் உருவாக வழிவகுக்கிறது.பசுக்கள், பலமுள்ள காளையுடன் இணைந்து கருவுற்றால், தரமான பால் பெறுவதற்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
எச். சண்முகசுந்தரம்