
'சிபில் ஸ்கோரால்' நின்ற நிச்சயதார்த்தம்!
சமீபத்தில், தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பரின் மகள் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.
பெங்களூருவில், ஐ.டி., பணியிலுள்ள வரனுக்கு, பெண்ணை பிடித்து போனதால், நிச்சயதார்த்த விழா ஏற்பாடானது.
ஒரே சகோதரிக்கு திருமணமாகி விட்டது. மேலும், நண்பரின் பெண்ணுக்கு, பெங்களூரில் வேறு நல்ல வேலை வாங்கி தருவதாக உத்திரவாதம் சொன்னதால், நண்பர் வீட்டில் எல்லாருக்கும் பிடித்து போய் விட்டது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வேலைப் பார்த்து ஓய்வு பெற்ற, பெண்ணின் தாய் மாமா, மும்பையிலிருந்து வந்திருந்தார்.
அவருக்கும் பையனை பிடித்து இருந்தாலும், நிச்சயம் செய்வதற்கு முன், வரனின் வேலை மற்றும் சம்பளம் போன்றவற்றை கேட்டு, 'உங்க, 'சிபில் ஸ்கோர்' பார்க்கணும்...' என்றார்.
முதலில் தயங்கிய மாப்பிள்ளை வீட்டார், 'சிபில் ஸ்கோரை' காட்டினர்.
அதைப்பார்த்ததும், அதிர்ச்சி அடைந்தார், தாய் மாமா. வரனின் பெயரில், வெவ்வேறு வங்கிகளில் பல கடன்கள் இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர்.
அவரது சிபில் மதிப்பெண்ணும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது, பணம் திருப்பி செலுத்த முடியாத நிலை மற்றும் நிதி உறுதியற்ற தன்மையைக் குறிக்கிறது என்பதை, தெரிந்து கொண்டார், மாமா.
'ஏற்கனவே, எங்கள் வீட்டு பெண் கஷ்டபட்டு கொண்டிருக்கும் போது, உங்க வீட்டுக்கு வந்து மீண்டும் கஷ்டப்பட வேண்டுமா?' எனக் கூறி, திருமண நிச்சயத்தை நிறுத்தி விட்டார்.
தலை தொங்கியபடியே வெளியேறினர், மாப்பிள்ளை வீட்டார்.
நிச்சயம் அல்லது திருமணம் வெவ்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்படும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், முதல் முறையாக, 'சிபில் ஸ்கோர்' பார்த்து, மாப்பிள்ளை நிராகரிக்கப்படுவதை அறிந்து வியந்தேன்.
இனி திருமணங்களில், இந்த, 'சிபில் ஸ்கோர்' ஒரு காரணியாக மாறப் போவது நிச்சயம்.
பின்குறிப்பு: 'சிபில் ஸ்கோர்' என்பது, தனிநபரின் கடன் தகுதியைக் குறிக்கும், மூன்று இலக்க எண். 700 முதல் 900 வரை இருப்பது நல்லது. கடன் மற்றும் திரும்ப செலுத்துவதில் நீங்கள் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறீர்கள் என்பதை, இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கப்படும் கடன் தொகைக்கு ஏற்ப, இந்த மதிப்பெண் மாறும்.
— ஆனந்த் ஸ்ரீனிவாசன், சென்னை.
இனிப்பான ஐடியா!
சமீபத்தில், என் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றிருந்தேன். அங்கு நடந்த விருந்தில், ஸ்வீட்டையும், வடையையும் சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, இலைக்கு அருகில் வைத்துவிட்டனர்.
இதுபற்றி, சமையல்காரரிடம் விசாரித்ததில், 'இதற்கு முன் நடந்த திருமண விருந்துகளில் இனிப்பை இலையில் தான் பரிமாறி வந்தோம். அப்போது சில பேர் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதாகவும், இனிப்பு வேண்டாம் என்றும் மறுத்து விட்டனர். சில பேர் சொல்ல தயங்கி வீணடித்தும் சென்று விட்டனர்.
'இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழலைத் தவிர்ப்பதற்காக தான், இந்த, 'ஐடியா'வை செய்தோம். இதனால், சாப்பிட இயலாதவர்கள் பலரும் கூச்சமின்றி இனிப்பு டப்பாவை எடுத்து, 'ஹேண்ட் பேகில்' போட்டுக் கொண்டு செல்கின்றனர்...' என்றார்.
சமையல்காரரின் இந்த இனிப்பான, 'ஐடியா' பாராட்டும்படியாக இருந்தது.
எம்.நிர்மலா, புதுச்சேரி.
போலீசாரின் சூப்பர் ஐடியா!
என் உறவினரின் ஊரில், ஆண்டுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். பல்லாயிரக்கணக்கான மக்கள், இந்த திருவிழாவிற்கு வருவர்.
இந்த முறை நானும், நண்பரின் ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு பாதுகாப்பு பணியில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அதில் பெரியவர்களுக்கு தனி வரிசையும், குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மார்களுக்கு தனி வரிசையும் அமைத்திருந்தனர், போலீசார். அதில், குழந்தைகள் வரிசையில், ஒவ்வொரு குழந்தையின் கையிலும், ஒரு அடையாள அட்டையைக் கட்டினர், போலீசார்.
அதில், குழந்தையின் பெயர், வயது, ஊர் மற்றும் பெற்றோரின் போன் நம்பர் போன்றவைகளை எழுதியிருந்தனர். இதுகுறித்து அங்கிருந்த போலீசாரிடம் கேட்டேன்.
அதற்கு அவர், 'இதுபோன்ற திருவிழாக்களில் குழந்தைகள் காணாமல் போய் விடுவது வழக்கம். அவர்களை, 'மைக்'கில் அறிவித்தாலும், பெற்றோர் வர தாமதம் ஆகிறது. அதனால் தான், குழந்தைகளின் கையில், அவர்களை பற்றி முழு விபரங்களை எழுதி ஒட்டி வைத்து விடுவோம்.
ஒருவேளை குழந்தை வழி தவறி வேறு எங்காவது சென்றாலும், கையில் உள்ள அட்டையை பார்த்து, அருகில் இருப்பவர்கள், அதில் உள்ள போன் நம்பருக்கு போன் செய்வர்; குழந்தைகளை, அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க ஏதுவாகவும் இருக்கும். நமக்கும், 'டென்ஷன்' இருக்காது...' என்றார்.
ஒவ்வொரு திருவிழாவிலும் போலீசார் இந்த, 'ஐடியா'வை பின்பற்றலாமே!
— வெ.சென்னப்பன், உதகை, நீலகிரி.