/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: 12 சூரியன்கள்!
/
விசேஷம் இது வித்தியாசம்: 12 சூரியன்கள்!
PUBLISHED ON : ஜன 12, 2025

உலகுக்கு ஒரே சூரியன் என்பது, நம் கண்ணுக்கு தெரிவது தான். ஆனால், 12 சூரியன்கள் இவ்வுலகில் பிறந்ததாகவும், அவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே சூரியன் ஆனதாகவும், கதை உண்டு. 12 பேருக்கும் தனித்தனியாக பணி பிரிக்கப்பட்டு இருந்ததாகவும், சாம்ப புராணம் கூறுகிறது.
கிருஷ்ணரின் மகன், சாம்பன். இவனது தாய், கரடி அரசனான ஜாம்பவானின் மகள், ஜாம்பவதி.
துர்வாச முனிவரால், சாம்பனுக்கு தொழு நோய் சாபம் ஏற்பட்டது. அது குணமாக, சூரியனை வணங்கும்படி, சாம்பனுக்கு அறிவுறுத்தினார், நாரதர். இவனது வாழ்வையும், சூரியலோகத்தின் சிறப்பையும் விளக்கும் நுாலே, சாம்ப புராணம். இதில், சூரியனின் பிறப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது.
மரீசி முனிவரின் மகனான காஷ்யபருக்கும், தட்சனின் மகளான அதிதிக்கும் திருமணம் நடந்தது. கணவனே கண்கண்ட தெய்வமென வாழ்ந்தாள், அதிதி.
அதிதி கர்ப்பமாக இருந்த சமயத்தில், துறவி ஒருவர் வந்து பிச்சை கேட்க, கணவருக்கு, உணவு பரிமாறிக் கொண்டிருந்தவள், சற்று தாமதமாக வந்து பிச்சையிட்டாள். தன்னை காக்க வைத்த பாவத்துக்காக, 'கரு மிருதம்' ஆகும்படி சாபமிட்டார்.
'மிருதம்' என்றால் மரணம். கரு கலைந்து விடும் என்ற பயத்தில் இருந்த அதிதி, கணவனிடம் இதுபற்றி முறையிட்டாள்; அவர் கலங்கவில்லை.
'மிருத சஞ்சீவினி என்ற சொல்லும், இதிலிருந்து தானே பிறக்கிறது. ஒருவேளை, முனிவர் மரணத்தில் இருந்து விடுதலை பெறட்டும் என சொல்லியிருக்கலாம். கவலைப்படாதே. நீ சுமக்கும் கரு கலைந்தாலும், அது பேரண்டமாய் உருவெடுக்கும்...' என்று ஆறுதல் அளித்தார்.
காஷ்யபர் சொன்னது போலவே, பிரகாசத்துடன், 12 சூரியன்கள் பிறந்தனர். இவர்களை ஆதித்யர்கள் என்றனர். இவர்களை ஒருங்கிணைத்து ஒரே சூரியனாய் வார்த்தார், காஷ்யபர். இருப்பினும், மாதத்துக்கு ஒருவர் வீதம், 12 பேரும் அவரவர் பணிகளை, ஒரே சூரியனுக்குள் இருந்து செய்யும்படி பிரித்துக் கொடுத்தார்.
இதன்படி, இந்திரன் என்பவர், மழைப் பொழிவைக் கவனித்துக் கொண்டார். தாதா என்பவர், சமுதாயம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என விதிகளை வகுத்தார்.
பர்ஜ்ன்யா - பூமி வெப்பமயமாதலை ஒடுக்கி, சம சீதோஷ்ணம் கிடைக்க வழி செய்தார். துவஷ்டா - தாவரங்களின் விளைச்சலைக் கவனித்தார். பூஷா - பயிர்களுக்கு தனித்தனி சுவையைக் கொடுத்தார். ஆர்யமன் - முன்னோர் வழிபாட்டுக்குரிய பணிகளைச் செய்தார்.
பாக் - உயிர்களுக்கு, உருவத்தையும், உறுப்புகளையும் கொடுத்தார். விவஸ்வான் - உண்ணும் உணவைச் செரிக்க வைக்கும் பணியைச் செய்தார். அன்ஷுமான் - காற்றின் வடிவானார். வருணன் - தண்ணீர் எந்தளவுக்கு உயிர்களுக்கு வேண்டும் என்பதை சரிபார்த்துக் கொண்டார்; தவறு செய்தால், உயிர்களை தண்ணீரில் மூழ்கடிக்கும் பணியையும் செய்தார்.
மித்ரா - முனிவர்கள், வேதம் ஓதுவோருக்கு நன்மைகளை வழங்கினார். விஷ்ணு - சூரிய நாராயணராய் வானத்தில் வலம் வந்து, ஒட்டு மொத்த உலகத்தையும் கண்காணித்து வருகிறார்.
பொங்கல் நன்னாளில் இந்த, 12 சூரியன்களையும் மனதில் நினைத்து, உலக உயிர்களுக்கு நன்மை செய்ய வேண்டுவோம்.
தி. செல்லப்பா

