/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: அழுது துடிக்கும் மரம்!
/
கவிதைச்சோலை: அழுது துடிக்கும் மரம்!
PUBLISHED ON : மார் 09, 2025

அதிதியாய் வந்த பறவைக்கு
அடைக்கலம் கொடுத்தது மரம்
அழகாய் கூடமைத்துக்கொள்ள
கொஞ்சம் குச்சிகளையும் தந்தது!
வெயிலில் இளைப்பாறிக் கொள்ள
தன கிளைக் கரங்களால்
தண் குடைப்பிடித்தது!
முட்டைகள் இடுவதற்கு
மென் நரம்புகள் பின்னலிட்ட
சருகுகளை தந்தது!
பொந்துகள் கொத்தி
கதகதப்பாய் வாழ்ந்து கொள்ள
தன் தேகத்தையே கொடுத்தது!
குஞ்சுகள் பொரித்து,
கீச் குரல் கேட்டதும்
பஞ்சு உடையாய் பூக்களையும்
பரிசாய் கனிகளையும் ஈந்தது!
அடை மழைக்கும்
ஆகாயத்தை அசைக்கும் காற்றுக்கும்
அரணாய் காத்து நின்றது!
இறக்கை முளைத்த குஞ்சுகளுடன்
தாய்ப் பறவை
திசை மாறிப் பறந்ததும்...
பிரிவாற்றாமையால்
அழுது துடித்தது மரம்
பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்ட
பெற்றோரைப் போல!
- இ.எஸ். லலிதாமதி, சென்னை